‘’சென்னையில் மட்டும் கிட்டத்தட்ட 300-க்கும் மேற்பட்ட அம்மா உணவகங்கள் சிறப்பாக இயங்கி வந்தன. தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்றதற்குப் பிறகு, அம்மா உணவகங்கள் கேட்பாரற்று கிடக்கின்றன. அம்மா உணவகங்கள் இயங்குவதற்கு நிதி அளிக்காதது, அங்குள்ள பணியாளர்களை பணியிலிருந்து நீக்குவது, வசதிகளை ஏற்படுத்தித் தராதது போன்ற பல காரணங்களால் அவற்றின் செயல்பாடு வெகுவாக குறைந்துவிட்டது’’ என முன்னாள் முதல்வர் ஓ.பி.எஸ் குற்றம்சாட்டி இருந்தார்.
அதேபோல், ’’சென்னையில் மட்டும் கிட்டத்தட்ட 300-க்கும் மேற்பட்ட அம்மா உணவகங்கள் சிறப்பாக இயங்கி வந்தன. தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்றதற்குப் பிறகு, அம்மா உணவகங்கள் கேட்பாரற்று கிடக்கின்றன. அம்மா உணவகங்கள் இயங்குவதற்கு நிதி அளிக்காதது, அங்குள்ள பணியாளர்களை பணியிலிருந்து நீக்குவது, வசதிகளை ஏற்படுத்தித் தராதது போன்ற பல காரணங்களால் அவற்றின் செயல்பாடு வெகுவாக குறைந்துவிட்டது’’என எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியும் வருத்தம் தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில் தேனாம்பேட்டை மண்டலத்துக்குள்பட்ட 39 அம்மா உணவகங்களால் ரூ.8 கோடிக்கு மேல் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக பெருநகர சென்னை பெருநகராட்சி நிலைக்குழு கணக்கு மற்றும் தணிக்கை தலைவர் கே.கே.நகர் க.தனசேகரன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மாநகராட்சி மாதாந்திர மாமன்ற கூட்டத்தில் பேசியது, ‘’தேனாம்பேட்டை மண்டலத்தில் 38 அம்மா உணவகங்கள் இயங்கி வருகிறது. இந்த உணவகங்களில் 2020-21 நிதியாண்டில் ரூ.1.55 கோடி வருவாய் கிடைத்துள்ளது. அதே அம்மா உணவகங்களுக்கு ரூ.9.54 கோடி செலவாகியுள்ளது. இதில் உணவு தயாரிக்கத் தேவையான மூலப்பொருளுக்கு ரூ.4.62 கோடியும், பணியாளர்களுக்கு ஊதியம் ரூ. 4.91 கோடியும் வழங்கப்பட்டுள்ளது. இதனால் சுமார் ரூ.8 கோடிக்குமேல் நஷ்டம் ஏற்படுகிறது.
அம்மா உணவகங்கள் லாப நோக்கில் இயங்கவில்லை. நஷ்டம் ஏற்படும் எனத் தெரிந்தும் பொதுமக்களின் நலனுக்காக தொடர்ந்து இயங்கி வருகிறது. ஆனால் தேனாம்பேட்டை மண்டலத்தில் உள்ள அம்மா உணவகங்களில் பணியாளர்களுக்கு வழங்கப்பட்ட முறையான கணக்கு தணிக்கை குழுவிடம் இதுவரை சமர்பிக்கப்படவில்லை. அ.தி.மு.க ஆட்சியில் அம்மா உணவகங்களில் வரவுக்கு மீறிய அதீத செலவு செய்யப்பட்டுள்ளது குறித்து விசாரணைக்கு உட்படுத்த வேண்டும்’’என அவர் கேட்டுக் கொண்டார்.
மாநகராட்சி மூலம் 393 அம்மா உணவகங்கள் தற்போது செயல்பட்டு வருகின்றன. இவை 10 ஆண்டுக்கு மேலாக இயங்கி வருவதால் அங்குள்ள பொருட்கள் பழுதடைந்தும் உடைந்தும் உள்ளன. கிரைண்டர், மிக்சி, பாத்திரங்கள் உள்ளிட்டவை பழுதாகி அதனை சரி செய்து இயக்கி வருகின்றனர். தினமும் 3 வேளையும் உணவு தயாரிப்பதற்கு தேவையான உபகரணங்கள் பயன்படுத்த முடியாமல் உள்ளன. இதனால் அங்குள்ள ஊழியர்கள் சிரமப்படுகிறார்கள். ஒவ்வொரு நாளும் உணவு தயாரிப்பதில் தாமதமும் ஏற்படுகிறது. இவற்றை சரி செய்து அம்மா உணவகத்தை மேம்படுத்த மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது.