விதிமீறல் கட்டடங்கள் மற்றும் அங்கீகாரமில்லாத மனைப் பிரிவுகளை கட்டுப்படுத்தவும், அவை தொடர்பான புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கவும், நகர், ஊரமைப்பு துறையான, டி.டி.சி.பி.,யில், அமலாக்கப்பிரிவு ஏற்படுத்தப்பட்டு உள்ளது.
தமிழகத்தில், சென்னை பெருநகருக்கு வெளியே உள்ள பகுதிகளில், பெரிய அளவிலான கட்டுமான திட்டங்கள், மனைப் பிரிவுகளுக்கு ஒப்புதல் வழங்கும் அதிகாரம், டி.டி.சி.பி.,யிடம் உள்ளது.
இந்த பணிகளுக்காக, மாவட்ட வாரியாக அலுவலகங்கள் இருந்தாலும், விதிமீறல் தொடர்பாக நடவடிக்கை எடுக்க தனிப்பிரிவு இல்லை. இதற்காக, சென்னையில் உள்ள டி.டி.சி.பி., தலைமை அலுவலகத்தில், அமலாக்கப்பிரிவு ஏற்படுத்தும் திட்டம், 10 ஆண்டுகளுக்கும் முன் அறிவிக்கப்பட்டு, தற்போது, நடைமுறைக்கு வந்துள்ளது.
இதுகுறித்து, டி.டி.சி.பி., உயரதிகாரி ஒருவர் கூறியதாவது: விதிமீறல் கட்டடங்கள் தொடர்பான புகார்கள் அதிகரித்து வரும் நிலையில், ஆரம்பத்திலேயே இவற்றின் மீது நடவடிக்கை எடுப்பது அவசியம். புகார் மனுக்களை கண்டு கொள்ளாமல் விட்டால், நீதிமன்ற வழக்குகள் அதிகரிக்கின்றன.
எனவே, இதை கருத்தில் வைத்து, தலைமை அலுவலகத்தில் ஒரு இணை இயக்குனர் தலைமையில், புதிய அமலாக்கப்பிரிவு அமைக்கப்பட்டு உள்ளது.
இதில், துணை இயக்குனர், உதவி இயக்குனர்கள், கள பணியாளர்கள் சேர்க்கப்பட்டு உள்ளனர். இவர்கள் தலைமை அலுவலகத்துக்கு வரும் புகார்கள் அடிப்படையில், சம்பந்தப்பட்ட பகுதிகளில் திடீர் ஆய்வு நடத்தி, இயக்குனருக்கு அறிக்கை அளிப்பர்.
அதன் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.பெருநகரங்களில், மாதம் ஒரு முறையாவது திடீர் ஆய்வு மேற்கொள்ளும்படி, அமலாக்கப்பிரிவுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.