தாம்பரம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில், ஒரே நாளில், 400 விண்ணப்பங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்ட விவகாரத்தில், மோட்டார் வாகன ஆய்வாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
சென்னை புறநகர், தாம்பரம் வட்டார போக்கு வரத்து அலுவலகத்தில், மார்ச், 29ம் தேதி ஓட்டுநர் பயிற்சி 100 விண்ணப்பம், புதிய வாகன பதிவு- 200, வாகன தகுதிச் சான்று – 35, எல்எல்ஆர்- 40, பேட்ஜ் – 15, ரிவேல்யூ-10 ஆகிய விண்ணப்பங்களை ஒரே நாளில் அனுமதி வழங்கியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக ஏராளமான புகார்கள் போக்குவரத்து ஆணையருக்கு சென்றது.
இதையடுத்து, போக்குவரத்து கமிஷனர் நிர்மல்ராஜ், கூடுதல் கமிஷனர் மணக்குமார் ஆகியோர், தாம்பரம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில், மார்ச், 30ல் ஆய்வு நடத்தினர். அப்போது, ஏராளமான ஆவணங்களை சேகரித்து சென்றனர்.
இதன் எதிரொலியாக, வட்டார போக்குவரத்து அலுவலர் செந்தில் வேலன், பணியிலிருந்து உடனடியாக விடுவிக்கப்பட்டார். அவரது இடத்திற்கு, சோழிங்கநல்லுார் வட்டார போக்குவரத்து அலுவலர் யுவராஜ், கூடுதல் பொறுப்பு அலுவலராக நியமிக்கப்பட்டார்.
தொடர்ந்து, ஒரே நாளில், 400 விண்ணப்பங்களுக்கு அனுமதி வழங்கியதற்காக, மோட்டார் வாகன ஆய்வாளர் சோமசுந்தரம், நேற்று முன்தினம் பணியிடை நீக்கம் செய்யபட்டார்.
கே.கே., நகர் வட்டார போக்குவரத்து அமலாக்க பிரிவில் பணியாற்றி வந்த கார்த்திக் என்பவர், தாம்பரம் வட்டார போக்குவரத்து அலுவலக மோட்டார் வாகன ஆய்வாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் போக்குவரத்து வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே தமிழகம் முழுவதும் அனைத்து வட்டார போக்குவரத்து அலுவலகத்திலும் ஓட்டுநர் உரிமம் இதுவரை எவ்வளவு வழங்கப்பட்டுள்ளது என்பது குறித்தும் தினமும் எத்தனை வழங்கப்பட்டுள்ளது என்பது குறித்தும் அறிக்கை தர ஆணையர் சார்பில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.