நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும், வேலைவாய்ப்புக்கும் குறு-சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் ஆற்றி வரும் பங்களிப்பை அங்கீகரிக்கும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 27-ந்தேதி பன்னாட்டு குறு-சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் நாளாக அரசு கொண்டாடி வருகிறது.
இதற்கான விழா சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் இன்று காலை நடைபெற்றது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் பன்னாட்டு குறு-சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களை சார்ந்த தொழில் அதிபர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர். விழாவுக்கு வந்த அனைவரையும் குறு, சிறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன் வரவேற்றார்.
விழாவை தொடங்கி வைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-
தமிழ்நாட்டின் பொருளாதார முன்னேற்றத்திற்கு பெரும்பங்காற்றும் எம்.எஸ்.எம்.இ. துறையின் முன்னேற்றத்திற்காக நம்முடைய அரசு தனிக்கவனம் செலுத்தி வருகிறது.
அந்த வகையில் திண்டிவனத்தில் மருந்து பொருட்கள் பெருங்குழுமம்.
திருமுடிவாக்கத்தில் துல்லிய உற்பத்திப் பெருங்குழுமம், விண்வெளி மற்றும் பாதுகாப்பு துறை சார்ந்த பெருங்குழுமம் மற்றும் ஸ்மார்ட் மொபிலிட்டி, மின்வாகனத் துறை சார்ந்த பெருங்குழுமம் ஆகியவற்றை அமைப்பதற்காக விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யும் பணி நடைபெற்று வருகிறது.
தமிழ்நாட்டில் இதுவரை 6 தொழிற்பேட்டைகள் திறக்கப்பட்டுள்ளன. மேலும் 6 மாவட்டங்களில் 6 தொழிற்பேட்டைகள் உருவாக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் வகையில், அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டத்தின் கீழ் 100 பயனாளிகளுக்கு ரூ.57.55 கோடி திட்ட மதிப்பில் தொழில் தொடங்க ரூ.18.94 கோடி மானியத்திற்கான ஆணையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கி திட்டத்தை தொடங்கி வைத்தார்.
மேலும் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் தேவையை கருத்தில் கொண்டு செங்கல்பட்டு மாவட்டம் கொடூர், திருச்சி மாவட்டம் மணப்பாறை, மதுரை மாவட்டம் சக்கி மங்கலம் ஆகிய இடங்களில் உருவாக்கப்பட்டுள்ள 3 தொழிற்பேட்டைகளை திறந்து வைத்தார்.
குறுந்தொழில் குழும மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் குறுந்தொழில் குழுமமாக பண்ருட்டி தாலுகா காடாம்புலியூரில் முந்திரி பதப்படுத்தும் தொழில் குழுமத்தை தொடங்கி வைக்கிறார்.
மேலும் தொழில் நிறுவனங்களுக்கு சந்தை வாய்ப்பை உருவாக்கிடும் நோக்கோடு மெய்நிகர் கண்காட்சியகம் ஆகியவற்றையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
பள்ளி புத்தாக்க மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் வெற்றி பெற்ற 10 மாணவ, மாணவிகளின் புத்தாக்க கண்டுபிடிப்புகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலா ரூ.1 லட்சம் வீதம் மொத்தம் 10 லட்சம் வழங்கினார்.
இது மட்டுமின்றி சமச்சீர் வளர்ச்சியை முன்னெடுக்கும் விதமாக தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் அனைத்து தொழில் பிரிவுகளையும் உள்ளடக்கிய வகையில் 7,400 வேலை வாய்ப்புகளை உருவாக்கிடும் வகையில் ரூ.1,510 கோடி மதிப்பில் 100 புதிய முதலீடுகளுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டன.
கடன் வசதியாக்கல் மற்றும் தொழில் நுட்ப கட்டமைப்பிற்கான பேம்.டி.என். மற்றும் சிட்பி இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தமும் இதில் கையெழுத்தானது.
விழாவில் தொழில் துறையின் வளர்ச்சிக்கு குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் பங்களிப்பை அங்கீகரிக்கும் வண்ணம் மாநில அளவில் சிறந்த தொழில்முனைவோர் விருதுகளையும், வேளாண் சார் தொழில் நிறுவனங்களுக்கான விருதுகளையும் அவர் வழங்கினார்.
சிறந்த மகளிர் தொழில் முனைவோர் விருது, தரம் மற்றும் ஏற்றுமதி நிறுவனத்திற்கான விருது, சிறந்த நிறுவனத்திற்கான விருதுகளையும், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு நிதி வசதியை சிறப்பாக வழங்கிய 3 வங்கிகளுக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விருதுகளை வழங்கினார்.
மொத்தத்தில் இன்றைய விழாவில் ரூ.1723.05 கோடி மதிப்பிலான முதலீடுகள் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் சார்பில் உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதன் மூலம் 30 ஆயிரம் பேர்களுக்கு வேலை கிடைக்கும் வாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது.