தஞ்சை மாவட்டம், பேராவூரணி அருகேயுள்ள மல்லிப்பட்டினத்தில் மஹான் ஹஜரத் ஹொஸ்ஸாலி தங்கள் ஒலியுல்லா அவர்களின் 87 ம் ஆண்டு சந்தனகூடு விழா நடைபெற்றது. இந்த முஸ்லிம் விழாவிற்கு இந்துமதத்தை சேர்ந்த மல்லிப்பட்டினம், கே.ஆர்.காலனி கிராமத்தினர் ,
முதல்மண்டகப்படி செய்வது வழக்கத்தில் உள்ளது. அதேபோல இந்த ஆண்டும் கே.ஆர்.காலனி கோயிலிருந்து கிராம மக்கள் மேளதாளங்கள் முழங்க, குதிரைகளின் கலைநிகழ்ச்சிகளுடன், பழதட்டு சீர்வரிசை எடுத்து ஊர்வலமாக
மல்லிப்பட்டினம் ராமர் கோயில் வந்தடைந்து அங்கு வழிப்பாடு செய்தனர். பின்னர் இரு கிராமத்தினர் ஒன்றுகூடி ஊர்வலமாக, வாணவேடிக்கையுடன் தர்காவை சென்றடைந்தனர். அங்கு இஸ்லாமிய சகோதர்கள் இரு கிராம மக்களையும் அன்போடு வரவேற்று அவர்களுக்கு மரியாதை செலுத்தினர். இந்நிகழ்ச்சி இந்து, இஸ்லாமிய மதத்தினரிடையே ஒற்றுமையையும் சமத்துவத்தையும் எடுத்துகாட்டியது. தர்காவில் கொடியேற்ற நிகழ்ச்சிக்கு முன்பே இஸ்லாமியர்கள் ஒன்றுகூடி மல்லிப்பட்டினம், கே.ஆர்.புரம் கிராமத்தினரை பழதட்டுடன் வந்து திருவிழாவிற்கு அழைப்பதும், அந்த அழைப்பை ஏற்று இந்துமதத்தினர் சீர்வரிசை எடுத்து ஊர்வலமாக சென்று திருவிழாவில் கலந்துகொள்வதும் பார்ப்பவர்களை ஆச்சரியப்படவும், சிந்திக்கவும் வைக்கிறது. இந்நிகழ்ச்சியில் மக்கள் சட்ட உரிமைகள் கழக மாவட்ட ஒருங்கிணைப்பாளர்,இ.குருசேவ்,
கிராமதலைவர் முருகன், செயலாளர் குணசேகரன், பொருளாளர்கள் ரெங்கராஜ், இளஞ்சேகரன், வடுகநாதன், ஜீ.சுப்பிரமணியன், பெரியசாமி, பெரிய்யா, சந்திரசேகரன், நாட்டு படகு சங்க தலைவர், இ.சாமியப்பன், ஒன்றிய குழு உறுப்பினர் மீனவராஜன் உள்ளிட்ட கிராமத்தினர் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்பு கடலில் ஆண் சடலம் கரை ஒதுங்கியதை கண்ட இந்துமதத்தினர் அவரை எடுத்து அடக்கம் செய்தனர். அவர் இஸ்லாமியர்கள் கனவில் தோன்றி அவரை வழிப்படுமாறு கேட்டுகொண்டதால் கீற்றுக்கொட்டகை அமைத்து வழிப்பட்டு வந்துள்ளதாகவும், காலபோக்கில் ஓட்டு கட்டிடம் அமைத்து வழிப்பட்டதாகவும், தற்போது கட்டிடம் கட்டி தர்காவாக வழிப்பட்டு வருவதாகவும் பெரியவர்கள் கூறுகின்றனர்.
87 ஆண்டுகாலமாக கொண்டாடப்பட்டுவரும் இந்த சந்தனகூடு விழாவிற்கு முதல்மண்டகப்படியை மல்லிப்பட்டினம், கே.ஆர்.காலனி கிராமத்தினர் தொடர்ந்து செய்து வருவது குறிப்பிடதக்கது. இஸ்லாமியர்கள், இந்துகள் இணைந்து கொண்டாடும் இந்த சந்தனகூடு விழா சமத்துவ விழாவாக அமைந்து வருகிறது.