செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வி.வி.சாய் பிரணீத், தலைமையில், செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் உட்கோட்டத்தில் ஒரு கூடுதல் காவல் கண்காணிப்பாளர், இரண்டு துணைக் காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் ஐந்து காவல் ஆய்வாளர்கள் உட்பட 120 போலீஸார் செய்யூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் சோதனை நடத்தினர். ஓதியூர், நைனார்குப்பம், பனையூர்குப்பம் பகுதிகளில் நடந்தது.
இதுவரை ஓதியூரில் 35 லிட்டர் கொள்ளளவு உள்ள 4 எரிசாராய கேன்கள், நைனார் குப்பத்தில் 200 லிட்டர் கொள்ளளவு உள்ள 1 கள்ளச்சாராய ஊறல் பேரல், 75 லிட்டர் கொள்ளளவு உள்ள 2 கள்ளச்சாராய ஊறல் பேரல் மற்றும் 35 லிட்டர் கொள்ளளவு உள்ள 2 கள்ளச்சாராய ஊறல் கேன்கள் ஆக மொத்தம் 140 லிட்டர் எரிசாராயம் மற்றும் 420 லிட்டர் கள்ளச்சாராய ஊறல் பறிமுதல் செய்யப்பட்டன.
இவற்றைத் தயாரித்த சம்பந்தப்பட்ட தலைமறைவு குற்றவாளிகளை பிடிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், இந்த கள்ளச் சாராய சோதனை தொடர்ந்து நடைபெறும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கள்ளச் சாராயம் பற்றிய தகவல்களை 7200 102 104 மற்றும் 90427 81756 ஆகிய வாட்ஸ் ஆப் மூலம் மக்கள் தெரிவிக்கலாம்.