திருக்குறள் தமிழில் தோன்றிய தலைசிறந்த அறநூலாகும், தமிழின் பெருமையை, தமிழனின் திறமையை உலகிற்கு உணர்த்திய நூல். ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன் தோன்றிய போதும் அன்றும் இன்றும் என்றும் திகட்டாமல் தித்திக்கும் தேன், தமிழரின் பண்பாட்டை பறைசாற்றும் காலக்கண்ணாடி. அய்யன் திருவள்ளுவர் அறத்துப்பாலில் இல்லறம் துறவறம் எனப்பகுத்து இல்லறத்துக்கு முதன்மை முக்கியத்தும் முன்னிரிமை கொடுத்துள்ளார்.
ஜாதி மத பேதமற்று உலகப் பொதுமறை தந்து தண்டவாளத்தில் மட்டுமே ஓடி இலக்கை அடையும் தொடர் வண்டி போல நம்மை அறம் சார்ந்து மட்டுமே வாழ வேண்டும் என்பதை நமக்கு வலியுறுத்துகிறார்.
மேலும் அறத்தைப் பற்றி பல்வேறு குறளில் பல்வேறு விதமாக எடுத்து கூறியுள்ளார். அவை பின்வருமாறு:
நமது தெய்வப்புலவர் இறைவனை ‘அறவாழி அந்தணன்’ என்றும் அவர் பண்பை ‘அந்தணர் என்போர் அறவோர்’ என்றும் குறிப்பிடுகிறார்.
“சிறப்புஈனும் செல்வமும் ஈனும் அறம்”
“அறத்தினூங்கு ஆக்கம் இல்லை”
“மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்”
“அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும் இழுக்கா இயன்றது அறம்”
“அன்றறிவாம் என்னாது அறம் செய்க”
“அறத்தான் வருவதே இன்பம்”
“செயற்பால தோரும் அறனே”
“அறன் இல்வாழ்க்கைப் பயன்”
“அறன் இழுக்கா இல்வாழ்க்கை நோன்மையுடைத்து”
“அறன் எனப்பட்டதே இல்வாழ்க்கை”
“அறத்திற்கும் மறத்திற்கும் அன்பு சார்பு”
“அன்பிலதனை அறம் காயும்”
“இன்சொல் இனிதே அறம்”
“நல்லவை நாடி இனிய சொலின் அறம் பெருகும்”
“கதம்காத்து கற்றடங்கல் ஆற்றுவான் செவ்வி அறம் பார்க்கும்”
“அறன் இயலான் பிறன் இயலாள் பெண்மை நயவாதவள்”
“அழுக்கறுப்பான் அறன் ஆக்கம் வேண்டாதான்”
“அறனறிந்து வெஃகா அறிவுடையார்ச் சேரும் திரு”
“அறமுடையான் புறங்கூறான்”
“பிறன்கேடு சூழின் அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு”
மேற்காணும் குறள் வரிகள் அனைத்தும் அறத்தின் இலக்கணத்தையும் அதன் மேன்மையையும் உணர்த்தும் வகையில் வெகுசிறப்பாக அறத்தைப்பற்றி கூறியுள்ளார்..
பணம் பந்தியிலே குணம் குப்பையிலே என்றும், காசேதான் கடவுளப்பா என்றும், கைக்கு கைமாறும் பணமே உன்னை கைப்பற்ற நினைக்குது மனமே என்றும், குறுக்கு வழியில் வாழ்வு தேடிடும் குருட்டு உலகமடா, இதில் கொள்ளை அடிப்பதில் வல்லமை காட்டும் திருட்டு உலகமடா என்று இன்றைய சமூகத்தில் வாழும் மக்களின் மனப்பான்மை மற்றும் மகிழ்ச்சியானது அறவழியில் செல்லாமல் குணத்தை சார்ந்து இல்லாமல் வெறும் பணத்தை சார்ந்தே மட்டுமே உள்ளது..
கொலை, கொள்ளை, லஞ்சம், வெட்டுக் குத்து, அடி தடி, சண்டை சச்சரவு, ஜாதி மத மோதல்கள், கட்டப்பஞ்சாயத்து, கந்துவட்டி, வாழாவெட்டி, பணமோசடி, ஆள்கடத்தல், மது மாது சூது, வட்டி பிரச்சனை, வரதட்சணை கொடுமை, நாட்டில் நடக்கும் அனைத்து குற்றங்களுக்கும் ஆணிவேராக இருப்பது இந்தப் பாழாய் போன பணமேயாகும்.. இந்த பணமென்ற பேயானது ஏழை பணக்காரன் என்ற பேதமின்றி அனைத்து தரப்பு மக்களையும் ஆட்டிப்படைக்கிறது.
கடந்த இரண்டு வருடங்களாக கொரோனாவின் கொடுமையால் மக்கள் வாழ்க்கை மகிழ்சியாக அமையவில்லை… இந்த கொரோனாவானது ஏழைக்கு பணமானது மிக மிக அவசியம் என்றும் புரிய வைத்துள்ளது, அதுவே பணக்காரனுக்கு பணம் மட்டுமே வாழ்க்கையில்லை என்று உணர வைத்துள்ளது. எனவே அறம் என்கிற தண்டவாளத்தில் பயணம் செய்வோம். அறத்தால் வருவதே இன்பம் என்று மனநிறைவோடு மகிழ்வோடு வாழ்வோம்..
அறம் சார்ந்த நூல்களை கசடற கற்போம் அரண் என்கிற அறத்தின் பக்கம் நிற்போம்… வாசிப்பு நேசிப்பு சுவாசிப்பு
தொடரும்..