மாநகராட்சி அலுவலகம் பக்கம் போகாமல் வரி செலுத்துவது மற்றும் புகார் அளிக்க க்யூ ஆர் ஸ்கேன் கோடு’ முறையை தமிழ்நாடு அரசு அறிமுகப்படுத்தி உள்ளது. முதற்கட்டமாக தஞ்சையில் வீடு வீடாக க்யூ ஆர் கோடு ஒட்டும் பணி துவங்கி உள்ளது. மாநகராட்சி எல்லைக்குள் வசிக்கும் மக்கள் தங்களது சொத்து, குடிநீர் உள்ளிட்ட வரிகள் செலுத்துவதற்கும் மற்றும் அடிப்படை வசதிகள் தொடர்பான புகார்களை அளிப்பதற்கும் மாநகராட்சி அலுவலகத்துக்கு செல்ல வேண்டி இருந்தது.
தற்போது, மாநகராட்சி இணையதளங்களில் புகார் மனுக்களையும், வரிகளையும் செலுத்தி வருகின்றனர். இருப்பினும், சர்வர் பிரச்னை உள்ளிட்ட காரணங்களால் வரி செலுத்துவதிலும், புகார்கள் அளிப்பதிலும் பல்வேறு குளறுபடிகள் எழுந்தன. தற்போது ஏற்பட்ட தொழில்நுட்ப வளர்ச்சியால் அடிதட்டு மக்களும் டிஜிட்டல் மயத்தை நோக்கி நகர்ந்து வருகின்றனர். ஒரு நிறுவனத்தை பற்றி அறியவோ அல்லது ஓட்டலில் உள்ள மெனுவை அறிந்து கொள்ளவோ அல்லது பணம் செலுத்தவோ என எதை எடுத்தாலும் இன்று `க்யூ ஆர் கோடு’ இருந்தால் போதும். அதை ஸ்கேன் செய்தால் நமக்கு தேவையான தகவல்கள் கிடைத்து விடுகிறது.
இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பொதுமக்கள் எளிய முறையில், வீட்டில் இருந்தபடியே சொத்து வரி, குடிநீர் வரி போன்ற பல்வேறு வரி இனங்களை செலுத்துவதற்கும், அடிப்படை வசதிகள் குறித்து புகார் அளிக்கவும் ‘க்யூ ஆர் கோடு’ என்ற எளிய முறையை தமிழ்நாடு அரசு கொண்டுவந்துள்ளது. இது பொதுமக்களுக்கு கிடைத்த ஒரு வரப்பிரசாதம். இந்த க்யூ ஆர் கோடில் வீட்டின் உரிமையாளர் முகவரி மற்றும் அவரது செல்போன் அனைத்தும் பதிவாகி இருக்கும். எனவே, மாநகராட்சி பகுதிகளில் வரி இனங்களை பொதுமக்கள் எவ்வித சிரமமும் இன்றி செலுத்தலாம். இவை அனைத்தும் சென்னை தலைமை செயலகத்தில் இருந்து கண்காணிக்கப்படும்.
முதற்கட்டமாக பரீட்சார்த்த அடிப்படையில் தஞ்சாவூர் மாநகராட்சி பகுதியில் ஒவ்வொரு வீடுகளிலும் டிஜிட்டல் ‘க்யூ ஆர் கோடு’ ஸ்டிக்கர் ஒட்டும் பணி துவங்கியுள்ளது.
அதன்படி, மெடிக்கல் காலேஜ் அருகே உள்ள 47வது வார்டு கூட்டுறவு காலனியில் முதல் கட்டமாக ‘க்யூ ஆர் கோடு’ ஒட்டும் பணியை மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன் தொடங்கி வைத்தார். இதுகுறித்து மேயர் சண்.ராமநாதன் கூறுகையில், ‘முதற்கட்டமாக பரீட்சார்த்த அடிப்படையில் இந்த கியூ ஆர் கோடு மூலம் தஞ்சாவூர் மாநகராட்சியில் பொதுமக்கள் தங்கள் பகுதியில் சொத்து வரி, குடிநீர் வரி, கடை வாடகை, வீட்டு வரிகளை வீட்டில் இருந்தபடியே செலுத்த முடியும். கழிவுநீர் வாய்க்கால் அடைப்பு உள்ளிட்ட பல்வேறு புகார்களையும் அலுவலகத்திற்கு செல்லாமல் வீட்டில் இருந்தபடியே செய்யமுடியும்.
இது தஞ்சாவூர் மாநகராட்சி மற்றும் சென்னை தலைமை செயலகத்தில் கண்காணிக்கும்படி அமைக்கப்பட்டுள்ளது. உரிமம் பெறுவதற்கும், உரிமம் புதுப்பிப்பதற்கும் ஏற்படும் காலதாமதத்தை கருத்தில் கொண்டு க்யூ ஆர் கோடு ஸ்கேன் செய்வதன் மூலமாக உடனடியாக சேவைகளை பெறுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதை நடைமுறைப்படுத்தும் வகையில் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள வீடுகளில் க்யூ ஆர் கோடு ஸ்டிக்கர் ஒட்டும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தஞ்சாவூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 51 வார்டுகளிலும் ஒரு மாதத்திற்குள் இந்த பணிகள் முடிக்கப்படும்’ என்றார்.