சிந்திய ரத்தமெல்லாம் நாட்டின்
சுதந்திரத் தாகமடா
நாட்டின் விடுதலைக்கே
வ.உ.சி பூட்டியச் செக்கிழுத்தார்
தாகமெடுக்கயிலே வெள்ளையன்
சவுக்காலே தானடித்தான் அவர்கள்
சிந்திய ரத்தமெல்லாம் நாட்டின்
சுதந்திரத் தாகமடா
பாஞ்சாலங் குறிச்சியிலே வீர
பாண்டியக் கட்டப்பொம்மன்
விடுதலை வேட்கை கொண்டு வெள்ளையனை
எதிர்த்ததால் தூக்கிலிட்டான் அவர்கள்
சிந்திய ரத்தமெல்லாம் நாட்டின்
சுதந்திரத் தாகமடா.
பொங்கி எழுந்தாரேடா பாரதி
புரட்சி விதை விதைத்தார்
அடக்குமுறை விதித்தான் வெள்ளையன்
மீறியதால் அடைத்திட்டான்
வெஞ்சிறையில் அவர்கள்
சிந்திய ரத்தமெல்லாம் நாட்டின்
சுதந்திரத் தாகமடா.
பஞ்சாப்புச் சிங்கமென்னும் பெயர்ப்பெற்ற
பகவத்சிங் என்பவரும்
தாய்நாட்டின் விடுதலைக்கே மாவீரன்
தன்னுயிரைக் கொடுத்தான் அவர்கள்
சிந்திய ரத்தமெல்லாம் நாட்டின்
சுதந்திரத் தாகமடா.
அண்ணல் காந்தி உதித்தார் அன்னியர்
ஆதிக்கத்தை ஒழித்தார் அவர்
சித்தங்கலங்கிடவே வெள்ளையன்
எத்திய பல்லெடுத்தான் அவர்கள்
சிந்திய ரத்தமெல்லாம் நாட்டின்
சுதந்திரத் தாகமடா அவர்கள்
சிந்திய ரத்தமெல்லாம் பாரதத்தில்
செடியாகத்தான் முளைத்து
பூத்துக் குலுங்குதேடா சுதந்திரம்
இந்த புண்ணிய பூமியிலே அவர்கள்
சிந்திய ரத்தமெல்லாம் நாட்டின்
சுதந்திரத் தாகமடா..
- சி.அடைக்கலம்
நெய்வேலி வடபாதி
பள்ளத்தான்மனை