நான் அன்னமிடுகிறேன்..
நீ நஞ்சை இடுகிறாயே ..
நான் நீர் சுரக்கிறேன்..
நீ கழிவைக் கொட்டுகிறாயே..
நான் உறைவிடம் தருகிறேன்..
நீ நெகிழியால் நிரப்புகிறாயே..
நான் வனங்கள் தருகிறேன்..
நீ நவீனத்தால் வெட்டுகிறாயே..
நான் மூச்சுக்காற்று தருகிறேன்..
நீ புகையைத் தருகிறாயே..
நான் மழை வருவிக்கிறேன்..
நீ கடலில் வீணடிக்கிறாயே..
நான் வெட்பம் வாங்கித் தருகிறேன்..
நீ குளிர் வேண்டுகிறாயே..
நான் குளிர் தருகிறேன்..
நீ கதவை அடைக்கிறாயே..
நான் இரவு தருகிறேன்..
நீ வெளிச்சம் தேடுகிறாயே…
நான் வெளிச்சம் தருகிறேன்..
நீ கண்களை மூடுகிறாயே..
நான் கருணை கேட்கிறேன் ..
நீ கத்தியைத் தருகிறாயே..
நான் அன்பு வேண்டுகிறேன்..
நீ வன்முறை அளிக்கிறாயே..
நான் நீதி வேண்டுகிறேன்..
நீ நிலுவை வழங்குகிறாயே..
நான் மாற்றம் வேண்டுகிறேன்..
நீ ஏமாற்றம் அளிக்கிறாயே..
நான் அறம் விழைகிறேன்..
நீ வார்த்தையில் மட்டும் வர்ணிக்கிறாயே..
நான் இயற்கைக்கு அழைக்கிறேன்..
நீ இயலாது என்கிறாயே..
நான் மனசாட்சி வேண்டுகிறேன்..
நீ புவிதினம் மட்டுமே அனுசரிக்கிறாயே..
நான் எச்சரிக்கிறேன்..
நீ கடந்து செல்கிறாயே..
இனியும் நீ காலம் கடத்தினால்
மனிதனே என்னிடம் வேறு வழி உளதோ
நான் நீயாக மாறுவதைத் தவிர!!
அஞ்சாதே! இனியாவது உன் செய்கைகளால்
மாற்றத்திற்கு நல்வித்திடு உன்னில்
வரும் சந்ததி தழைத்து வளர்ந்திடும் என்னில்!!
– மீனாட்சி வெங்கடேஷ்