சென்னையில் 12 இடங்களில் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது. பெருநகர சென்னை மாநகர போலீஸ் எல்லைக்கு உட்பட்ட அண்ணாநகர், மதுரவாயல், புளியந்தோப்பு, திருவொற்றியூர், பூக்கடை, வண்ணாரப்பேட்டை, கொளத்தூர், கோயம்பேடு, திருவல்லிக்கேணி, கீழ்ப்பாக்கம், அடையாறு, தியாகராயநகர் ஆகிய 12 இடங்களில் நேற்று பொதுமக்கள் குறை தீர்க்கும் முகாம் நடைபெற்றது.
இதில் அண்ணா நகர், நடுவாங்கரை பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்ற முகாமில் சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் கலந்துகொண்டு பொதுமக்களிடம் இருந்து நேரடியாக மனுக்களை பெற்று உடனடியாக தீர்க்க வேண்டிய மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் அவரிடம் மனுக்களை அளித்தனர்.
அதேபோல் மற்ற 11 இடங்களில் நடந்த முகாமில் துணை கமிஷனர்கள் கலந்து கொண்டு பொதுமக்களிடம் மனுக்களை பெற்றனர். முகாமில் கலந்துகொண்ட பொதுமக்களுக்கு தண்ணீர், தேனீர் உள்ளிட்டவற்றை கொடுத்து போலீசார் உபசரித்தனர்.
சென்னையில் 12 இடங்களில் நடைபெற்ற குறைதீர்க்கும் முகாம்களில் பொதுமக்களிடம் இருந்து மொத்தம் 877 மனுக்கள் பெறப்பட்டன. அதில் 661 மனுக்கள் மீது உடனடியாக தீர்வு காணப்பட்டது. 14 மனுக்கள் மீது முதல் தகவல் அறிக்கையும் பதிவு செய்யப்பட்டது.