சென்னை குறு, சிறு மற்றும் நடுத்தர தொழிலாளர்கள் வளர்ச்சி அலுவலகம் சார்பில் தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மாநில மன்றம் இணைந்து அறிவுசார் சொத்து உரிமை பற்றிய இரண்டு நாள் விழிப்புணர்வு நிகழ்ச்சி சென்னை தியாகராய நகரில் உள்ள ஒரு தனியார் அரங்கில் நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் சென்னை குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் வளர்ச்சி அலுவலகத்தின் இணை இயக்குனர் திரு எஸ் சுரேஷ் பாபுஜி அவர்களும் சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மாநில மன்றத்தின் செயலாளர் டாக்டர் திரு ஸ்ரீனிவாசன் அவர்களும் மற்றும் பல துறை அதிகாரிகள் பங்கு எடுத்துக்கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் வருங்கால தொழில் முனைவோர், கல்லூரி மாணவர்கள், தொழிலதிபர்கள் என சுமார் நூற்றுக்கு மேற்பட்ட பங்கேற்பாளர்கள் பங்கெடுத்துக் கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் அறிவு சார்ந்த சொத்துரிமை காப்புரிமை புவிசார் குறியீடு போன்ற பல்வேறு தலைப்புகளில் துறை ரீதியான அதிகாரிகள் கலந்து கொண்டு இவற்றின் முக்கியத்துவம் பற்றியும் பதிவு முறைக்காண வழிமுறைகளையும் விளக்கி கூறினர். மேலும் பங்கேற்பாளர்களின் சந்தேகங்களுக்கு விடை அளித்து விழிப்புணர்வு செய்தனர். இந்த நிகழ்ச்சியில் சமீபத்தில் புவிசார் குறியீடு பெற்ற கொடைக்கானல் மலைப்பூண்டு விற்பனைக்காக காட்சிப்படுத்தப்பட்டது. மேலும் காஞ்சிபுரம் பட்டு சேலை தஞ்சை கைவினைப் பொருட்கள் கோவில்பட்டி கடலை மிட்டாய் போன்றவைகளும் காட்சிப்படுத்தப்பட்டது. இதை பங்கேற்பாளர்கள் ஆர்வத்தோடு கண்டுகளித்ததோடு அல்லாமல் பொருட்களை வாங்கியும் சென்றனர்.
இந்த நிகழ்ச்சியில் இளைய தலைமுறை பலர் பங்கெடுத்து கொண்டனர். மேலும் சம்பந்தப்பட்ட துறைகளில் நிபுணத்துவம் பெற்ற வெளிநாட்டு அறிஞர்கள் இருவர் இரண்டு நாட்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களுடன் வீடியோ கான்பரன்சிங் முறையில் நேரடியாக வகுப்புகள் எடுத்ததோடு பங்கேற்பாளர்களின் சந்தேகங்களுக்கும் பதில் அளித்தனர்.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கல்லூரி மாணவர்கள் இது போன்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மேலும் பல நடத்தப்பட வேண்டுமென்றும், தற்போது ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த நிகழ்ச்சி தங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்தது எனவும், மாணவர்களிடையே ஆராய்ச்சி துறையில் பல புதிய முயற்சிகளை மேற்கொள்ள ஊக்குவிக்கும் என்றும் கூறி இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்ததற்கு நன்றிகளை தெரிவித்துக் கொண்டனர்.