கோவை மாநகரில் சாலை விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர், கொலை, பாலியல் மற்றும் இதர உடல்ரீதியான வன்முறை குற்றங்களில் பாதிக்கப்பட்ட நபர்கள் மற்றும் அவர்கள் குடும்பத்தார்களுக்கு கல்வி, மருத்துவம் மற்றும் பொருளாதார ரீதியில் தேவைகள் இருப்பதை ஒருசில குற்றவாளிகள் தெரிந்து கொண்டு தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி வழக்கு நீதிமன்றத்திற்கு வரும் சமயம் பொருளாதார ரீதியாக குற்றவாளிகள் உதவிசெய்தும் மற்றும் இதர காரணங்களால் பாதிக்கப்பட்ட நபர் அல்லது அவர்கள் குடும்பத்தார் சரியாக சாட்சியம் அளிக்காமல் வழக்கில் இருந்து குற்றவாளிகள் தண்டனை பெறாமல் தப்பித்துவரும் சூழ்நிலை ஒரு சில நேரங்களில் இருந்துவருகிறது. இதை தவிர்க்கும் பொருட்டும் மேற்படி குற்ற வழக்குகளில் பாதிக்கப்பட்ட நபர்கள் மற்றும் குடும்பத்தாருக்கு அரசு வழங்கும் நிவாரணங்கள் மட்டும் போதுமானதாக இருப்பதில்லை.
இந்த சூழ்நிலையை மாற்றும் பொருட்டு கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் இ.கா.ப அவர்களின் முயற்சியில் கோவையைச் சேர்ந்த தொழிலதிபர்கள் உதவியுடன் கவசம் அறக்கட்டளை ஆரம்பிக்கப்பட்டு முறைப்படி பதிவுசெய்யப்பட்டது. அதற்கு தலைவராக அத்வைத் லக்ஷ்மி இண்டஸ்ட்ரிஸ்&ன் இயக்குனர் திரு.ரவி ஷியாம் அவர்கள் இருந்து வருகிறார். இந்த அறக்கட்டளையின் துவக்கவிழாவானது கடந்த 06.01.2023 அன்று ரெசிடென்சி ஓட்டலில் நடைபெற்றது. அதுசமயம் அப்போதைய கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன், இ.ஆ.ப. மற்றும் அறக்கட்டளை நிர்வாகிகள் கலந்துகொண்டு குற்ற வழக்குகளில் பாதிக்கப்பட்ட நபர்கள் மற்றும் அவர்கள் குடும்பத்தார்கள் சுமார் 30 நபர்களுக்கு பொருளாதார மற்றும் மருத்துவ உதவிகள் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
கவசம் அறக்கட்டளை துவங்கப்பட்ட நோக்கம் வரும் காலங்களில் அதிகாரப்பூர்வமாக செயல்படவேண்டி 26.04.2023-ஆம் தேதி கோவை மாநகர காவல் ஆணையர் வே.பாலகிருஷ்ணன். இ.கா.ப மற்றும் ரவி ஷியாம். தலைவர் கவசம் அறக்கட்டளை இடையே ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டது.
1) உடல் மற்றும் பாலியல் குற்றங்களால் பாதிக்கப்பட்டவர்கள் அல்லது அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கு ஆரம்ப பள்ளி முதல் பட்டப்படிப்பு முதுகலை மற்றும் பல்கலைக்கழகப் படிப்புகள் வரை முறையான கல்வியின் அனைத்துத் துறைகளிலும் இலவச அல்லது மானியக் கல்வியை செயல்படுத்துதல்
2) பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களது தகுதியான குடும்ப உறுப்பினர்களின் தொழில்முறை, தொழில் திறன் மேம்பாடு மற்றும் தொழில் தயாரிப்புகளை செயல்படுத்துதல் மற்றும் மேற்கூறிய நோக்கங்களுக்காக வடிவமைக்கப்பட்ட படிப்புகள் மற்றும் திட்டங்களில் அவர்களைப் பதிவு செய்து அவர்களுக்கு நிதியுதவி வழங்குதல்.
3) பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களது தகுதியுள்ள குடும்ப உறுப்பினர்களின் நலனுக்காக திறன் மேம்பாட்டு மையங்களை அமைத்து அவர்களுக்கு பல்வேறு தொழில் மற்றும் வாழ்க்கைத் திறன்களைப் பயிற்றுவித்து, அவர்களுக்கு நிலையான வருமானம் மற்றும் ஒழுக்கமான வாழ்க்கையை உறுதி செய்தல்.
4) பாதிக்கப்பட்டவர்களுக்கும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கும் ஏதேனும் நோய்கள் உடல் காயங்களுக்கு தரமான மருத்துவ சிகிச்சை வழங்குதல்,
5) பாதிக்கப்பட்டவர்களின் நலனுக்காக முதியோர் இல்லங்கள், ஆதரவற்றோர் இல்லங்கள், முதியோர் பராமரிப்பு மையங்கள். நோய்த்தடுப்பு மையங்கள், சிறப்புப் பள்ளிகள் மற்றும் பிற வசதிகளை அமைத்தல்,
6) முக்கிய கார்ப்பரேட் நிறுவனங்களை அழைப்பதன் மூலம் வேலைவாய்ப்பு முகாம்கள் மற்றும் ஆட்சேர்ப்பு இயக்கங்களை நடததுதல்
7) பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கு. குற்றவாளிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளைத் தொடங்குவதற்கும் நடத்துவதற்கும் பயனுள்ள சட்ட உதவிகளை வழங்குதல்
8) துறையில் உள்ள வல்லுநர்கள் மூலம் அனைத்து வகையான உளவியல் ஆலோசனைகள் மற்றும் மன உளைச்சல் சிகிச்சைகளை வழங்குதல் மற்றும் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் மனச்சோர்விலிருந்து விடுபட்டு இயல்பு வாழ்க்கை வாழ உதவுதல். மற்றும் பல்வேறு உதவிகள் புரிந்து குற்ற வழக்கில் பாதிக்கப்பட்ட நபர்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்துவதுடன் குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத்தருவதும் இதன் தலையாய நோக்கமாகும்.