கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணிபுரியும் அலுவலர்களின் குழந்தைகளுக்காக, ஆட்சியர் அலுவலகத்திலேயே குழந்தைகள் காப்பகம் அமைக்கப்பட்டுள்ளது.
அலுவலகத்திற்குச் செல்லும் பெற்றோர்கள், தங்கள் பள்ளிகளுக்கு செல்லும் வயதை எட்டாத குழந்தைகளை பேணி பராமரிக்க பல்வேறு சவால்களை எதிர்கொள்கின்றனர்.பலரும் தங்கள் குழந்தைகளை, அலுவலக நேரங்களில் காப்பகங்களில் விட்டுவிட்டு வருவதை காண முடிகிறது.
இந்நிலையில், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணிபுரியும் அலுவலர்களின் குழந்தைகளுக்காக, காப்பகம் ஒன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திறக்கப்பட்டுள்ளது.
இந்த குழந்தைகள் காப்பகத்தில் குழந்தைகளுக்கு பிடித்தமான சுவர் ஓவியங்கள், கரும்பலகை, விளையாட்டுப் பொருள்கள், குழந்தைகள் கல்விக்கான புகைப்படங்கள் போன்றவை அமைக்கப்பட்டுள்ளது. அதன் திறப்பு விழாவில் கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார், தனது குழந்தையுடன் வந்து இந்த காப்பகத்தை திறந்து வைத்தார்.