‘தமிழகத்தில் தமிழில் பெயர் பலகை வைக்காத கடைகள், நிறுவனங்களுக்கு அபராத தொகையை உயர்த்தும் திட்டம் பரிந்துரை பரிசீலனையில் உள்ளது’ என அரசு தரப்பில், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தெரிவிக்கப்பட்டது.
ராமநாதபுரம் மோர்ப்பண்ணையை சேர்ந்த வழக்கறிஞர் தீரன் திருமுகன் என்பவர் தாக்கல் செய்த மனு: தமிழகத்தில் பல வணிக நிறுவனங்கள், பன்னாட்டு நிறுவனங்களின் பெயர் பலகைகளில் தமிழை பயன்படுத்தாமல், ஆங்கிலத்தில் எழுதியுள்ளனர்.
கர்நாடகா உட்பட பல மாநிலங்களில் வணிக நிறுவன பெயர் பலகைகளில், அவரவர் தாய் மொழியே முதன்மையாக இடம் பெற்றுள்ளன.
தமிழகத்தில் அரசு அலுவலக பெயர் பலகைகளில் ஆங்கிலம் பெரிய எழுத்துக்களாகவும், தமிழ் சிறிய எழுத்துக்களாகவும் பயன்படுத்தப்படுகிறது.
தமிழக அரசின் ஆணைப்படி, அனைத்து அரசு அலுவலகங்கள், தனியார் கடைகள், நிறுவனங்களில் தமிழை முதன்மை மொழியாக பயன்படுத்த வேண்டும். இதை முறையாக பின்பற்றுவதில்லை.
தமிழகத்தில் அரசு அலுவலகங்கள், வணிகம் மற்றும் பன்னாட்டு நிறுவனங்களின் பெயர் பலகைகளில் தமிழை முதன்மையாக எழுதியும், பிற மொழிகளை தமிழின் கீழ் பகுதியில் பயன்படுத்தவும் நடவடிக்கை எடுக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும் என உயர்நீதிமன்றத்தில் மனு செய்தேன்.
கடந்த 2017ல் நீதிபதிகள் அமர்வு, அரசாணையை அமல்படுத்த உத்தரவிட்டது. இதை நிறைவேற்றவில்லை.
தமிழ் ஆட்சிமொழி மற்றும் பண்பாட்டுத்துறை முதன்மை செயலர் வெங்கடேசன் மீது நீதிமன்ற அவமதிப்பின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு தீரன் திருமுகன் குறிப்பிட்டார்.
அந்த மனுவை நீதிபதிகள் ஜி.ஜெயச்சந்திரன், ஜி.ஆர்.சுவாமிநாதன் அமர்வு விசாரித்தது.
தமிழக அரசு தரப்பில், ‘தமிழில் பெயர் பலகை வைக்காத கடைகள், நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது. அபராத தொகையை உயர்த்த அரசுக்கு தொழிலாளர் நலத்துறை பரிந்துரைத்துள்ளது. அந்த திட்டம் அரசின் பரிசீலனையில் உள்ளது’ என தெரிவிக்கப்பட்டது.
நீதிபதிகள்: அபராதம் 50 ரூபாய் விதிக்கப்படுகிறது. இதை மிக குறைந்த தொகை என்பதால் எளிதில் செலுத்தி விடுகின்றனர். சட்டத்தை திறம்பட செயல்படுத்த வேண்டும்.
அபராத தொகையை உயர்த்தும் பரிந்துரை மீது மேற்கொண்ட நடவடிக்கை குறித்து அரசு தரப்பில் நான்கு வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டனர்.