தஞ்சாவூர் மாவட்ட தொழில் மையத்தின் வாயிலாக நடைபெறும் வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் தெரிவித்ததாவது:
தஞ்சாவூர் மாவட்டத்தில் மாவட்ட தொழில் மையம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. கடந்த 01.05.2021 முதல் 31.11.2023 வரை குறு மற்றும் சிறு தொழில் நிறுவனங்களுக்கு மூலதன மானியமாக ரூ.1044.85 லட்சம் வழங்கப் பட்டுள்ளது.
எந்திர தளவாடங்கள் மீதான முதலீட்டு மானியம் 15% லிருந்து 25% ஆக உயர்வு செய்ததன் அடிப்படையில் இம்மாவட்டத்தில் குறு, சிறு தொழில் முனைவோருக்கு ரூ.1044.85 லட்சம் மானியம் வழங்கப்பட்டுள்ளது.
தஞ்சாவூர் மாவட்ட தொழில் மையம் சார்பில் 19,259 பொதுப்பிரிவினருக்கும், 1,056 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கும் புதிய தொழில் தொடங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசின் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறையின் கீழ் இயங்கி வரும் மாவட்ட தொழில் மையம், தஞ்சாவூர் அலுவலகத்தின் மூலம் சுயவேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின்கீழ் கடனுதவி பெற்று தொழில் தொடங்கிய தொழில் முனைவோர் மோகன், புதிய தலைமுறை தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டு திட்டத்தின் கீழ் கடனுதவி பெற்று தொழில் தொடங்கிய தொழில் முனைவோர் திருமதி.மோட்ச சுந்தரி தமிழ்நாடு முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்தனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.