கிணற்றில் போட்ட கல்லாக ஆங்கிலேயர் ஆட்சி காலம் முதல் பட்டுக்கோட்டை- தஞ்சை ரெயில்வே வழித்தட திட்டம் கிடப்பில் கிடக்கிறது. இதனால் போதுமான போக்குவரத்து வசதிகள் கிடைக்காமல் கிராம மக்கள் பரிதவிக்கிறார்கள்.
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை நகரம் வளர்ந்து வரும் நகரமாகும். பட்டுக்கோட்டையை சுற்றி 100-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. ஆனால் பட்டுக்கோட்டை பகுதிக்கு ரெயில் சேவை போதிய அளவு உள்ளதா? என்று கிராம மக்களிடம் கேட்டால் இல்லை என்பது தான் ஒருமித்த குரலாக உள்ளது. நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் சூழலில் பட்டுக்கோட்டை பகுதிக்கு ரெயில் தேவைகள் பூர்த்தி செய்யப்படுமா? என்ற எதிர்பார்ப்பு இந்த பகுதியை சேர்ந்த மக்களிடையே அதிகரித்துள்ளது. பட்டுக்கோட்டைக்கு முதன் முதலாக மீட்டர் கேஜ் ரெயில் பாதை 20.10.1902 அன்று அமைக்கப்பட்டது. 2012-ம் ஆண்டு வரை மீட்டர் கேஜ் பாதையில் சென்னைக்கு கம்பன் விரைவு ரெயில் இயக்கப்பட்டது. அதன் பிறகு அகலப்பாதை அமைப்பதற்காக பட்டுக்கோட்டையில் இருந்து சென்னைக்கான ரெயில் சேவைகள் நிறுத்தப்பட்டன. திருவாரூர்- பட்டுக்கோட்டை-காரைக்குடி ரெயில் பாதை முற்றிலும் முடங்கியது.
அகலப்பாதை பணிகள் 2018-19-ல் ஒருவழியாக முடிந்து சோதனை ஓட்டங்களுக்கு பிறகு கடந்த சில ஆண்டுகளாக திருவாரூர்- பட்டுக்கோட்டை-காரைக்குடி வழித்தடத்தில் ஓரளவுக்கு ரெயில்கள் இயங்கி வருகின்றன. தற்போது மயிலாடுதுறை-திருவாரூர்- காரைக்குடி பயணிகள் ரெயில் திங்கள் முதல் சனிக்கிழமை வரையிலும், தாம்பரம்- செங்கோட்டை- தாம்பரம் விரைவு ரெயில் வாரம் மும்முறையும், செகந்திராபாத்- ராமநாதபுரம்- செகந்திராபாத் வாராந்திர சிறப்பு விரைவு ரெயில் வாரம் ஒருமுறையும், எர்ணாகுளம்-வேளாங்கண்ணி- எர்ணாகுளம் சிறப்பு விரைவு ரெயில் வாரம் ஒருமுறையும் இயங்கி வருகிறது. வருகிற செப்டம்பர் மாதம் முதல் எர்ணாகுளம்-வேளாங்கண்ணி- எர்ணாகுளம் விரைவு ரெயில் வாரம் இருமுறை நிரந்தரமாக இயக்கப்படும் என ரெயில்வே வாரியம் அறிவித்துள்ளது.
ஆயிரம் கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட திருவாரூர்-பட்டுக்கோட்டை- காரைக்குடி அகல ரெயில் பாதையில் இன்னும் போதுமான அளவு ரெயில்கள் இயக்கப்படவில்லை என்பது கிராம மக்களின் வேதனையாக நீடிக்கிறது. ஒவ்வொரு நாடாளுமன்ற தேர்தலின் போதும் தவறாமல் அளிக்கப்படும் வாக்குறுதிகள் சில உண்டு. அதில் தஞ்சை- பட்டுக்கோட்டை, பட்டுக்கோட்டை- மன்னார்குடி ஆகிய 2 புதிய அகல ரெயில் பாதை திட்டங்கள் முக்கியமானவை. இது நாள் வரை 2 புதிய அகல ரெயில் பாதைகளும் அமைக்கப்படவில்லை. தஞ்சை- பட்டுக்கோட்டை இடையே புதிய ரெயில் பாதை அமைக்க ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் 1932-ம் ஆண்டு திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டது. சில காரணங்களால் இந்த திட்டம் தொடர்ந்து நிறுத்தி வைக்கப்பட்டு, கிணற்றில் போட்ட கல்லாக கிடப்பில் கிடக்கிறது.
மீண்டும் 2000 ஆண்டில் ரீசர்வே செய்யப்பட்டு ரூ.101 கோடி மதிப்பீட்டில் 3 ஆண்டுகளில் இந்த திட்டத்தை முடிக்க திட்டமிடப்பட்டது. ஆனால் லாபகரமாக இருக்காது என கூறி 4.4.2000-ல் திட்ட பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டது. 2012-ம் ஆண்டு ரெயில்வே அமைச்சகம் ரூ.7 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து ஆரம்ப கட்ட ஆய்வுகளை செய்ய உத்தரவிட்டது.
20.12.2012-ல் தஞ்சை-பட்டுக்கோட்டை இடையே 47.2 கிலோ மீட்டர் தூரத்திற்கு ரூ.290.5 கோடி செலவில் ரெயில் பாதை அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. 2015-ம் ஆண்டு இந்த தொகையை ரூ.400 கோடியாக அதிகரிக்க திட்டமிடப்பட்டது. பல முயற்சிகளுக்கு பிறகும் இந்த திட்டம் நிறைவேறாமல் உள்ளது.
பட்டுக்கோட்டையில் இருந்து பேராவூரணி, அதிராம்பட்டினம், மதுக்கூர், தம்பிக்கோட்டை, கட்டுமாவடி மற்றும் கிராம பகுதிகளில் இருந்து சாலை வழியாக தஞ்சை, திருச்சி, சேலம், கோயம்புத்தூர், ஈரோடு, நாமக்கல், கும்பகோணம், சென்னை போன்ற பகுதிகளுக்கு பொதுமக்கள், வியாபாரிகள் என பல்வேறு தரப்பினரும் தினசரி சென்று வருகிறார்கள்.
இதன் காரணமாக தஞ்சை- பட்டுக்கோட்டை சாலை போக்குவரத்து நெரிசலால் திணறுகிறது. அடிக்கடி சாலை விபத்துகளும் ஏற்பட்டு வருகிறது.
விபத்துகளை தவிர்க்கவும், கிராம மக்களுக்கு போக்குவரத்து வசதி போதுமான அளவுக்கு கிடைக்கவும் தஞ்சை- பட்டுக்கோட்டை இடையே புதிய அகல ரெயில் பாதை திட்டத்தை விரைந்து நிறைவேற்ற வேண்டும் என பல்வேறு தரப்பினரும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள்.
பட்டுக்கோட்டை அருகே உள்ள ஒரத்தநாட்டில் அரசு ஆஸ்பத்திரி, மகளிர் கல்லூரி, ஆசிரியர் பயிற்சி நிறுவனம், அரசு கால்நடை மருத்துவக் கல்லூரி போன்றவை உள்ளன. ஒரத்தநாடு பகுதி முன்னேற்றத்துக்கு தஞ்சை- பட்டுக்கோட்டை இடையே அகல ரெயில் பாதை அமைப்பது மிகவும் முக்கியமானதாக இருக்கிறது.
அடுத்தபடியாக மன்னார்குடி- பட்டுக்கோட்டை இடையே புதிய ரெயில் பாதை அமைப்பதற்கு போதிய நிதி ஒதுக்கீடு இன்னும் செய்யப்படவில்லை. பட்டுக்கோட்டை-தஞ்சை, பட்டுக்கோட்டை- மன்னார்குடி ஆகிய புதிய ரெயில் பாதைகள் அமைக்கப்பட்டால் பட்டுக்கோட்டை பரபரப்பான ரெயில் சந்திப்பாக மாறும் என்பதில் ஐயமில்லை.
வருகிற 2024 நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக கம்பன் விரைவு ரெயிலையாவது இயக்க வேண்டும் என்பது பட்டுக்கோட்டை பகுதி மக்களின் குறைந்தபட்ச எதிர்பார்ப்பாக உள்ளது.