அனல் வீசும் கனல் சொற்களுக்கு
மௌனமே பதிலென நகரும் அந்நொடிதனில்..
தவறு என்று தெரிந்தபின்
தயங்காமல் மன்னிப்பு கோரும் அந்நொடிதனில்..
சிறு உதவி என்று ஆனாலும்
மறவாமல் நன்றி உரைக்கும் அந்நொடிதனில்..
தண்டிக்கும் வாய்ப்பு கிடைத்திடினும்
துரோகம் மறந்து மன்னிக்கும் அந்நொடிதனில்..
பசியோடு உயிர் போராடினாலும்
பிறருக்காக மனம் இரங்கும் அந்நொடிதனில்..
சுற்றிலும் யாரும் இல்லாவிடினும்
குற்றம் புரிய அஞ்சும் அந்நொடிதனில்..
வாழ்வு முடியும் சூழல் வந்திடினும்
முடியும் என்று துணியும் அந்நொடிதனில்..
வாழ்வின் சிகரத்தைத் தொட்டபின்னும்
ஏற்றி விட்டவர்களை நினைவுகூறும் அந்நொடிதனில்..
உலகமே எதிர்த்து நின்றாலும்
தன்முயற்சி விடாது தொடரும் அந்நொடிதனில்..
கஷ்டங்கள் கண்களைக் குளமாக்கினாலும்
கண்ணீரைப் புன்னகையாக ஆவியாக்கும் அந்நொடிதனில்..
கனவுக்கோட்டைகள் பல தகர்ந்திடினும்
நனவுகளில் நிறைவு காணத்துவங்கும் அந்நொடிதனில்..
தெரியாமல் தவறு செய்திடினும்
மீண்டும் செய்யாமல் தவிர்க்கும் அந்நொடிதனில்..
வாழ்வின் உன்னத நொடிகள் பிறக்கின்றன
வாழ்வில் நம்மையும் உன்னதமாக்கிட!!
- மீனாட்சி வெங்கடேஷ்