திருவண்ணாமலை மாவட்ட ஏடிஎம் கொள்ளை வழக்கில் மேலும் ஒருவரை கைது செய்து, ரூ.15 லட்சத்தை தனிப்படை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.
திருவண்ணாமலை, கலசப்பாக்கம் மற்றும் போளூரில் உள்ள 4 ஏடிஎம் மையங்களில் கடந்த பிப்ரவரி மாதம் 12-ம் தேதி ரூ.73 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டது. காஸ் வெல்டிங் பயன்படுத்தி, ஏடிஎம் இயந்திரத்தை பெயர்த்து ஹரியானா மாநிலம் மேவாத் பகுதியைச் சேர்ந்த கொள்ளையர்கள், பணத்தை கொள்ளையடித்து சென்றனர். இந்தச் சம்பவம் தொடர்பாக, நான்கு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
கொள்ளையர்களை பிடிக்க 9 தனிப்படை அமைக்கப்பட்டது. இதில் ஹரியாணா மாநிலம் முகமது ஆரிப், ஆசாத், கர்நாடக மாநிலம் குதரத் பாஷா, நிஜாமுதீன், அசாம் மாநிலம் அப்சர் ஹுசேன், ராஜஸ்தான் மாநிலம் சிராஜுதீன் உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடம் இருந்து ரூ.5 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் பலர் தேடப்பட்டு வந்தனர்.
இந்நிலையில், ஏடிஎம் கொள்ளையில் ஈடுபட்ட முக்கிய நபரான ஹரியாணா மாநிலம் நூமேவாத் மாவட்டம், பாதஸ் கிராமத்தைச் சேர்ந்த ஜாகீர் உசேகன் மகன் ஆசிப் ஜாவேத் (30) என்பவரை, ஹரியாணா – ராஜஸ்தான் மாநில எல்லை பகுதியில், தவுரு காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட ஆரவல்லி மலை பகுதியில் பதுங்கி இருந்தவரை துப்பாக்கி முனையில் தனிப்படை காவல் துறையினர் கைது செய்தனர். அவரிடம் இருந்து ரூ.15 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இவரை, மேவாத் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு, தமிழகம் அழைத்து வரப்பட்டு, வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
திருவண்ணாமலை மாவட்ட காவல் துறையை உலுக்கிய ஏடிஎம் கொள்ளை வழக்கில், இதுவரை 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து 3 கார்கள், ஒரு கண்டெய்னர் லாரி மற்றும் ரூ.20 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் சிறப்பாக பணியாற்றி கொள்ளை கும்பலை கைது செய்துள்ள தனிப்படைக்கு டிஜிபி சைலேந்திர பாபு, ரூ.1 லட்சம் வெகுமதி வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.