கல்வி கட்டணம் என்ற பெயரில் தனியார் பள்ளி கல்வி நிறுவனங்களால் லட்சங்களில் சுரண்டப்படும் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் திறமையை பள்ளி வளர்த்த விதம் குறித்து கேள்விக்குறியாக்கும் இந்த காலகட்டத்தில். தன் குழந்தைகள் எதிர்காலம் பற்றி பெற்றோர்களின் கவலைகளை நீக்கி நம்பிக்கைக்கு பாத்திரமாக விளங்கும் தஞ்சை மாவட்டம் பேராவூரணி வட்டம் கொன்றைக்காடு அரசு உயர்நிலைப் பள்ளி. பத்தாம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் கடந்த மாதம் வெளியான நிலையில் தேர்வில் பங்கு பெற்ற12,638 பள்ளிகளில் 3,718 பள்ளிகள் மட்டுமே 100 சதவீத தேர்ச்சி அடைந்துள்ளது அதிலும் 1026 அரசு பள்ளிகளில் 100% மாணவர்கள் தேர்ச்சி அடைந்துள்ளனர்.
இதில் குறிப்பாக இந்த பள்ளி கடந்த 15 வருடங்களுக்கு மேலாக தொடர்ந்து 100 சதவீதம் மாணவர்களை தேர்ச்சி அடைய செய்து சாதனை படைத்து வருகிறது. சுற்றுவட்டார பகுதியில் உள்ள தனியார் பள்ளிகளுக்கு போட்டியாக தமிழ் வழி கல்வி மற்றும் ஆங்கில வழி கல்வி என இரண்டிலும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. தனியார் பள்ளிகளில் கூட இல்லாத அளவிற்கு இந்த பள்ளியில் சேருவதற்கான விண்ணப்பம் பெற கூட்டம் அதிகமாக உள்ளது என்றும் கூறப்படுகிறது. இதற்கு முக்கிய காரணமாக தன்னலமற்று சேவை உணர்வோடு ஆசிரியர்கள் அனைவரும் திறம்பட செயலாற்றுவதே என்றும் ஆசிரியர்களுக்கு உறுதுணையாக பெற்றோர் ஆசிரியர் கழகமும் முழு ஈடுபாட்டுடன் அயராது மாணவர்கள் நலன் கருதி ஆக்கபூர்வமாக செயல்படுவது என்றும் கூறப்படுகிறது.
சமீபத்தில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் நடைபெற்ற விழாவில் சிறந்த பள்ளிக்கான கேடயம் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திரு அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்களால் இந்த பள்ளிக்கு வழங்கி கௌரவிக்கப்பட்டது. இது பற்றி பெற்றோர் ஆசிரியர் கழக தலைவரை தொடர்பு கொண்ட போது இதற்கு முன்னாள் இருந்து தலைமை ஆசிரியர்களும் சரி இப்போது இருக்கும் தலைமை ஆசிரியரும் மற்ற ஆசிரியர்களும் இந்த பள்ளியின் பெருமையை காக்க அயராது பாடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்றும் இந்த பள்ளிக்கு தொடர்ந்து பல கிராமங்களில் இருந்து மாணவர்கள் வந்த வண்ணம் உள்ளனர். “தயவு செஞ்சு எப்படியாவது என் பிள்ளையையும் சேர்த்துக்கோங்க” என்று பெற்றோர்கள் மூன்று நான்கு அரசு பள்ளிகளை தாண்டி இங்கு வந்து பள்ளிக்கு முன்னால் நிற்கும் காட்சி நம்மால் காண முடிந்தது பள்ளி இடம் மற்றும் கட்டிட பற்றாக்குறையை தவிர வேறு எந்த வகையிலும் குறைகள் இல்லை என்றும் ஏதேனும் ஒரு ஆசிரியரோ, ஆசிரியையோ பணியிடமாறுதலால் அல்லது பணி உயர்வு பெற்று வேறு இடங்களுக்கு சென்றாலும் பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம் அந்த பணியிடத்தை நிரப்ப உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு மாணவர்களின் கல்விக்கு எந்தவிதமான தங்கு தடையும் இன்றி வழிவகை செய்து தர தலைமை ஆசிரியர் உறுதுணையாக இருக்கிறார் என்றும் கூறினார்.
மேலும் இந்த பள்ளிக்கு கட்டிடங்கள் கட்டித் தரக்கோரி விண்ணப்பங்கள் எல்லா நிலைகளும் வைக்கப்பட்டு இருப்பதாகவும் அரசு தரப்பிலும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டு கட்டிடங்கள் கட்டித் தர ஆயத்த பணிகள் நடைபெற்றுக் கொண்டிருப்பதாகவும் தெரிய வருகிறது மேலும் இந்த பள்ளி வளாகத்தில் இட பற்றாக்குறை காரணமாக தற்போது கட்டித் தரவிருக்கும் கட்டிடத்தின் ஒரு பகுதியில் மாணவர் மற்றும் மாணவிகளுக்கு உண்டான கழிப்பறை வசதியுடன் கட்டித் தர ஏற்பாடு செய்தால் மிகவும் ஏதுவாக இருக்கும் என்று அனைவராலும் எதிர்பார்க்கப்படுகிறது.
படிப்பு மட்டுமில்லாமல் விளையாட்டு போட்டிகளிலும் பல சாதனைகளை புரிந்துள்ள இப்பள்ளி ,விளையாட்டு மைதானத்திற்காகவும் ஏங்கிக் கொண்டிருக்கிறது என்பது வருந்தத்தக்க விஷயம். தற்போது வரை மாணவர்களுக்கு பயிற்சி அளிப்பதற்காக ஐந்து கிலோமீட்டர் தொலைவில் உள்ள வேறு ஒரு அரசு பள்ளி மைதானத்தை உபயோகப்படுத்திக் கொண்டிருப்பதாக தெரிய வருகிறது விரைவில் அதற்கும் ஒரு நல்ல தீர்வு கிடைக்கும் என்று நம்புவோம்.
இந்த குறிப்பிட்ட பள்ளியில் படிப்பிற்கு மட்டும் முக்கியத்துவம் கொடுக்காமல் மாணவர்களின் ஒழுக்கத்தின் பெயரிலும் அக்கறை கொண்டிருக்கும் ஆசிரியர்களால் கற்பிக்கப்படும் பழக்க வழக்கங்கள் மாணவர்களின் நல்லொழுக்கத்திற்கு வழிவகுத்து சுற்றுவட்டார பகுதிகளில் வேறு எந்த பள்ளிகளிலும் இல்லாத அளவிற்கு இப்பள்ளியில் பயிலும் மாணவர்கள் தங்களது நல்லொழுக்க நடைமுறைகளால் தனித்து அடையாளப்படுத்தப்படுகிறார்கள். மேலும் வெகுவான இடங்களில் பார்க்க முடியாத காட்சியாக இங்கு ஆசிரியர்களுடன் பெற்றோர்கள் ஒத்துழைப்பு. இந்த பள்ளியில் பந்தல் போட்டு சிற்றுண்டி ஏற்பாடு செய்யப்பட்டு நடத்தப்படும் பெற்றோர் ஆசிரியர் சந்திப்பு நிகழ்ச்சியில் வேறு எங்கும் காண முடியாத அளவிற்கு ஏதோ விசேஷ வீட்டு கூட்டம் போல் அனைத்து மாணவர்களின் பெற்றோர்களும் தங்கள் வேலைகளை விட்டுவிட்டு தங்களின் குழந்தைகளின் எதிர்காலத்திற்காக பள்ளியில் வந்து ஆசிரியர்களுடன் கலந்துரையாடுவது மிகவும் பாராட்டக் கூடியது. மேலும் இவர்களோடு பள்ளி நிர்வாகத்துடன் ஊர் பொதுமக்களும் ஒத்துழைப்பதால் இந்த பள்ளி தொடர்ந்து சிறப்பாக செயலாற்றி வருகிறது என்பது சமூக ஆர்வலர்கள் இடமிருந்து நமக்கு கிடைத்த தகவல்.
இந்த ஊர் மக்கள் போல் அரசு பள்ளிக்கு ஒத்துழைப்பு கொடுத்தால் தற்போது நூறு சதவீத தேர்ச்சி அடைந்துள்ள 1026 அரசு பள்ளிகளை போல் மேலும் பல நூறு அரசு பள்ளிகள் 100% தேர்ச்சி அடைய கண்டிப்பாக உறுதுணையாக இருக்கும் என்பதில் எந்த விதமான சந்தேகமும் இல்லை. மேலும் இது தற்போது 91 சதவீதமாக இருக்கும் மொத்த தேர்ச்சி விகிதத்தை கண்டிப்பாக உயர்த்தும் என்பதிலும் எந்தவித மாற்று கருத்தும் இல்லை. மாணவர் நலன் கருதி அக்கறையோடு செயல்பட்டு வரும் அனைத்து ஆசிரியர்களும் நீதி நுண்ணறிவு குழுமம் சார்பாக பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்…