பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில், மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்க்கும் சட்ட திருத்தத்திற்கு, கவர்னர் ரவி ஒப்புதல் அளித்துள்ளது, அரசிதழில் வெளியிடப்பட்டு உள்ளது.
தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்கள், கடலூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் தலா ஐந்து வட்டாரங்கள், பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக, 2020ம் ஆண்டு அ.தி.மு.க., ஆட்சியில் அறிவிக்கப்பட்டது; இதற்கான சட்டம் இயற்றப்பட்டது.
மயிலாடுதுறை மாவட்டம் புதிதாக உருவாக்கப்பட்டதால், அதையும் பாதுகாக்க வேளாண் மண்டலத்தில் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இதற்காக, சட்டசபையில், 2023 அக்., 10ம் தேதி சட்ட திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இது கவர்னர் ரவி ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
சமீபத்தில், கவர்னர் ரவியை முதல்வர் ஸ்டாலின் சந்தித்து பேசினார். நிலுவையில் உள்ள சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்கும்படி, முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தினார். சட்டத்திற்கு உட்பட்டு செயல்படுவதாக கவர்னர் ரவி உறுதியளித்தார்.
இந்நிலையில், மயிலாடுதுறை மாவட்டத்தை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கும் சட்ட திருத்தத்திற்கு, கவர்னர் ரவி ஒப்புதல் அளித்துள்ளார். இது, தமிழக அரசிதழில் வெளியிடப்பட்டு உள்ளது. அதன்படி, மயிலாடுதுறை மாவட்டத்தில் வேளாண்மையை பாதிக்கும் எந்த பணிகளும் இனி அனுமதிக்கப்படாது.