அண்மையில் தூத்துக்குடி அருகே விஏஓ லூர்து பிரான்சிஸ் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கிய நிலையில், தருமபுரி மாவட்டத்திலும் கனிம வளக் கொள்ளையை தடுக்க முயற்சித்த விஏஓவை நள்ளிரவில் டிராக்டர் ஏற்றி கொல்ல முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தருமபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ள எட்டிப்பட்டி கிராமத்தை சேர்ந்த இளங்கோ, மெணசி கிராமத்தில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வருகிறார். மெணசி பகுதியில் கனிம வளக் கொள்ளை நடப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் மழையையும் பொருட்படுத்தாமல் தனது இரு சக்கர வாகனத்தில் கனிம வளங்கள் கடத்தப்படுவதாக கூறப்படும் பகுதிக்குச் சென்றுள்ளார்.
அப்போது குண்டலமடுவு காளியம்மன் கோவில் அருகில் உளி கற்களை ஏற்றிக்கொண்டு டிராக்டர் ஒன்று அதிவேகமாகச் சென்றுள்ளது. அவற்றை தடுத்து நிறுத்தி நடவடிக்கை எடுக்க விஏஓ இளங்கோ முயற்சித்த போது, அந்த டிராக்டர் நிற்காமல் விஏஓ மீது மோதும் வகையில் வேகமாகச் சென்றுள்ளது. அதிர்ச்சியடைந்த விஏஓ, அதிர்ஷ்டவசமாக வாகனத்தில் சிக்காமல் தப்பித்து சுதாரித்துக் கொண்டார்.
பின்னர், விஏஓ இளங்கோ, தன்னை மோதும் வகையில் வந்த டிராக்டர் யாருடையது என்பது குறித்து ஆய்வு செய்ததில் அது, மெணசி பகுதியை சார்ந்த ராகவன் என்பவருடையது என்றும், இந்த நபர் சொந்தமாக ஜேசிபி இயந்திரம் கொண்டு கனிம வள கொள்ளைகளை திருடி தனது டிராக்டர் மூலமாக விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது.
இந்த கொள்ளை கும்பலுக்கு மெணசி ஊராட்சி மன்ற தலைவர் அன்பரசு, பூதநத்தம் ஊராட்சி மன்ற தலைவர் அருணாச்சலம், துணைத் தலைவர் பெருமாள் ஆகியோர் உதவியாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த கும்பலிடம் தனக்கு கொலை மிரட்டல் வருவதாக கிராம நிர்வாக அலுவலர் இளங்கோ காவல் நிலையம், வட்டாட்சியர், மாவட்ட ஆட்சியர் ஆகியோரிடம் புகார் அளித்துள்ளார்.
கடந்த சில நாட்களாக தமிழ்நாடு முழுவதும் உள்ள கிராம நிர்வாக அலுவலர்கள் மீது தாக்குதல் சம்பவம் அரங்கேறி வருகிறது. கடந்த வாரம் தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு அருகே லூர்து பிரான்சிஸ் என்ற கிராம நிர்வாக அலுவலர் அவருடைய அலுவலகத்திலேயே வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். சில நாட்களுக்கு முன்பு சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த கிராம நிர்வாக அலுவலர் மணல் கொள்ளையர்களால் கொலை முயற்சிக்கு ஆளானார்.
இந்நிலையில் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தினர் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு எழுதிய கடிதத்தில் நேர்மையாக செயல்படும் அரசு அதிகாரிகளுக்கு தற்காப்பு பயிற்சி வழங்க வேண்டும் எனவும், தேவைப்படும் பட்சத்தில் கைத்துப்பாக்கி வழங்க பரிசீலனை செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை வைத்திருந்தனர். இந்நிலையில் தருமபுரியில் மேலும் ஒரு விஏஓ மீதான கொலை முயற்சி சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.