‘தமிழ்நாட்டில் பேப்பர் இல்லா நீதிமன்றங்களாக மாறப்போகிறது. இனிமேல் வாய்தா கேட்க முடியாது. வாய்தா வாங்கும் நிலையும் இருக்காது’ என்று சென்னை உயர்நீதிமன்ற (பொ) தலைமை நீதிபதி ராஜா தெரிவித்தார்.
புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் சார்பு நீதிமன்றம், பொன்னமராவதி மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்றம், கறம்பக்குடி உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் ஆகியவற்றை, சட்டத்துறை அமைச்சர் ரகுபதி முன்னிலையில் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி (பொ) ராஜா, நேற்று திறந்து வைத்தார்.
அப்போது அவர் பேசியதாவது: இந்தியாவில் 4 கோடிக்கும் மேற்பட்ட வழக்குகள் தற்பொழுது நிலுவையில் இருக்கிறது. இதன்மூலம் உரிய நீதி கிடைப்பதற்கு 10 முதல் 15 வருடம் காலதாமதம் ஏற்படுகிறது. இதை குறைப்பதற்கு அனைத்து வழக்கறிஞர்களும் சுருக்கமாக, தெளிவாக, தங்களது வழக்குகளை கையாள வேண்டும். இரண்டு, மூன்று ஆண்டுகளில் மிகப்பெரிய புரட்சி சீர்திருத்தங்கள் நடக்கவுள்ளது. பேப்பர் இல்லா நீதிமன்றங்களாக மாறப்போகிறது. அப்படி வந்து விட்டால், படித்து பார்க்க தாமதமாகும் என்று கூறி வாய்தா கேட்க முடியாது. வாய்தா வாங்கும் நிலை எல்லாம் இருக்காது.
நீதிமன்றத்தில் 100 வழக்கறிஞர்கள் இருந்தால், 90 வழக்கறிஞர்கள் அமைதியாக தெளிவாக பேசுகின்றனர். நீதிபதி கேட்கும் கேள்விக்கு ஒழுங்காக பதில் சொல்கின்றனர். ஆனால் 10 வழக்கறிஞர்கள், நீதிபதி கேட்கும் கேள்விகளுக்கு முறையாக பதில் அளிக்காமல் கோபப்படுகின்றனர். நீதிபதியிடம் கோபப்பட்டால் வழக்கறிஞர்களால் எதுவும் சாதிக்க முடியாது. வழக்கறிஞர்களுக்கு அஸ்திவாரம் எது என்றால் நீதிபதி. கஷ்டமான கேள்விகளை கேட்டாலும் கோபப்படாமல் பதில் சொல்லும் வழக்கறிஞர்கள் மிகப்பெரிய இடத்திற்கு உயர்வார்கள். வழக்கறிஞர்கள் இல்லத்தில் கோபப்படாமல் இருந்தால் நீதிமன்றத்திலும், நீதிபதிகள் கேட்கும் கேள்விகளுக்கு கோபப்படாமல் பதிலளிக்க முடியும். இவ்வாறு அவர் பேசினார்.