கோயில் திருவிழாக்கள் இரு பிரிவினரில் யார் பலம் வாய்ந்தவர்கள் என்பதை நிரூபிக்கவே நடத்தப்படுகிறது. பக்தி என்பது எதுவும் இல்லை என்று சென்னை உயர் நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது.
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழியில் உள்ள ருத்ர மகா காளியம்மன் ஆலயத்தின் ஆடித் திருவிழா ஜூலை 23 முதல் ஆகஸ்ட் 1-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த விழாவுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கக் கோரி கோயில் பரம்பரை அறங்காவலர் தங்கராசு என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது காவல்துறை தரப்பில், “கோயில் திருவிழா நடத்துவதில் இரு பிரிவினருக்கு இடையில் பிரச்சினை உள்ளது. தாசில்தாரர் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தியும் தீர்வை எட்ட முடியவில்லை” எனத் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, கோயில் திருவிழாக்கள் நடத்துவதில் இரு பிரிவினருக்கு இடையில் பிரச்சினை ஏற்படுவது தொடர்பாக தினந்தோறும் வழக்குகள் விசாரணைக்கு வருகின்றன.அமைதி, மகிழ்ச்சிக்காக மக்கள் கோயிலுக்கு வழிபாடு நடத்தச் செல்கின்றனர். ஆனால் திருவிழாக்களில் வன்முறை வெடிப்பது துரதிர்ஷ்டவசமானது. கோயில் திருவிழாக்கள் இரு தரப்பில், யார் பலம் வாய்ந்தவர்கள் என்பதை நிரூபிக்கவே நடத்தப்படுகிறது, உண்மையான பக்தி இல்லை. இது கோயில் திருவிழாக்களின் நோக்கத்தையே வீழ்த்தி விடுகிறது. இதுபோல வன்முறைகள் வெடித்தால் கோயில்கள் இருப்பது அர்த்தமற்றதாகி விடுகிறது. கோயில்களை மூடிவிடலாம். இதுபோன்ற பிரச்சினைகளுக்காக காவல் துறையினர், வருவாய் துறையினரின் நேரம் வீணடிக்கப்படுகிறது.
ருத்ர மகா காளியம்மன் ஆலயத் திருவிழாவுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கும்படி உத்தரவிட முடியாது என திட்டவட்டமாக மறுத்துவிட்டார்.மேலும், திருவிழாவை அமைதியாக நடத்த வேண்டியது சம்பந்தப்பட்டவர்களின் வசம் விட்டு விடுவதாகவும், ஏதேனும் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்பட்டால் உடனடியாக தலையிட்டு சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். கோயில் திருவிழாவையும் நிறுத்த வேண்டும் என காவல்துறைக்கு உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தார்.