8 மணி நேர வேலையை 12 மணி நேரமாக மாற்ற வழி செய்யும் சட்ட மசோதா கடந்த ஏப்ரல் மாதம் 21ம் தேதி சட்டமன்றத்தில் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. இதற்கு திமுக கூட்டணி கட்சிகள் உட்பட பல்வேறு அரசியல் கட்சியினரும் தங்களது கடும் கண்டனத்தை தெரிவித்தனர். அதேபோல், பல்வேறு தொழிற்சங்கங்களும் தங்களது கண்டனத்தை தெரிவித்தனர். குறிப்பாக திமுகவின் தொழிற்சங்கமான தொ.மு.ச.வும் இதற்கு கடும் எதிர்ப்பை பதிவு செய்தது. இதனைத் தொடர்ந்து அரசு தரப்பில் தொழிற்சங்கத்தினருடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
அதனைத் தொடர்ந்து மே 1ம் தேதி உலக தொழிலாளர் தினத்தன்று இந்த சட்ட மசோதா திரும்பப் பெறப்படுவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இந்நிலையில், 12 மணி நேர வேலை மசோதா அதிகாரப்பூர்வமாக திரும்பப் பெறப்பட்டுள்ளது.
சட்டமன்றச் செயலாளர் சீனிவாசன், இதுகுறித்தான அறிவிக்கையை வெளியிட்டுள்ளார். அதில், ‘2023ம் ஆண்டு தொழிற்சாலைகள் (தமிழ்நாடு) திருத்தச் சட்ட முன்வடிவு சட்டமன்றத்தில் 21.04.2023 அன்று நிறைவேற்றப்பட்டு ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்புவதற்கு முன்னதாக இந்த சட்ட முன்வடிவின் மீதான செயலாக்கம் நிறுத்தி வைக்கப்படுவதாக முதலமைச்சர் அறிவித்தார். இந்நிலையில், இச்சட்ட முன்வடிவை அரசு திரும்பப் பெறுவதென முடிவெடுத்ததையடுத்து அரசால் திரும்பப் பெறப்பட்டது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.