ஜானை போலவே முத்துவிற்கும் “யுவர் ஃபர்ஸ்ட் டாஸ்க்” என்ற தலைப்பில் செய்தி வந்து சேர்ந்தது. சற்று பதற்றம் கலந்த உற்சாகத்துடனும் ஆர்வத்துடனும் செய்தியை திறந்தார் முத்து. அதில் தற்போது வரை கண்டுபிடிக்கப்படாமல் இருக்கும் குற்றச்சம்பவங்களை வகைப்படுத்தி, ஏதேனும் ஒன்றை தேர்ந்தெடுக்குமாறு கேட்கப்பட்டிருந்தது. முத்து தனக்கு கைவந்த கலையான வாகனம் தொடர்பான குற்றச்சம்பவங்கள் மற்றும் குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டுள்ள வாகனங்களின் மூலம் துப்பு துலக்குதல். என்ற பிரிவை தேர்வு செய்து அனுப்பினார்.
காவல்துறையில் சேர்வதற்கு முன்பு வாகனங்களை பழுது பார்க்கும் தொழிலில் ஈடுபட்டுக் கொண்டிருந்த முத்துவிற்கு பழங்கால வாகனம் முதல் சமீபத்தில் வெளியான வாகனம் வரை அனைத்தும் அத்துபடி. முத்து தேர்வு செய்த ஐந்தாவது நிமிடத்தில் அவருக்கு கொடுக்கப்பட்ட அலைபேசி சிணுங்கியது. அலைபேசியை எடுத்து “வணக்கம்” என்றார் முத்து .மறுமுனையில் பேசிய கணினி நான்கு இலக்க எண்ணை இரண்டு முறை கூறிவிட்டு நன்றாக ஞாபகம் வைத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தி மீண்டும் ஒருமுறை கடைசியாக கூறிவிட்டு அழைப்பை துண்டித்தது. அழைப்பு துண்டிக்கப்பட்ட அதே நொடி செய்தி ஒன்று வந்து சேர்ந்தது. அதை திறக்க முயற்சித்த போது நான்கு இலக்க கடவுச்சொல்லை பதிவிடுமாறு கேட்டது. அலைபேசியில் கணினி கூறிய அந்த நான்கு இலக்க எண்ணை பதிவிட்டார் முத்து. தவறு என்று வந்தது. ஒன்றும் புரியாமல் மீண்டும் அந்த எண்ணை முயற்சித்தார் மீண்டும் தவறு என்று வந்தது. ஒரு நிமிடம் யோசித்துவிட்டு மீண்டும் ஒரு முறை அதே என்னை பதிவிட்டார். இம்முறை அந்த செய்தி திறக்கப்பட்டது. அதில் ஒரு தொலைபேசி எண் மற்றும் ஒரு வாகன என் இருந்தது. அது என்ன என்று யோசிப்பதற்குள் மீண்டும் ஒரு செய்தி வந்து சேர்ந்தது. அதில் காலை 8 மணி என்று ஒரு பேருந்து நிறுத்தத்தின் முகவரி குறிப்பிடப்பட்டிருந்தது.
மறுமுனையில் ஜான் முத்துவை போலவே தனக்கு மிகவும் பரிச்சயமான ஒன்றை தேர்ந்தெடுத்து அனுப்பினார். முத்துவை போலவே அவருக்கும் கணினி அழைப்பும் அதைத் தொடர்ந்து செய்திகளும் வந்து சேர்ந்தன. முத்துவைப் போல் பெருமளவில் யோசிக்காமல் வீட்டில் வழக்கம் போல் நேரத்தை செலவிட்டு அன்றைய நாளை முடித்துக் கொண்டார் ஜான்.
ஆனால் முத்துவிற்கு “என்னவாக இருக்கும்,ஏதாக இருக்கும்” என்று ஒன்றும் புரியாமல் நொடி நேரமும் ஒவ்வொன்றும் மணி நேரமாக கடந்தது. படுக்கையில் புரண்டு புரண்டு படுத்தி வெகு நேரம் ஆகியும் உறக்கம் வராமல் ஒரு வழியாக உறங்கினார் முத்து.
உற்சாக மிகுதியில் காலை நான்கு மணிக்கு எல்லாம் எழுந்த முத்து குறித்த நேரத்தில் செய்தியில் குறிப்பிட்டிருந்த பேருந்து நிறுத்தத்தை அடைந்தார். சரியாக எட்டு மணிக்கு முத்துவிற்கு செய்தி வந்த வாகன என் கொண்ட ஒரு வாடகை வாகனம் வந்து முத்துவின் முன்னால் நின்றது. வாகனத்திற்குள் ஏற்கனவே இருவர் அமர்ந்திருந்தனர். இதற்கு முன்னால் முத்து அவர்களைப் பார்த்ததே இல்லை. முன் கதவை திறந்து ஓட்டுநர் அருகே அமர்ந்தார். சீறிப்பாய்ந்த வாகனம் ஒரு மணி நேர பயண தொலைவில் ஒரு இடத்தில் சென்று நின்றது. வாகனத்தில் இருந்து அனைவரும் இறங்கியதால் முத்துவும் இறங்கினார். ஆள் நடமாட்டம் மிகவும் குறைவான பகுதியாக இருந்தது. நீல சட்டை அணிந்து இருந்த நபர் முத்துவிடம் தன் கையில் வைத்திருந்த பைலை நீட்டி “உங்க ஹெல்ப் வேணும் சார்”என்றார் .ஒன்றும் புரியாமல் அதை வாங்கிய முத்து உள்ளே என்ன இருக்கிறது என்று புரட்டத் தொடங்கினார். அதில் ஒரு வாகனத்தின் புகைப்படம் மற்றும் அந்த வாகனத்தை உபயோகப்படுத்தி சட்டவிரவாத பொருட்களை கடத்த முயற்சிக்கும்போது பிடிபட்டு எடுக்கப்பட்ட புகைப்படம் இருந்தது. அதைத் தொடர்ந்து அடுத்த பக்கத்தில் அந்த வாகனத்திற்கு உண்டான உரிமம் மற்றும் அந்த வாகனம் பற்றிய தகவல்கள் இருந்தன அனைத்தையும் பார்த்த முத்து “இதுல என்ன ஹெல்ப் வேணும் சார்” என்று நீல சட்டை அணிந்தவரை கேட்டார். நீல சட்டை அணிந்தவர் ஓட்டுநரை பார்க்க வாகனத்தை இயக்கி வந்த ஓட்டுநர் பேசத் தொடங்கினார்.
“சார் இப்போ நாம கடந்து வந்த தூரம்,இதே நேரம் மூன்று வருடங்களுக்கு முன்னால் உங்கள் கையில் வைத்திருக்கும் புகைப்படத்தில் உள்ள வாகனம் கடந்து வந்திருக்கிறது. நம் நின்று கொண்டிருக்கும் இதே இடத்தில் வாகன தணிக்கை ஈடுபட்டிருந்த போது பிடிபட்ட வாகனம் அது ஆனால் அது பிடிபட்ட போது அதை ஓட்டி வந்தது 70 வயது மூதாட்டி அவருடன் 10 வயது மதிக்கத்தக்க அவருடைய பேத்தி. இருவரும் இங்கிருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் உள்ள அவர்களுடைய வீட்டுக்கு சென்று கொண்டு இருந்ததாக கூறினர். அந்த மூதாட்டி கூறுகையில் தான் கடந்த ஒரு மணி நேரத்திற்கு மேலாக வாகனத்தை இயக்கி வருவதாகவும் வாகனத்திற்குள் தனது மகளின் பிறந்த நாளுக்காக பரிசு பொருட்களும் வீட்டிற்கு தேவையான வீட்டு உபயோகப் பொருட்களும் வாகனத்திற்குள் இருப்பதாக கூறினார். ஆனால் நாம் இப்போது கடந்து வந்த இந்த தூரத்தை அந்த வாகனம் வெறும் அரை மணி நேரம் மூன்று நிமிடத்தில் கடந்து வந்துள்ளது என்பது வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த அதிகாரி குறிப்பிட்ட நேரத்தையும் நாம் கிளம்பிய இடத்தில் இருந்த சோதனை சாவடி ஒன்று கேமராவில் இருந்த நேரத்தையும் ஒப்பிடும் போது தெரிகிறது” என்றார் வாகன ஓட்டுனர் என்று முத்து நினைத்துக் கொண்டிருந்த அதிகாரி.
மூன்றாவது நபர் பேச தொடங்கினார் “சார் அவங்க பிறந்தநாளுக்கு கேக் வாங்கியதாக சொன்ன இடத்தில உள்ள சிசிடிவி கேமராவில் இந்த வாகனம் பதிவாகியுள்ளது மேலும் அவர்கள் அந்த கேக்கை வாங்கி வாகனத்திற்குள் வைப்பதும் பதிவாகியுள்ளது. அதே போன்று அவர்கள் வீட்டு உபயோக பொருட்கள் வாங்கியதாக கொடுத்த ரசீதில் குறிப்பிடப்பட்டுள்ள நேரமும் அவர்கள் கூறுவது உண்மை என்று நிரூபிக்க போதுமானதாக உள்ளது.ஆனால் வாகன சோதனை அதிகாரி வாகனத்தை சோதனையிட்ட போது நீங்கள் கையில் வைத்து பார்த்துக் கொண்டிருக்கிற சட்டவிரோத பொருட்கள் அந்த வாகனத்திற்குள் இருந்தன.
அவர்கள் வாங்கி வாகனத்திற்குள் வைத்ததாக பதிவாகியிருந்த பிறந்தநாள் கேக்கும், வீட்டு உபயோக பொருட்களும் அந்த வாகனத்தில் இல்லை. நாம் இப்போது ஓட்டி வந்தது போலவே எங்கும் நிற்காமல் அதிவிரைவாக வாகனத்தை இயக்கினால் மட்டுமே இந்த இடத்தில் அந்த குறிப்பிட்ட நேரத்தில் அவர்கள் வந்து சேர்ந்திருந்தது சாத்தியமாகும். இதில் யார் குற்றவாளி எந்த இடத்தில் குற்றம் நடந்தது என்பது எங்களால் இன்று வரை கணிக்கவே முடியவில்லை. மூதாட்டியின் வயது கருதியும்,அந்த பத்து வயது குழந்தை கூறிய சாட்சியத்தின் அடிப்படையில் உறுதுணை ஆதாரங்களாக கேக் கடையில் இருந்த சிசிடிவி மற்றும் அவர்கள் வீட்டு உபயோக பொருட்கள் வாங்கியதாக கூறிய ரசீதும் அவர்களை விடுவிக்க போதிய ஆதாரமாக நீதிமன்றம் எடுத்துக்கொண்டு அவர்கள் மீது போலியான வழக்கை ஜோடித்ததாக கண்டனம் தெரிவித்தது. காவல்துறை தரப்பில் குறுக்கு விசாரணைக்கு அனுமதிக்க கேட்ட போது மறுக்கப்பட்டதால் சில தகவல்கள் மறைக்கப்பட்டு விட்டன” என்றார் அந்த மூன்றாவது நபர்.
அனைத்தையும் கேட்ட முத்து “இதுல எந்த விதத்தில் நான் உதவ முடியும்? அதான் நீதிமன்றமே வழக்கை முடித்து விட்டதே” என்று கேட்டார். மீண்டும் பேச தொடங்கிய நீல சட்டை அணிந்து இருந்த அதிகாரி “சார் வாகன தணிக்கையில் கீழ் இறங்கி வந்து வாகனத்தின் பிற்பகுதியை திறந்த போது அந்த மூதாட்டியே இது என்னுடைய பொருட்கள் இல்லை. என்னுடைய பொருட்களை காணும் என்று கூறினார். இதை அந்த சிறுமியும் பார்த்தார். தான் வாங்கிய பொருட்கள் வாகனத்தில் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் உணர்ச்சியில் உண்மை தெரிந்தது. ஆனால் தற்போது கேள்வி என்னவென்றால் இது நடந்திருப்பது எந்த வகையில் சாத்தியம். நம்மிடம் பிடிபட்ட ஒரு பொருள் எங்கிருந்து வந்தது என்றே தெரியவில்லை மேலும் அந்த வாகனம் நாம் கிளம்பிய இடத்திலிருந்து இந்த இடத்திற்கு அத்தனை வேகமாக எப்படி வந்திருக்க முடியும். நிற்காமல் வேகமாக வந்த வாகனத்தில் எப்படி பொருள் மாறுபட்டன. நீங்கதான் உதவனும்” என்று அவர் கூறி முடித்ததும். முத்துவிற்கு ஒரு நொடி தலையை சுற்றியது.
(தொடரும்…)