நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், “கள ஆய்வில் முதலமைச்சர்” திட்டத்தின் கீழ், நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் மற்றும் மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களின் மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்களுடன் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் தலைமையில் நடந்த ஆய்வுக் கூட்டத்தில் ஆற்றிய உரையில், நான்கு மாவட்ட அலுவலர்களை நான் கேட்டுக் கொள்ள விரும்புவது, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், கலைஞர் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டம், முதலமைச்சர் கிராம சாலை மேம்பாட்டுத் திட்டம், மக்களைத் தேடி மருத்துவம் போன்ற திட்டங்கள் இந்த மாவட்டங்களில் சிறப்பான முறையில், எந்த ஒரு தொய்வும் இல்லாமல் செயல்படுத்தப்படவேண்டும்.
100 நாள் வேலை உறுதி திட்டத்தின்கீழ் வேலை வழங்கக் கூடிய சராசரி நாட்களை உயர்த்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை இந்த மாவட்டங்களில் மேற்கொள்ளவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தில் கடந்த ஆண்டு தொடங்கப்பட்டு, இன்னும் முடிக்கப்படாமல் இருக்கின்ற பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுங்கள்.
வேளாண் சாகுபடி பரப்பு குறைந்து கொண்டு வருகின்ற வட்டாரங்களில் சிறப்புக் கவனம் செலுத்தி வேளாண் பொருட்களின் உற்பத்தியை பெருக்குவதற்கு உடனடி முயற்சிகள் தேவை.
காய்கறிகள் மற்றும் கனிகள் உற்பத்தி பெருக்கத்திற்கும் உரிய நடவடிக்கை எடுங்கள்.
அதே நேரத்தில், இந்த மாவட்டங்களின் வளர்ச்சி என்பது வேளாண்மையை மட்டும் சார்ந்து இல்லாமல், தொழில் சார்ந்தும் இருக்க வேண்டும். மாவட்ட ஆட்சித் தலைவர்களாகிய நீங்கள், இதை உணர்ந்து மாவட்டம் முழுவதற்குமான அரசின் பொதுவான திட்டங்களை செயல்படுத்த வேண்டும்.
மேலும், உங்கள் மாவட்டத்திற்கு உரிய தனிப்பட்ட தேவைகளை கவனத்தில் வைத்து, அதனடிப்படையில், அரசுக்குத் திட்டங்களை எடுத்துச் சொல்லி, அதற்கான தகுந்த முன்னெடுப்புகளை மேற்கொள்ள வேண்டும்.
அதிகாரிகளும் – அமைச்சர்களும் ஒருங்கிணைந்து செயல்படுவதும் – மாவட்ட அலுவலகங்களும் – தலைமைச் செயலகமும் ஒருங்கிணைந்து செயல்படுவதும் தான் நல்லாட்சியின் இலக்கணம்.
நாம் அனைவரும் “மக்கள் சேவகர்கள்” என்பதை மனதில் வைத்து செயலாற்றுவோம்!” என்று குறிப்பிட்டுள்ளார்..