தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை வட்டம் ஒட்டங்காடு பஞ்சாயத்தில் பேராவூரணியில் இருந்து பட்டுக்கோட்டை செல்லும் பிரதான சாலையில் ஐந்து ஆண்டுகளாக டாஸ்மாக் கடை உள்ளது இதனருகே பிரசித்தி பெற்ற இரு ஆலயமும் உள்ளது.
இந்த டாஸ்மாக் கடையை வேறு இடத்திற்கு மாற்றக் கோரி மக்கள் கோரிக்கை உள்ளதாக நமது இதழிலேயும் இரண்டு முறைக்கு மேல் செய்திகள் வெளியிட்டுள்ளோம். ஆனால் டாஸ்மாக் அதிகாரிகள் மற்றும் மாவட்ட ஆட்சியர் இதை ஒரு பொருட்டாக கருதாமல் நடவடிக்கை ஏதும் மேற்கொள்ளாமல் இருந்து வருவது வேதனைக்குரியது.
அனைத்து விதமான வாகனங்களும் செல்லும் இந்த பிரதான சாலையில் டாஸ்மாக் அமைந்திருப்பதன் காரணத்தினால் மது பிரியர்கள் போதையில் சாலையைக் கடக்க முயன்று பலமுறை விபத்துகள் ஏற்பட்டுள்ளது. இதில் நான்கு உயிர்கள் பழிவாங்கப்பட்டுள்ளது என்பதும் வேதனைக்குரியது. வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். குறிப்பாக இரவு நேரங்களில் இந்த இடத்தை கடப்பது மிகவும் சவாலாகவே கருதப்படுகிறது.
மது போதையில் சமூக விரோத மற்றும் சட்ட விரோத செயல்களிளும் சிலர் ஈடுபடுகின்றனர். சமீபத்தில் அரசு அனுமதித்த நேரத்தை விட கூடுதல் நேரங்களில் மது விற்பனை செய்வதாக எழுந்த புகாரை தொடர்ந்து காவல் ஆய்வாளர் திருமதி.ஜெயா அவர்கள் தலைமையில் ஒட்டங்காடு கடைத்தெரு முழுவதும் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டுள்ளது. மேலும் இவர் இரவு நேரங்களில் ரோந்து செல்வதை வழக்கமாக கொண்டுள்ளார். இவ்வாறு ரோந்து செல்லும்போது சில நேரங்களில் மதுப்பிரியர்கள் சாலையில் கூட்டமாக இருப்பதை கண்டு அதிர்ந்து வேறு இடங்களுக்கு செல்லுமாறு அறிவுரையும் கூறியுள்ளார். பதிலுக்கு மது பிரியர்கள் ரோட்டில் கடை அமைந்திருப்பதற்கு நாங்கள் என்ன செய்ய முடியும். கடை இருக்கும் இடத்தில் தான் பொருளை வாங்க முடியும் வேறு எங்கு செல்வது என்று காவல் அதிகாரியையே சாடுகின்றனர்.
இதையடுத்து காவல்துறை சார்பிலும் இந்த மதுக்கடையை இடம் மாற்றக்கோரி பரிந்துரைக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது. இதுவரை இருந்த ஆட்சியர் தான் செவிடன் காதில் ஊதிய சங்கு போல் இந்த செய்தியை கண்டும் காணாமல் இருந்து விட்டார். ஆனால் தற்போது வந்திருக்கும் புதிய ஆட்சியராவது இதை கவனத்தில் கொள்வாரா? சாலையோரம் இருக்கும் டாஸ்மாக் கடை வேறு இடத்திற்கு பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் மாற்றப்படுமா? புதிய ஆட்சியரால் மாற்றம் பிறக்குமா? காத்திருந்து பார்ப்போம்.