தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையம் சார்பில், ‘சமூக ஊடகங்களில் பெண்களுக்கு எதிராக இணையத்தில் உலவும் குற்றங்கள்’ என்ற தலைப்பில் திருச்சி காவேரி மகளிர் கல்லூரியில் கருத்தரங்கம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையத்தின் தலைவர் குமாரி மற்றும் திருச்சி மாநகர காவல்துறை ஆணையர் சத்திய பிரியா ஆகியோர் கலந்து கொண்டு மாணவிகளிடையே சிறப்புரையாற்றினார்.
திருச்சி மாநகர காவல்துறை ஆணையர் சத்திய பிரியா பேசுகையில், “இளம் மாணவர்களுடன் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி. உங்களுடைய கல்லூரியில் அனைத்து பாடப் பிரிவிற்கும் ‘சைபர் கிரைம்‘ சம்பந்தமான பாடம் கட்டாயமாக சொல்லிக் கொடுக்கப்படுகிறது என்பது மிகவும் பாராட்டத்தக்க விஷயம். சமூக வலைதளங்களில் நிறைய வசதிகள் இருக்கின்றன. அதேவேளையில் அதில் நிறைய பிரச்னைகளும் இருக்கின்றன. அப்படியிருக்க நாம் அதில் எப்படி செயல்படுகிறோம், நாம் அதை எப்படி பயன்படுத்துகிறோம் என்பது தான் முக்கியம்.
சமூக வலைதளங்களில் ஏதாவது பிரச்னை ஏற்பட்டாலோ, ஆன்லைன் மூலமாக ஏதாவது பண மோசடி நடந்தாலோ உடனடியாக போலீஸில் புகார் அளிக்க வேண்டும். அப்போது தான் அந்தப் பிரச்னையில் இருந்து நீங்கள் வெளிவருவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும்“ என்றார்.
தொடர்ந்து பேசியவர், “சோஷியல் மீடியாவில் பெண்கள் தங்களுடைய ஃபோட்டோவையோ, சுய விவரங்களையோ பதிவிடும்போது மிகவும் கவனமாகவும், முன்னெச்சரிக்கையாகவும் இருக்க வேண்டும். இன்றைக்கு அனைத்து சோஷியல் மீடியாவிலும் உங்களுடைய புரொஃபைலை ப்ரைவசி காரணங்களுக்காக ‘லாக்’ செய்து வைக்கும் வசதி இருக்கிறது.
தமிழ்நாடு அரசு பெண்கள் பாதுகாப்புக்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இரவு நேரங்களில் தனியே செல்லும் பெண்கள் 112 என்னும் எண்ணுக்கு அழைத்தால் எங்களுடைய பேட்ரோல் வாகனம் வந்து நீங்கள் செல்லும் இடத்திற்கு உங்களை பாதுகாப்பாக அழைத்துச் சென்று விடும். சைபர் கிரைம் குறித்தான எந்தப் பிரச்னையாக இருந்தாலும் நாம் அதை கண்டு கொள்ளாமல் இருக்கக் கூடாது.
சைபர் கிரைம் நமக்கு நடக்காது என அசால்ட்டாக இருக்காதீர்கள். அதைப் பற்றி நாம் முழுமையாகத் தெரிந்துகொள்ள வேண்டும். அப்போது தான் அதில் இருந்து எப்படி மீள்வது என்று தெரியும். விழிப்புணர்வுடன் இருப்பது, முன்னெச்சரிக்கையாக இருப்பது, குற்றம் நடந்த பிறகு அதுகுறித்து போலீஸில் புகார் செய்வது இந்த மூன்றையும் பெண்கள் கட்டாயமாகக் கடைப்பிடிக்க வேண்டும். அப்போது தான் நடக்கும் குற்றங்கள் குறித்து தெரிந்துகொண்டு அதற்கேற்ப நடவடிக்கை எடுக்க முடியும்“ என்றார்.