டெல்லி காவல்துறையில் காலியாக உள்ள 7 ஆயிரத்து 500 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. எஸ்.எஸ்.சி எனப்படும் ஸ்டாப் செலக்ஷன் கமிஷன் மூலம் இந்த பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. இதுகுறித்த விரிவான விவரங்களை இங்கே காணலாம்.
டெல்லி யூனியன் பிரதேசத்தில் காவல்துறை மத்திய உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் வருகிறது. மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் டெல்லி காவல்துறை வருவதால் அதில் ஏற்படும் காலிப் பணியிடங்களை எஸ்.எஸ்.சி எனப்படும் ஸ்டாப் செலக்ஷன் கமிஷன் மூலமே நிரப்பப்பட்டு வருகிறது. அவ்வப்போது காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்படும்.
அந்த வகையில், டெல்லி காவல்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை எஸ்.எஸ்.சி வெளியிட்டுள்ளது. இந்த வேலைக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்.. கல்வி தகுதி என்ன உள்ளிட்ட விவரங்களை இங்கு விரிவாக பார்க்கலாம்.
மொத்த பணியிடங்கள்: கான்ஸ்டபிள் (ஆண்கள்) 4,453 மற்றும் பெண் காவலர்கள் 2,491 என மொத்தம் 7,547 காவல் பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. இந்தியர்கள் அனைவரும் விண்ணப்பிக்கலாம். வயது வரம்பை பொறுத்தவரை 18 வயது பூர்த்தி அடைந்து இருக்க வேண்டும். 25-வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். அரசு விதிகளின் படி வயது வரம்பில் தளர்வுகள் உண்டு. அதாவது எஸ்.சி/எஸ்.டி பிரிவினருக்கு 5 ஆண்டுகள் வயது வரம்பில் தளர்வுகள் உண்டு. ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகள் தளர்வுகள் உண்டு.
கல்வி தகுதி: 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். காவலர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் ஆண்களுக்கு கண்டிப்பாக எல்.எம்.வி டிரைவிங் லைசன்ஸ் இருக்க வேண்டும். ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் முறையில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். https://ssc.nic.in என்ற இணையதளம் சென்று விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்ப கட்டணம்: விண்ணப்ப கட்டணமாக ரூ.100 செலுத்த வேண்டும். எஸ்.சி/எஸ்.டி பிரிவினருக்கு தேர்வு கட்டணம் கிடையாது. விண்ணப்பிக்க 30.09.2023 கடைசி நாளாகும். ஆன்லைன் முறையில் எழுத்து தேர்வு நடைபெறும். அதில் பெறும் மதிப்பெண்களை பொறுத்து உடல் தகுதிக்கு விண்ணப்பதாரர்கள் அழைக்கப்படுவர்கள்.
தேர்வு மையங்கள்: கணிணி வழி தேர்வாக எழுத்து தேர்வு நடைபெறும். நாடு முழுவதும் தேர்வு மையங்கள் அமைக்கப்படுகின்றன. தமிழ்நாட்டில் சென்னை, கோவை, சேலம், மதுரை, திருச்சி, திருநெல்வேலி, வேலூர் ஆகிய இடங்களில் தேர்வு நடைபெறும்.
தேர்வு குறித்த முழு விவரங்கள், உடல் தகுதி தேர்வு விவரங்கள் உள்ளிட்டவற்றை தேர்வு அறிவிப்பாணையில் தெரிந்து கொள்ளலாம்.