தெய்வத்தான் ஆகாதெனினும், தன் மெய்வருத்தக் கூலி தரும் என்பது மனித முயற்சிக்கு வலுவூட்டுகிறது. ஆவதும் அழிவதும் அவனாலே என்று சொல்லி, இறைசக்திக்கும் முக்கியத்துவம் கொடுத்து இரண்டுக்கும் மத்தியில் மக்கள் வாழ்ந்து கொண்டுதான் இருக்கின்றார்கள்.
இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி வட்டம், வெல்லப்பாலூர் கிராமத்தில் மக்களுக்கு அருள்பாலித்து வரும், ஸ்ரீஅகோர வீரபத்ரசாமிக்கு ஆண்டுதோறும் சித்திரைத் திங்களில் காவடி, கரகம் எடுத்து அன்னதானமிட்டு, பக்தர்களுக்கு அருள்வாக்கு வழங்குவதை வழக்கமாக கொண்டுள்ளார்கள்.
அதுசமயம் பக்தர்களின் வேண்டுதலின் பேரில், உயிருக்கு உயிர் தருகிறோம் என்று வேண்டிக்கொண்டு ஆடு, கோழி போன்ற உயிரினங்களை மஞ்சள் தண்ணீர் தெளித்து கோவில் விழா நேரத்தில் கோவிலில் விட்டுச் செல்வதை வழக்கமாக வைத்துள்ளார்கள். அதன்படி, கும்பகோணத்தின் அருகில் உள்ள சோழபுரம் கிராமத்தைச் சேர்ந்த சிவகுமார், மகாலட்சுமி என்ற தம்பதியர் மேற்கண்ட சாமிக்கு சேவல் விடுவதாக வேண்டிக் கொண்டு வீட்டிலுள்ள சேவலைப் பிடித்து, அதன்மீது, நீரில் மஞ்சள் கரைத்து தெளித்து, உயிர் உனக்காக என்று சாமியை நினைத்து விட்டுள்ளார்கள்.
அடுத்த சில தினங்களில் வீட்டிற்கு முக்கிய விருந்து வந்து விடவே அவர்களுக்கு, புலால் சமைத்து உணவளிக்க வேண்டுமென கருதி சாமிக்காக வேண்டி விடப்பட்ட சேவலை சமைத்து விடலாம் என முடிவெடுத்து, அதற்கு முன் வீட்டிலுள்ள வேறொரு சேவலை வேண்டி விட்டு விடலாம் என்ற ஆலோசனையின் பேரில், அந்த சேவலை சமைத்து விருந்திட்டனர்.
இந்நிலையில் அந்த வீட்டில் ஏற்கனவே அடைகாத்துக் கொண்டிருந்த சாம்பல் நிற பெட்டைக் கோழி, முட்டைகளை உடைத்து வெளியில் தள்ளி, அடைகாப்பதை தவிர்த்து, வெளியில் வந்து சுதந்திரமாக நடமாடவே சாம்பல் நிற கோழி வெள்ளை நிறமாக மாறுவதும் பெட்டைக் கோழிக்கு கொண்டை முளைக்க துவங்கியதும் சிவக்குமார் தம்பதியர்க்கு அதிர்ச்சியையும், ஆச்சரியத்தை உண்டு பண்ணவே, மறுநாளே அந்தக் கோழியை கொண்டு சென்று கோவிலில் விட்டுவிட்டு சாமி தரிசனம் செய்து தவறுக்கு வருந்தி முறையிட்டு சென்றுள்ளனர்.
அதுசமயம் தெய்வ வழிபாட்டிற்காக குடும்பத்துடன் 08.05.23 ல் நாங்கள் கோவிலுக்கு சென்றபோது, அங்கு பலதரப்பட்ட வேண்டுதல் சேவல்களும், ஆடுகளும் காணக்கிடைத்தது.
அதில் சிவகுமார் தம்பதியரின் கொண்டை முளைத்த கோழியும் இடம் பெற்றிருந்தது. அங்குள்ள பல பேர் இந்த கோழியையும் பார்த்து அதிசயத்துடன் ரசித்து பேசிக் கொண்டிருந்தது. எங்களையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
இந்த செயல்பாட்டை தெய்வத்தான் ஆகாதெனினும் தன் முயற்சி. ஆவதும் அழிவதும் அவனாலே. இதற்குண்டான பதிலை ஆத்திக! நாத்திக!வாதிகளிடம் விட்டு விடலாமா?
– ஆ.இராமானுசம்