கல்தோன்றி மண்தோன்றா காலத்தே முன்தோன்றி
தொல்மொழி என்ற பெயர் தோன்றியது – பல்லுலகில்
நீடுபுகழ் கொண்டதமிழ் நின்நிலம் தானறியும்
பாடுவேன் பைந்தமிழ் பா.
செந்தமிழர் கொண்டொழுகும் செவ்வியநல் வாழ்வியலை
செந்தொடையாய்ப் பாடினரே செந்நாவன் – பைந்தமிழை
உலகுஞ்சழக்கரை உள்ள முருகிட
பாடுவேன் பைந்தமிழ்ப் பா.
அன்னைத் தமிழில் அயல்மொழி புல்லிய
தென்னை வினையென் றறிதியோ – மன்னவன்
பீடுதனைக் குன்றிய புன்மதி யாரென்று
பாடுவேன் பைந்தமிழ் பா
நாட்டின் சுதந்தித் தாகத்தை மன்பதைக்கு
பாட்டால் முரசுகொட்டி பாரிதி – ஊட்டியதை
நாடு மறக்கு நலிந்ததை – வெஞ்சிறையில்
பாடுவேன் பைந்தமிழ்ப் பா ..
வண்ணங் குறையாத வண்டமிழர் வீரமதை
கொண்டி மயத்தில் கொடிநாட்டிய – மன்னவன்
பீடுதனை உய்யாது பாரதத்தில் எஞ்ஞான்றும்
பாடுவேன் பைந்தமிழ் பா
வரும்பகை வென்று வளர்பிணிக் கொன்று
உறுபசிப் போக்கி உலகில் – வறுமையின்றி
நாடு வளம்பெற நல்லாட்சி பூத்ததென்று
பாடுவேன் பைந்தமிழ் பா
– சி.அடைக்கலம்
நெய்வேலி வடக்கு,
பள்ளத்தான்மனை