தான் பார்த்ததை ஜானிடம் தெரிவிக்க வேண்டும் என்று எண்ணி உடனடியாக தனது வழக்கமான கைபேசி எடுத்து ஜானுக்கு போன் செய்தார் முத்து. ஆனால் இரண்டு மணி ஒலித்ததுமே “ஐ எம் இன் சர்ச். ப்ளீஸ் கால் மீ லேட்டர்” என்று ஜானின் எண்ணில் இருந்து குறுஞ்செய்தி வந்து அடைந்தது. ஜானை உடனடியாக சந்திக்க வேண்டும் என்று எண்ணிய முத்து ஜான் எந்த தேவாலயத்தில் இருக்கிறார் என்று அறிந்து கொள்ள ஜானின் எண்ணிற்கு மீண்டும் மீண்டும் முயற்சித்தார். தான் தேவாலயத்தில் இருப்பதாக அறிவித்தும் முத்து அழைக்கிறார் என்றால் ஏதேனும் முக்கியமான விஷயம் மட்டும் இருக்கும் என்று அறிந்து கொண்ட ஜான் தன் மனைவியிடம் கண்ணால் சைகை காட்டிவிட்டு பிரார்த்தனை அறைக்கு வெளியே வந்தார். அதற்குள் மீண்டும் இருமுறை முத்துவின் அழைப்பு தவறவிட்ட அழைப்பு பட்டியலில் சேர்ந்தது.
ஏதோ வழக்கத்திற்கு மாறாக இருக்கிறது என்று எண்ணிய ஜான் முத்துவின் எண்ணை அழைப்பதற்குள் மீண்டும் ஒரு முறை முத்துவின் அழைப்பு வந்தது. சற்றும் தாமதிக்காமல் உடனே அழைப்பை ஏற்ற ஜான் “என்ன முத்து என்ன ஆச்சு” என்றார். மறுபடியும் பேசிய முத்து “ஜான் சார் உடனடியாக நான் உங்கள பாக்கணும் எங்க இருக்கீங்க” என்றார்.
“நான் தான் சொன்னேனே முத்து சர்ச்சில் இருக்கிறேன்” என்று கூறிய ஜானிடம், முத்து “அதான் சார். எந்த சர்ச்சில் இருக்கிறீர்கள் என்பது தான் நான் அப்படி கேட்டேன்” என்றார். “எப்போதும் வழக்கமா போற என் வீட்டுக்கு பக்கத்துல உள்ள சர்ச் தான் முத்து, அது சரி என்ன விஷயம்” என்று கேட்ட ஜானிடம், முத்து “தொந்தரவுக்கு மன்னிக்கணும் விஷயம் என்னங்கறத நேர்ல பேசுவோம் நீங்க போய் பிரார்த்தனையில் கலந்துக்குங்க, பிரார்த்தனை முடிவதற்குள் நான் அங்கு வந்து விடுவேன். உங்களை அங்கு வந்து சந்திக்கிறேன்” என்று கூறிவிட்டு அழைப்பை துண்டித்தார்.
முத்துவின் அழைப்பை கேட்டு மனக்குழப்பம் ஏற்படாமல் எந்த செய்தியாக இருந்தாலும் அவர் வந்த பிறகு தெரிய தான் போகிறது. அதற்குள் கண்டதை நினைத்து குழம்புவதாலையோ கவலைப்படுவதாலையோ எந்த பயனும் இல்லை என்று அறிந்திருந்த ஜான் சற்றும் மனச்சலனம் இல்லாமல் பிரார்த்தனைக் கூட்டத்தில் தொடர்ந்து பங்கு கொள்ள மீண்டும் தேவாலயத்திற்குள் நுழைந்தார். பாதிரியாரின் பிரசங்க குரலை தவிர வேறு எந்தவித சத்தமும் இல்லாமல் மிகவும் அமைதியாக அனைவரும் கண்களை மூடி பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்தனர். அந்த அமைதிக்கு எந்த விதமான இடையூறும் ஏற்படா வண்ணம் ஜானும் தனது அதீத கவனத்துடன் எந்தவித சத்தமும் இன்றி மீண்டும் தனது இருக்கையில் சென்று அமர்ந்து மண்டியிட்டார். ஆனால் ஜானின் அமைதி அவரது மனைவி கிறிஸ்டினாவிடம் இல்லை. சற்றுமுன் வரை கண்ணீர் மல்க ஆழமான பிராத்தனையில் ஈடுபட்டிருந்த தன் கணவர் திடீரென்று பிரார்த்தனை கூட்டத்தில் நடுவில் வெளியே செல்லும் அவசியம் ஏற்பட்டதன் காரணம் என்னவாக இருக்கும் என்று குழம்பத் தொடங்கினார். அனைத்துமே காலை முதல் வழக்கத்திற்கு மாறாக நடப்பது கிறிஸ்டினாவிற்கு மிகவும் கவலையை ஏற்படுத்தியிருந்தது.
மறுமுனையில் உணவருந்த கிளம்பிய முத்து பசியையும், உணவையும் மறந்து அந்த தனித்துவமான பேனா மற்றும் கைபேசி ஆகியவற்றை கையில் எடுத்துக்கொண்டு ஜானின் வீட்டருகே இருந்த தேவாலயத்தை நோக்கி விரைந்து கொண்டு இருந்தார்.
சற்று முன் வரை தன் கணவரின் மன அமைதிக்காக பிரார்த்தனை செய்த கிறிஸ்டினா தற்போது தன் கணவருக்கு எந்த விதத்திலும் கஷ்டங்கள் வரக்கூடாது என்றும் தனக்கு ஏற்பட்டிருக்கும் மனக்குழப்பங்களை போக்கி தெளிவு பெற வழி செய்ய வேண்டும் என்றும் கடவுளிடம் பிரார்த்தனை செய்தார்.
முத்துவின் வேகம் பிரார்த்தனை கூட்டம் முடியும் முன்பே அவரை தேவாலயத்தின் முன் நிறுத்தியது. இருப்பினும் ஜானை ஏற்கனவே ஒரு முறை பிரார்த்தனையின் நடுவில் தொந்தரவு செய்து விட்டதன் காரணத்தினால் குற்ற உணர்ச்சியில் பிரார்த்தனைக் கூட்டம் முடிந்து ஜான் வெளியே வரும் வரை காத்திருக்க வேண்டும் என்று முடிவு செய்து தேவாலயத்தின் வெளியே ஜானுக்காக காத்துக் கொண்டிருந்தார் முத்து. முத்துவிற்கு கடவுள் நம்பிக்கை இருந்தாலும் பெரிய அளவில் மத நம்பிக்கை இல்லை. ஆனால் அதே நேரத்தில் மற்றவர்களின் மத நம்பிக்கையில் எந்த வகையிலும் தலையிடக்கூடாது என்ற கொள்கையை கண்டிப்பாக கடைப்பிடிப்பவர்.
சற்று நேரத்தில் பிரார்த்தனை முடிந்து மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக தேவாலயத்துக்கு வெளியே வர ஆரம்பித்தனர். வெளிய காத்துக் கொண்டிருந்த முத்து, ஜானை தேடி தேவாலயத்திற்குள் நுழைந்தார். ஜான் தேடப்படுவதற்கு அவசியம் இல்லாமல் எவர் கண்ணிலும் படும்படி தேவாலயத்திற்கு நடுவே அமைந்திருந்த மேடையின் அருகே நின்று பாதிரியாருடன் பேசிக் கொண்டிருந்தார் அருகே கிறிஸ்டினாவும் நின்று கொண்டிருந்தார்.கிறிஸ்டினாவை பார்த்தவுடன் தான் முத்துவிற்கு எதார்த்தம் தெளிந்தது. தான் அந்த தனித்துவமான கைபேசியில் பார்த்த அந்த முக்கியமான தகவலை ஜானிடம் எப்படியாவது பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற முனைப்பில் கிறிஸ்டினா முத்துவின் சிந்தனையில் வரவே இல்லை. இருப்பினும் ஜானை எப்படியாவது தனியாக சந்தித்து அந்த தகவலை தெரிவித்து விட வேண்டும் என்று முடிவுடன் இருந்தார். கிறிஸ்டினா உடன் இருக்கும் போது எந்த விஷயத்தையும் பகிர்ந்து கொள்ள முடியாது என்பதால் ஜான் தேவாலயத்தை விட்டு வெளியே வந்த பிறகு எப்படியாவது தெரிவித்து விடலாம் என்று எண்ணி மேலும் தேவாலயத்திற்குள் நுழையாமல் திரும்பினார் முத்து.
ஒரு வழியாக ஜானும் கிறிஸ்டினாவும் தேவாலயத்திற்கு வெளியே வந்தனர். கண்களில் வழிந்தோடும் கண்ணீரை துடைப்பதற்காக கிறிஸ்டினா தனது கைகுட்டையை எடுக்க திரும்பும் போது முத்துவை பார்த்தார். முத்துவின் கண்களிலும் கிறிஸ்டினாவின் கண்ணீர் தென்பட்டது.
“வாங்கண்ணே எப்படி இருக்கீங்க? பார்த்து எத்தனை வருஷங்கள் ஆகுது! எப்போ வந்தீங்க? வீட்ல எல்லாரும் எப்படி இருக்காங்க?” என்று அடுக்கடுக்காக கேள்விகளை தொடுத்தார் கிறிஸ்டினா. “எனக்கு என்னம்மா நான் நல்லாத்தான் இருக்கேன் நீங்க எப்படி இருக்கீங்க? இது என்ன புதுசா கண்ணீர் எல்லாம், என்னமா பிரச்சனை? என்றார் முத்து.
“பின்ன என்னண்ணே இவர் வி.ஆர்.எஸ் வாங்குனது கூட என்கிட்ட சொல்லாம…. இவர் கூட வேலை பார்த்தவங்க வந்து சொல்லி எனக்கு தெரிய வேண்டி இருக்கிறது.இது எல்லம் சரியா? நீங்கலே கேளுங்க” என்று கிறிஸ்டினா கூறியதும் குழப்பத்திலும், பசியின் மயக்கத்திலும் படபடத்து வியர்த்து நனைந்தார் முத்து.
(தொடரும்…)