வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அருகே உள்ள சுமார் 1,000 அடி உயர சாத்கர் மலையில் 4 கிலோ மீட்டர் தூரம் மலை ஏறி சென்று அங்குள்ள பன்னிகுட்டை, டங்கா, பால்சுனை, கங்காச்சரம், மாமரத்து பள்ளம், விளங்கா மரத்தடி ஆகிய இடங்களில் வேலூர் சரக டி.ஐ.ஜி. முத்துச்சாமி, போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் ஆகியோர் தலைமையில் வேலூர் மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன், குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தி, இன்ஸ்பெக்டர்கள் முத்துக்குமார், முரளிதரன், தனிப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர்கள் ராஜசேகர், ஜெகதீசன் மற்றும் 100 போலீசார் 10 குழுக்களாக சென்று காலை 7.30 மணி முதல் பகல் 12 மணி வரையில் டிரோன் கேமரா மூலம் அதிரடியாக சாராய வேட்டையில் ஈடுபட்டனர்.
அப்போது 15-க்கும் மேற்பட்ட சாராய அடுப்புகள், பேரல்கள் மற்றும் 10 ஆயிரம் லிட்டர் சாராய ஊறல் ஆகியவற்றை கைப்பற்றி அழித்தனர். டிரோன் கேமராவில் கண்காணிக்கப்படுவதை அறிந்த சாராய வியாபாரிகள் மலையில் இருந்து தப்பி ஓடிவிட்டனர்.
இந்த சாராய வேட்டையில் கோட்டை சேரி கிராமத்தை சேர்ந்த சாராய வியாபாரிகளான சங்கர் என்கிற ஜெய்சங்கர் (வயது 53), நித்யா (28) மற்றும் 19 வயதுடைய வாலிபர் ஆகிய 3 பேரை பேரணாம்பட்டு போலீசார் கைது செய்தனர். மேலும் தப்பி ஓடியவர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.