போலி மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனை குறித்து தொடரப்பட்ட வழக்கில் கடந்த மாதம் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின் பெயரில் தமிழகம் முழுவதும் சோதனை நடத்தப்பட்டது. அதில் மொத்தமாக 72 போலி மருத்துவர்கள் கைது செய்யப்பட்டனர். அதிகபட்சமாக திருவாரூர் மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களில் மொத்தமாக 22 போலி மருத்துவர்கள் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டனர்.
இது குறித்து தஞ்சை மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இணை இயக்குனர் திலகம் அவர்கள் கூறுகையில், போலி மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனை குறித்து எவ்விதமான புகார்கள் வரப்பெற்றாலும் பாரபட்சம் இன்றி காவல் துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.
மருத்துவர் என்பவர் இன்று வரை வெகுஜன பாமர மக்களிடத்தில் கைராசிக்காரர் என்று திறமை மீதான நம்பிக்கையில் அடிப்படையில் தான் பல நேரங்களில் சென்று சேர்ந்து இருக்கிறார்கள். அதற்கான முக்கிய காரணம் மருத்துவம் என்பது இன்றளவும் பெரும்பான்மையினருக்கு புரியாத புதிராகவே உள்ளது.
உடல் பாதிப்புக்காக மருத்துவர்களை தேடிச் செல்லும் மக்கள் அவர் எந்தவிதமான மருத்துவம் படித்துள்ளார். அதில் தேர்ச்சி பெற்றாரா இல்லையா, பட்டம் பெற்று இருக்கிறாரா அது உண்மைதானா என்பதெல்லாம் குறித்து ஆராய்ச்சி செய்துவிட்டு மருத்துவம் பார்த்துக் கொள்வது என்பது எந்த வகையிலும் சாத்தியம் இல்லாத ஒன்று. அந்த மருத்துவர் எழுதிக் கொடுக்கும் மருந்துகள் என்னவென்று கூட தெரியாமல் பொதுமக்கள் அவர்கள் மீதுள்ள நம்பிக்கையின் அடிப்படையில் தான் அதை வாங்கி உட்கொள்ளுகிறார்கள்.
இதை வாய்ப்பாக பயன்படுத்திக் கொள்ளும் மருத்துவம் பற்றி எந்தவித படிப்பறிவும் இல்லாத நபர்கள் கடைகளுக்கு மத்தியில் கட்டிடம் ஒன்றை வாடகைக்கு எடுத்து அதை மருத்துவமனையாக உருவாக்குகிறார்கள். அதில் சிலர் பெயர் பலகை வைத்தும் சிலர் பெயர் பலகை வைக்காமலும் மக்களுக்கு மருத்துவம் பார்க்கின்றனர். இன்னும் சிலர் தனது வாகனங்களில் மருத்துவ துறை முத்திரையை வைத்துக் கொண்டு வீடு தேடிச் சென்று மருத்துவம் பார்க்கும் மொபைல் சர்வீஸ் நடத்துகின்றனர்.
பொதுமக்கள் ஜாதி, மத பேதம் கடந்து கடவுளுக்கு நிகராக மருத்துவர்களை நம்பும் நிலையில் அவ்வப்போது போலி டாக்டர்கள் கைது செய்யப்படுவது மிகவும் அதிர்ச்சியை ஏற்படுத்தக் கூடியதாக உள்ளது. இது போன்று போலி மருத்துவமனைகளை உருவாக்கி வாகனங்களில் மருத்துவத்துறையின் முத்திரையை முன்னிலைப்படுத்தி தன்னை மருத்துவர்களாக மக்களிடம் முன்னிலைப்படுத்தும் போலி மருத்துவர்கள் உருவாவதை தொடராமல் தடுக்க சுகாதாரத்துறை எந்தவிதமான நடவடிக்கை எடுத்துள்ளது என்பது இன்றளவும் கேள்விக்குறியாகவே உள்ளது.
ஒவ்வொரு முறையும் நீதிமன்ற உத்தரவிலோ அல்லது ஏதேனும் பிரச்சனை எழுந்து மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரிலோ நடத்தப்படும் சோதனைகள் குறிப்பிட்ட அந்த ஒரு சில நாட்களுக்கு மட்டுமே நீடிக்கின்றது. பின்னர் அது குறித்து கண்காணிக்க எவ்வித ஏற்பாடுகளும் இல்லாமல் இந்த நடவடிக்கை தொய்வடைகின்றது. இதனால் மீண்டும் மீண்டும் போலி மருத்துவர்கள் மருத்துவமனையும் உருவாக்கிக் கொண்டே இருக்கின்றன. உண்மையில் இது தீர்வு காண எடுக்கப்படும் நடவடிக்கையா அல்லது அவ்வப்போது ஏற்படும் பிரச்சனைகளின் சூட்டை தணிக்க எடுக்கப்படும் கண் துடைப்பு நடவடிக்கையா? என்பது சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்களின் குரலாக உள்ளது.
யாரேனும் புகார் செய்தால் மட்டுமே நடவடிக்கை எடுக்கப்படும் என்ற நிலை மாறுமா? குறிப்பிட்ட கால இடைவெளிகளில் போலி மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனைக்கான வேட்டை தொடருமா?
உயிர் காக்கும் உன்னதமான மருத்துவத்துறையின் மகத்துவம் காக்கப்படுமா?