பெருங்குடி மண்டலம் மடிப்பாக்கத்தில், குடிநீர் வாரியம் சார்பில் பாதாள சாக்கடை, குடிநீர் திட்டப் பணிகள் மற்றும் மழைநீர் வடிகால் பணிகள் நடந்து வருகின்றன. இப்பணியால், 187, 188வது வார்டில், 135க்கும் மேற்பட்ட சாலைகள் சீரழிந்தன. இதனால், பொதுமக்கள் நடந்து செல்லக்கூட மிகவும் சிரமப்பட்டனர். இதையடுத்து அதை விரைவில் சரி செய்யக்கோரி மக்களிடம் இருந்து தொடர்ந்து வந்த கோரிக்கையை அடுத்து மாநகராட்சியினர் பிரதான சாலைகளை மட்டும் சீரமைப்பு செய்துவிட்டு பெருவாரியான தெருக்களில் உள்ள குறுக்கு சாலைகளில் ஏற்படுத்தப்பட்ட பள்ளங்களை சரி செய்யாமல் காலம் தாழ்த்தி வருகின்றனர்.
இதன் காரணமாக மாணவர்களின் வீட்டின் முன் வந்து சென்ற பள்ளி வாகனங்கள் தற்போது தெருமுனையில் நின்று விடுகின்றன. இதனால் மாணவர்கள் மட்டும் இன்றி அன்றாட போக்குவரத்திற்கு இரண்டு மூன்று தெருக்கள் சுற்றி செல்லும் நிலைமை உள்ளதால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
மேலும் இந்த பள்ளங்கள் திறந்த நிலையில் உள்ளதாலும் மழைநீர் வடிகால் பணிகள் முழுமையாக முடிக்கப்படாத காரணத்தினால் சமீபத்தில் பெய்த மழையால் ஆங்காங்கே வெட்டப்பட்டு திறந்து கிடக்கும் பள்ளங்களில் நீர் தேங்கி துர்நாற்றம் வீசுவதோடு கொசுத்தொல்லை அதிகமாகி உள்ளது. இதனால் டெங்கு காய்ச்சல் ஏற்பட்டு பரவுவதற்கு அதிக அளவில் வாய்ப்புள்ளது.
பணக்கார அப்பார்ட்மெண்ட் முதலாளிகளிடம் பணம் பெற்று அவர்களின் இருப்பிடத்திற்கு முன் மட்டும் சாலையை சீரமைத்து கொடுக்கும் மாநகராட்சி மற்ற இடங்களையும் சமமாக கருதி கண்டு கொள்ளுமா அல்லது சாக்கடை போல் கிடக்கும் பள்ளத்தை மூடுவதற்கு பதிலாக தேங்கி கிடக்கும் நீரில் கொசு மருந்து அடித்து விட்டு நடவடிக்கை எடுத்து விட்டோம் என்று கையை விரிக்குமா பொறுத்திருந்து பார்ப்போம்.