உதகை: பல வருடம் உதவி ஆய்வளராக பணியாற்றிவிட்டு பணி ஓய்வு பெற்றவரை, கடைசி நாளில், சல்யூட் அடித்து தனது காரில் வீடு வரை வழியனுப்பி வைத்திருக்கிறார் நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கி.பிரபாகர். இந்த சம்பவம் போலீஸாரிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஒரு இடத்தில் வேலை பார்த்துவிட்டு அங்கிருந்து பிரிந்து சென்றாலே மனம் வலிக்கும். பல வருடம் ஒரே இடத்தில் வேலை பார்த்துவிட்டு ஓய்வு பெறுபவர்கள் தங்கள் வாழ்க்கையில் மிகப்பெரிய விஷயத்தை இழந்துவிட்டு செல்வது போன்று உணருவார்கள்.
பல வருடம் தன்னுடன் வேலைபார்த்தவர்களை நாளை முதல் பார்க்க முடியாது. தான் உட்கார்ந்த இடத்தில் இனி உட்கார முடியாது. தன்னுடன் நண்பர்களாக இருந்தவர்களுடன் இனி வேலைபார்க்க முடியாது. ஓய்வு பெற்ற பின் என்ன செய்ய போகிறோம். பிள்ளைகளின் திருமணம், பிள்ளைகளின் உயர்கல்வி, ஓய்வு காலத்தில் எப்படி வாழ்வது என்று பல்வேறு கேள்விகளுடன், பிரிந்து செல்லும் அரசு ஊழியர்களின் வலி நிச்சயம் சொல்ல இயலாத துயரம் தான்.
மே 31ம் தேதியான்று தமிழகத்தில் பல்வேறு அரசு துறை பணியாளர்கள் ஓய்வு பெற்றார்கள். நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தனிப்பிரிவு உதவி ஆய்வாளராக ரவி என்பவர் பணியாற்றி வந்தார். இவர் மே 31 தேதியுடன் பணி ஓய்வு பெற்றார்.
உதவி ஆய்வாளராக பணியாற்றி ஓய்வு பெற்ற ரவிக்கு நீலகிரியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பாராட்டு விழா நடைபெற்றது. அவருக்கு நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கி.பிரபாகர், சந்தன மாலை அணிவித்து பாராட்டு சான்றிதழ் வழங்கி வாழ்த்தி பேசினார்.
விழா முடிந்து வீட்டுக்கு செல்ல தயாராக இருந்த ரவிக்கு இன்ப அதிர்ச்சி தரும் சம்பவம் ஒன்று நடந்தது. நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கி.பிரபாகர், தன்னுடய காரில் ரவியை அமர செய்து சல்யூட் அடித்தார்.
பின்னர் அவரை வீட்டில் இறக்கிவிடுமாறு ஓட்டுநருக்கு உத்தரவிட்டார். இந்த சம்பவத் தால் உதவி ஆய்வாளர் ரவி மற்றும் போலீஸார் நெகிழ்ச்சி அடைந்தார்கள்.
இதே நாளில் (மே 31) தருமபுரி மாவட்டம் பென்னாகரத்தை சேர்ந்த எஸ்ஐ கணேசன் பணி ஓய்வுபெற்றார். அவருக்கு பிரியா விடை கொடுத்து காவலர்கள் அனுப்பி வைத்தனர். ஓய்வு பெற்ற நாளில் தருமபுரி மாவட்டம் பென்னாரகம் எஸ்ஐ கணேசன் பேசும் போது, காவல் ஆய்வாளர் அவர்களுக்கும், என்னுடன் பணியாற்றி காவலர்கள் அனைவருக்கும் நன்றி. 37 வருடம் பணியாற்றிவிட்டு நான் இன்று பிரிந்து செல்கிறேன் (கண்ணீருடன் பேச முடியாமல் தவித்தார்) .
இது நாள் வரை என்னுடன் குடும்பமாக இருந்து ஒத்துழைப்பு கொடுத்த அனைவருக்கு நன்றி என்றார். அவரை மனம் தேற்றிய காவலர்கள், அவருடன் குரூப் போட்டோ எடுத்துக்கொண்டு அவருக்கு பாராட்டு விழா நடத்தி, வழி அனுப்பி வைத்தனர். கண்ணீருடன் எஸ்ஐ விடை பெற்றார்.