சென்னையில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் நடத்தப்பட்ட குரூப்-4 தேர்வில் தேர்ச்சிப் பெற்ற 10,205 பேருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்வில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு பணிநியமன ஆணைகளை வழங்கினார்.
அப்போது முதல்வர் பேசியது: “நான் முதல்வன் திட்டத்தின் மூலம், கடந்த ஆண்டு மட்டும் 13 லட்சம் இளைஞர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டிருக்கிறது. இது நிர்ணயித்த 10 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பயிற்சி பெற்றுள்ளனர். பல லட்சம் ரூபாய் செலவில் தனியார் நிறுவனங்களில் வழங்கும் பயிற்சியை தமிழக இளைஞர்களுக்கு இலவசமாக வழங்கி வருகிறோம். ஒன்றிய அரசு நடத்தும் தேர்வுகளிலும் தமிழக மாணவர்கள் அதிகளவில் தேர்ச்சிப் பெற வேண்டும் என்று எஸ்எஸ்சி, ஆர்ஆர்பி, மற்றும் வங்கிப் பணி ஆகியவற்றுக்காக 5000 பேருக்கு ஒருங்கிணைந்த பயிற்சி திட்டத்தை தமிழக அரசு நடத்தி வருகிறது.
இதில் பயிற்சி பெற்ற 90 நபர்கள், ஒருங்கிணைந்த வங்கிப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் நடத்தப்பட்ட முதுநிலைத் தேர்வில் தேர்ச்சிப் பெற்றுள்ளனர். மண்டல ஊரக வங்கிகளில் எழுத்தர் பணிக்கானத் தேர்வில் 40 பேர் தேர்ச்சிப் பெற்றுள்ளனர். குடிமைப்பணித் தேர்வில் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் அதிகமான எண்ணிக்கையில் தேர்ச்சிப் பெற வேண்டும் என்று, முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சிப் பெற்ற ஆயிரம் பேருக்கு மாதம்தோறும் ரூ.7,500 மற்றும் பயிற்சி வழங்கும் புதிய திட்டமும் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது. வரும் அக்டோபர் மாதத்தில் இருந்து இது தொடங்கப்படும்.
இந்த வாய்ப்புகளைப் பயன்படுத்தி மாநில அரசுப் பணிகளைப் போலவே ஒன்றிய அரசுப் பணிகளிலும் தமிழக மாணவர்கள் அதிகளவில் சேர்வார்கள். இந்த அரசு அமைந்த கடந்த இரண்டு ஆண்டு காலத்தில், 12,576 பேருக்கு அரசுப் பணி வழங்கப்பட்டுள்ளது. தற்போது 10,205 நபர்களுக்கு அரசுப்பணி வழங்கப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி, நடப்பாண்டில், மேலும் 17,000 பேருக்கு பல்வேறு அரசுப்பணிகள் வழங்கப்பட உள்ளது . அடுத்த இரண்டு ஆண்டுகளில் பல்வேறு அரசுப் பணிகளுக்கு சுமார் 50,000 பேர் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.
இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்திக் கொடுப்பதன் மூலம், அவர்களது குடும்பங்களில் மகிழ்ச்சியை ஏற்படுத்துவதோடு அரசு நிர்வாகத்தில் ஒரு புதிய வேகத்தையும், உற்சாகத்தையும் நிச்சயம் அளிக்கும். அரசுத் திட்டங்கள் பாரபட்சமில்லாமல் எல்லாத் தரப்பு மக்களையும் சென்றடைய வேண்டும். இந்த அரசு சமூகநீதி காக்கும், மக்கள் நலன் பேணக்கூடிய அரசாக விளங்கிக் கொண்டிருக்கிறது” என்று முதல்வர் பேசினார்.