பட்டியலின மற்றும் பழங்குடி மக்கள் வாழ்க்கையில் வளர்ச்சி அடைய வேண்டும் என்னும் நோக்கத்தில் பட்டியல் இனத்தவருக்கான சிறப்பு உட்கூறுத் திட்டம் (1974) மற்றும் பழங்குடியினருக்கான துணைத் திட்டம் (1978) மத்திய அரசால் உருவாக்கப்பட்டது. ஆனால், இது சரியாக நடைமுறைப்படுத்தாமல் இருந்ததன் விளைவாக இந்த திட்டத்துக்கான நிதி மீண்டும் மத்திய அரசுக்குத் திரும்ப அனுப்பப்படுகிறது. அந்த வகையில், தமிழகத்தில் மட்டும் கடந்த ஆறு ஆண்டுகளில் இந்தச் சிறப்புத் திட்டம் மூலம் ஒதுக்கிய ரூ.5,318 கோடி நிதி பயன்படுத்தாமல் திரும்ப அனுப்பப்பட்டிருக்கிறது. எனவே, இதைப் பயன்படுத்தாமல் திருப்பி அனுப்புவதைத் தடுக்கவும், மக்களின் பொருளாதாரம் உயர அதைப் பயன்படுத்த சிறப்புத் திட்டத்தை தமிழக அரசு இயற்ற வேண்டும் என்னும் கோரிக்கையை முன்வைத்தும் சமூக அமைப்புகளின் மாநாடு நடத்தப்பட்டது.
இதில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், தெலங்கானா தலித் பந்து திட்டத்தின் தலைவர் பண்டா சினுவாஸ், ஆதித்தமிழர் பேரவைத் தலைவர் அதியமான், தெலங்கானா தலித் கற்றல் மையத்தின் நிறுவனத் தலைவர் மெல்லப்பள்ளி லட்சுமய்யா, விடுதலைச் சிறுத்தைகள் சட்டமன்ற உறுப்பினர் சிந்தனைச் செல்வன் எனப் பலர் பங்கேற்றனர். இதை இளைஞர்களுக்கான சமூக விழிப்புணர்வு மையம் ஒருங்கிணைத்து நடத்தியது.
இந்த மாநாட்டில் பேசிய நாடாளுமன்ற உறுப்பினர் தொல்.திருமாவளவன், “அரசின் மொத்த வருமானம் எவ்வளவு வருகிறதோ, அதில் குறிப்பிட்ட அளவை பட்டியலின மற்றும் பழங்குடி மக்களின் பொருளாதார வளர்ச்சி நிதிக்காக பயன்படுத்த வேண்டும். அதைப் பொதுவாக சாலை அமைக்க, நீர் தொட்டி அமைக்க, பொதுவாக எல்லோருக்குமான பள்ளி கட்டிவிட்டோம் என அரசு சொல்வதை ஏற்க முடியாது. ஏனென்றால், அது பொதுவாக இருப்பதில்லை. அப்படி அரசு கட்டும் பேருந்து நிறுத்தமானாலும், ஒரு தண்ணீர் தொட்டியானாலும் கூட அது பட்டியலின மக்கள் வாழும் இடங்களுக்கு அருகில் அமைக்கப்படுவதில்லை. தண்ணீர் குழாய் கூட அமைக்க மாட்டார்கள். அப்படி அமைத்தால் அதுவும் துண்டிக்கப்படும். இப்படி இருக்கும் நிலையில் மத்திய பட்டியலின மக்களுக்கு ஒதுக்கும் நிதியை மாற்றுத் திட்டங்களுக்குப் பயன்படுத்துவது சரியானதல்ல.
பட்டியல் இனத்தவருக்கான சிறப்பு உட்கூறுத் திட்டம் மற்றும் பழங்குடியினருக்கான துணைத் திட்டம் மற்றும் வன்கொடுமை தடுப்புச் சட்டம் என அனைத்தும் பட்டியலின மற்றும் பழங்குடி மக்களின் வளர்ச்சியை உறுதிசெய்ய மத்திய அரசு கொண்டுவந்த புரட்சிகர நடவடிக்கை. இது முறையாக நடைமுறைப்படுத்தாத நிலையில் இன்றும் மக்களின் பொருளாதார நிலை கேள்விக்குறியாக இருக்கிறது. தெலங்கானாவில் “தலித் பந்து” திட்டம் வாயிலாக பட்டியலின மக்களைத் தொழில்முனைவர்களாக மாற்றியிருக்கிறார்கள். ஆனால், இங்கு தமிழககத்திலுள்ள அதிகாரிகளுக்கும் கூட வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் இருப்பது பற்றி விழிப்பு உணர்வு இல்லை.
ஆகவே, இதையெல்லாம் துடைத்தெறிய இந்திரா காந்தி அவர்களால் இந்த உட்கூறுத் திட்டம் கொண்டுவரப்பட்டது. ஆனால், அதைச் சரியாக நடைமுறைப்படுத்தாமல் அதன் முகம் மாற்றப்பட்டுவிட்டது. மேலும், பட்டியலின மக்களின் நலனுக்கு உதவும் திட்டங்கள் எதுவும் அரசு அதிகாரிகளுக்குத் தெரிவதில்லை. அதைச் சரிசெய்ய வேண்டும். அப்படி விழிப்பு உணர்வு ஏற்படுத்த பல சமூக அமைப்புகள் பெரும் உதவியாக இருக்கிறது. பட்டியலின மற்றும் பழங்குடி மக்களின் சமூக வளர்ச்சியை உறுதிசெய்ய, தெலங்கானா அரசு இயற்றிய சிறப்புத் திட்டம் தமிழகத்திலும் கொண்டுவர வேண்டும். இதை வரும் சட்டசபை பட்ஜெட் கூட்டத்தில் வலியுறுத்தப்படும். மேலும் இதற்கான மக்கள் போராட்டத்தை முன்னெடுக்க திட்டமிட்டிருக்கிறோம்” எனத் தெரிவித்தார்.
