ஆந்திரா, குஜராத், மேற்கு வங்கத்தில் போக்குவரத்து போலீசாருக்கு, குளிர்விக்கும் தொப்பி வழங்கப்பட்டு உள்ளதை போல், தற்போது சென்னையிலும் வழங்கப்பட்டு உள்ளது.
கடும் வெயில் காலத்தில், போக்குவரத்து போலீசாருக்கு சிறப்பு தொப்பி வழங்கப்படும். இது, வெப்பத்தை தாங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டு இருக்கும். தற்போது, அவர்களுக்கு சோதனை முறையில் குளிர்விக்கும் தொப்பி வழங்கப்பட்டுள்ளது.
இந்த தொப்பியின் மேற்புறத்தில், பிளாஸ்டிக்கால் வடிவமைக்கப்பட்ட மின்விசிறி பொருத்தப்பட்டிருக்கும். அதனுடன் சார்ஜ் செய்யக்கூடிய பேட்டரி இணைக்கப்பட்டு இருக்கும். இந்த பேட்டரியை, போலீசார் தங்கள் இடுப்பு பகுதியில் மாட்டிக் கொள்ளலாம்.
பேட்டரி உதவியுடன் சுழலும் மின்விசிறி, கடும் வெயிலில் போலீசாருக்கு குளிர்ச்சியான காற்றை கொடுக்கும். இந்த தொப்பி, 900 கிராம் எடையில் தயாரிக்கப்பட்டுள்ளது. இதை, உத்தரகண்ட் மாநிலத்தைச் சேர்ந்த ‘கரம்’ என்ற தனியார் நிறுவனம் தயாரித்து உள்ளது.
தற்போது சோதனை முறையில், சிலருக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. இதன் பயனை பொறுத்து, போக்குவரத்து போலீசார் அனைவருக்கும் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
ஹைதராபாதில் சாலை விதிகளை மீறும் வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கும் போலீசாருக்கு, சட்டையில் கேமரா பொருத்தும் திட்டம் முதன்முதலில் அறிமுகப்படுத்தப்பட்டது. இத்திட்டத்தை, தமிழக போலீஸ் அதிகாரிகள் குழு ஆய்வு செய்தது. இக்குழு வழங்கிய அறிக்கையின் அடிப்படையில், சென்னை போலீசாருக்கும் சட்டையில் அணியும் கண்காணிப்பு கேமரா வழங்கப்பட்டு உள்ளது.