திமுகவின் முன்னாள் தலைவரும் தமிழகத்தின் முன்னாள் முதல்வருமான கலைஞரின் நூற்றாண்டு விழா கடந்த ஜூன் மாதம் 3 ஆம் தேதி முதல் தமிழக அரசு சார்பிலும் திமுக சார்பிலும் வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இது தொடர்பாகப் பல்வேறு முன்னெடுப்புகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தமிழ்நாடு பனைமரத் தொழிலாளர்கள் நல வாரியம் சார்பில் தமிழ்நாட்டின் கடற்கரைப் பகுதிகளில் ஒரு கோடி பனை விதைகளை விதைக்கும் திட்டம் தொடங்கப்பட உள்ளது.
இந்நிலையில் இந்த திட்டத்திற்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது வாழ்த்தைத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், “கலைஞரின் நூற்றாண்டில் தமிழ்நாட்டின் கடற்கரைப் பகுதிகளில் ஒரு கோடி பனை விதைகளை விதைக்கும் திட்டத்தைத் தமிழ்நாடு பனைமரத் தொழிலாளர்கள் நல வாரியம் 01-10-2023 அன்று தொடங்குவது மகிழ்ச்சி அளிக்கிறது. திமுக ஆட்சியில் கலைஞர் முதலமைச்சராக இருந்தபோது தான் இந்த வாரியம் அமைக்கப்பட்டது. அதன் தலைவராக இலக்கியச் செல்வர் குமரி அனந்தன் நியமிக்கப்பட்டு 2011 ஆம் ஆண்டு வரை பணியாற்றினார்.
தமிழ்நாடு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறையின் கீழ் செயல்படும் இவ்வாரியம் க்ரீன் – நீடோ சுற்றுச் சூழலமைப்பு, மாநில நாட்டு நலப்பணித் திட்டம் ஆகியவற்றுடன் இணைந்து இந்த முயற்சியில் ஈடுபடுகிறது. மேலும், சென்னை ஐ.ஐ.டி., டாடா கன்சல்டன்சி சர்வீசஸ், இராணி மேரி கல்லூரி உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் உள்ளிட்ட ஒரு இலட்சம் தன்னார்வலர்களும் இணைந்து ஒரு கோடி பனை விதைகளை நடும் திட்டத்தை வெற்றிபெறச் செய்யவுள்ளார்கள் என்பது நெஞ்சுக்கு இதமளிக்கிறது.
தமிழ்ச் சமூகத்துக்கு வாழ்நாள் எல்லாம் பல வகையிலும் பல துறையிலும் பயனளித்திட்ட கலைஞர் நூற்றாண்டில் முன்னெடுக்கப்படும் இந்த சீரிய முயற்சி வெற்றி அடைய வாழ்த்துகிறேன். இதற்காகத் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வி. கணேசனையும், தமிழ்நாடு பனைமரத் தொழிலாளர் நல வாரிய தலைவர் எர்ணாவூர் நாராயணனையும் பாராட்டுகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.