தஞ்சை மாவட்டம், பேராவூரணி வட்டம், ஆதனூர், கருப்பமனை, கூப்புளிக்காடு அருள்மிகு வீமநாயகி அம்மன் திருக்கோயில் வைகாசி பெருந்திருவிழா நடைபெற்றது. மே 22 ஆம் தேதி திங்கள் கிழமை காப்புகட்டுதலோடு முதல் நாள் திருவிழா தொடங்கியது. தொடர்ந்து விஸ்வகர்மா கைவினைஞர்கள்
கூப்பிளிக்காடு, அண்ணா செட்டியார் வகையறா, வாணிபசெட்டியார் வகையறா கூப்புளிக்காடு, ராமன் செட்டியார் வகையறா ஆதனூர், மூட்டான் ஆவடை வகையறா ஆதனூர், கூப்புளிக்காடு கிராமத்தினர், ஆதனூர் கிராமத்தினர், ஆதனூர் கருப்பமனை கிராமத்தினர், ஆதனூர் நன்னி வகையறா, கழனிவாசல் வீராச்சாமி வகையறா, ஆதனூர் ஆதிதிராவிடர்கள், ஆதனூர் மகாத்மா காந்திஜி நற்பணி மன்றம் என 12 நாட்கள் திருவிழா நடைபெற்று, 13 ம் நாள் நிகழ்ச்சியாக ஆதனூர் சலவை தொழிலாளர்கள் கலைநிகழ்ச்சியுடன் திருவிழா இனிதே நிறைவுற்றது.மே 29ஆம் தேதி திங்கள்கிழமை ஆதனூர்
கருப்பமனை கிராமத்தார்கள் பேராவூரணி நீலகண்ட புறத்திலிருந்து குதிரை எடுப்பு நிகழ்ச்சி நடத்தினர். பேராவூரணியில் இருந்து ஆதனூர் கடைதெருவை வந்தடைந்த குதிரைகள் ,எதிரே பூசாரி வகையறாக்கள் மற்றும் பக்தர்கள் என இருவரும் ஒரே இடத்தில் சந்தித்து கொண்டனர். தொடர்ந்து பேயடிகொட்டல் என்ற இடத்தில் குதிரைகள் இறக்கி வைக்கப்பட்டு பூசாரியும், காப்புகட்டியும் அரிவாள் பிரம்பு கொண்டு ஆடினார்கள். பின்னர் பூசாரி அரிவாள் மீது ஏறி ஆடி பக்தர்களுக்கு அருள்வாக்கு கூறினார். தொடர்ந்து குதிரைகள் தூக்கப்பட்டு பூசாரிக்கு கணக்கப்பிள்ளை வேஷ்டி, துண்டு அணிவித்து, மண் குதிரை மீது பூசாரி ஏறி சவாரி செய்தார். குதிரைகள் வீமநாயகி அம்மன் திருக்கோயிலை வந்து அடைந்தனர்.
மே 30ஆம் தேதி செவ்வாய்க்கிழமை காலையில் காவடி, எடுப்பும், மதியம் அன்னதானமும், மாலைதேரோட்ட நிகழ்ச்சியும் நடைபெற்றன. அன்று இரவு அருள்மிகு விமநாயகி அம்மனுக்கு நேத்திகடனாக விடப்பட்ட ஆடு, கோழிகள் வெட்டப்பட்டு பொங்கல் வைக்கப்பட்டது. மே 31ம் தேதி மஞ்சள் விளையாட்டு, தீர்த்தம் நிகழ்ச்சியும், ஜூன் 1ம் தேதி தெப்பம் நிகழ்ச்சியும், 2ம் தேதி மகாத்மா காந்திஜி நற்பணி மன்ற தலைவர் முனைவர், வேத. குஞ்சருளன் நடத்திய விடையாற்றி நிகழ்ச்சியும் சிறப்பாக நடைபெற்றது.
இக்கோயிலின் சிறப்பு என்னவென்றால் பூசாரி அரிவால் மீது ஏறி அருள்வாக்கு கூறுவதும், கிடாயை வெட்டி 24 மணிநேரம் தலையில்லா கிடாயை தலைகீழாக தொங்கவிட்டு அதன்பிறகு சமையல் செய்வதும், அந்த கிடா கெடாமல் இருப்பதும், சமையல் செய்யும்போது அதன் மணம் பக்தர்களை சுண்டி இழுப்பதும், பூசாரி மண்குதிரைமீது ஏறி சவாரி செய்வதும் கூடுதல் சிறப்பாகும்.