பேராவூரணி எஸ்பிஐ வங்கிக் கிளையின் முதன்மை மேலாளராக பணியாற்றி வருகிறார் ராகவன் சூரியேந்திரன். கடந்த மூன்று ஆண்டு காலமாக இந்தக் கிளையில் பணியாற்றி வருகிறார்.
பொதுமக்கள் சேவையில் இப்பகுதி மக்களிடம் பெரும் அதிருப்தியை கொண்டிருந்த இந்த வங்கி இவர் முதன்மை மேலாளராக பொறுப்பேற்றதற்குப் பிறகு பெரும் மாற்றம் கண்டது. உடனுக்குடன் வாடிக்கையாளர்கள் தேவைகள் நிறைவேற்றப்பட்டன.
கல்விக்கடன், மகளிர் குழுக்களுக்கான தொழிற்கடன், தனிநபர் கடன், வீட்டுக் கடன் போன்ற கடன் திட்டங்கள் தொய்வின்றி நிறைவேற்றப்பட்டது. உரிய ஆவணங்களுடன் செல்லும் யாரும் இவ்வங்கியால் அலைக்கழிக்கப்படுவதில்லை என்ற நிலை ஏற்பட்டது.
கடந்த ஆண்டு மட்டும் மகளிர் குழுக்களுக்கான கடனாக 22 கோடியை வழங்கி சாதனை படைத்தார் இந்த வங்கி கிளை முதன்மை மேலாளர்.
ஊரகப்பகுதியான இப்பகுதியில் வங்கி விழிப்புணர்வற்ற மக்களிடம் வங்கியின் பல்வேறு தேவைகளை விளக்கி திட்டங்களை நிறைவேற்றுவதில் முதன்மை மேலாளர் முனைப்போடு செயல்பட்டார். எளியவர்களும் அணுகுவதற்கு ஏற்றவராக பணியாற்றினார்.
தற்பொழுது வங்கி விதிகளின்படி ஐயா ராகவன் சூரியேந்திரன் அவர்கள் பணி மாறுதல் பெற்று வேறு ஊருக்கு செல்ல உள்ளார்.
இவரின் பணி மாறுதல் இப்பகுதிக்கு பேரிழப்பு. தொடர்ந்து எஸ்பிஐ வங்கியை கவனித்து வரும் முற்போக்காளர்கள் இவரின் சேவையை பெரிதும் போற்றினர். சிறப்பாக பணி புரியும் இவருக்கு பாராட்டு விழா நடத்திட தமிழின உணர்வாளர்களால் திட்டமிடப்பட்டது.
குறுகிய காலத்திற்குள் அழைப்பிதழ் தயாரிக்கப்பட்டு சமூக ஊடகங்களில் மட்டுமே பதிவிடப்பட்டது. இரண்டு நாள் அவகாசத்தில் நடத்தப்பட்ட இந்த நிகழ்வு இப்பகுதியில் பெரும் பேசு பொருளாக மாறி இருக்கிறது.
இவரின் வங்கி சேவையை அறிந்த பலரும் நேரில் வந்து வாழ்த்தி விட்டுச் சென்றனர். உணர்வாளர்கள் குடும்பம் குடும்பமாய் வந்து வாழ்த்தினர். இவரின் பணி மாறுதலை ஏற்றுக் கொள்ள முடியாமல் இறுக்கமான குரலில் கண்களில் தேங்கிய கண்ணீரை துடைத்துக் கொண்டே வாழ்த்துரை வழங்கினர்.
தனிப்பட்ட எவ்வித அழைப்புமின்றி பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் நா.அசோக்குமார் நேரில் வந்து வங்கி மேலாளரை வாழ்த்தினார்.
அறந்தாங்கி திசைகள் அமைப்பின் தலைவர் மருத்துவர் தெட்சிணாமூர்த்தி சமூக ஊடகங்களில் வெளியான பதிவுகளைப் பார்த்துவிட்டு பேராவூரணிக்கு வந்து வாழ்த்தி விட்டுச் சென்றார்.
நிறைவாக வங்கி கிளை முதன்மை மேலாளர் ராகவன் சூரியேந்திரன் ஏற்புரை நிகழ்த்தினார்.
அவர் தனது உரையில், “நான் எனது கடமையைத்தான் செய்தேன், ஒரு வங்கி மேலாளர் எப்படிச் செயல்பட வேண்டுமோ அப்படி செயல்பட்டு இருக்கிறேன். எனக்கான இந்தப் பணி வாய்ப்பு என்பது பெரியார் போன்றவர்களின் சமூக நீதிக்கு கிடைத்த பரிசாக கருதுகிறேன். புண்ணியம் நற்பலன் கிடைக்கும் என்றெல்லாம் கருதாமல் எனது பணியை மட்டுமே செய்திருக்கிறேன். மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடன் உதவி வழங்கியதன் மூலம் கந்துவட்டி சுரண்டலில் இருந்து மக்களை ஓரளவேனும் காக்க முடிந்திருக்கிறது. கல்விக்கடன் கொடுப்பதில் தலைமுறை மாற்றத்திற்கு பணி செய்திருப்பதாக உணர்கிறேன். பணி மாறுதலுக்கான விழா என்பது கிளைக்குள் தான் இதுவரை நடந்திருக்கிறது. பணி மாறுதல் பெறுவதற்கெல்லாம் பாராட்டு விழா நடத்துவது பேராவூரணி மக்களின் பெருந்தன்மை” என்றார்.
திராவிடர் விடுதலைக் கழகத்தின் மாவட்ட அமைப்பாளர் சித.திருவேங்கடம் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் திருக்குறள் பேரவை தலைவர் ஆறு.நீலகண்டன், செய்தியாளர்கள் சங்கத் தலைவர் எழுத்தாளர் கான்முகமது, தமிழ்வழிக் கல்வி இயக்க மாவட்டச் செயலாளர் தபழனிவேல், திருக்குறள் பேரவை பொறுப்பாளர்கள் மெய்ச்சுடர் நா.வெங்கடேசன், செ.சிவகுமார், முனைவர் பா.சண்முகப்பிரியா, முனைவர் ச.கணேஷ்குமார், கொன்றை சண்முகம், ஆயர் த.ஜேம்ஸ், நகர வர்த்தகக் கழகப் பொருளாளர் மு.சாதிக்அலி, கவிஞர் அப்துல்மஜீத், மனிதநேய ஜனநாயக கட்சி பொறுப்பாளர் அப்துல்சலாம், வருவாய் வட்ட சார் ஆய்வாளர் ரெ.சந்தோஷ், ஒளிப்படக் கலைஞர் பாரதி ந.அமரேந்திரன், பேராசிரியர் பிரபா, அமிழ் விளையாட்டுப் பயிற்சி பள்ளி ஆசிரியர் மருத.உதயகுமார், ஐன்ஸ்டீன் ஹாக்கிங் அறிவியல் மன்ற ஒருங்கிணைப்பாளர் தா.கலைச்செல்வன், பேராவூரணி கிழக்கு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி பள்ளி மேலாண்மை குழு தலைவர் சரண்யா, மேனாள் தலைவர் சத்யா, பாரதி தையல் பயிற்சி ஆசிரியர் நித்யா, ஜெயந்தி, திருவள்ளுவர் போட்டி தேர்வு பயிற்சி கூட மாணவர்கள் லதா, அபிநந்தினி, பேராவூரணி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவி ரமாதேவி உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். நிகழ்வில் மாணவி பாரதி மித்ராவின் நடன நிகழ்வு நடைபெற்றது.