தென்காசி மாவட்டம் சுந்தரபாண்டியபுரம் பேருந்து நிலையத்தில் உள்ள கழிப்பறையால் தான் இந்த அவலம்…
இரண்டு மாதங்களுக்கும் மேலாக சுந்தரபாண்டியபுரம் பேருந்து நிலையத்தில் பேரூராட்சி நிர்வாகத்தின் கீழ் இயங்கி வந்த பொதுக் கழிப்பறை நீர் ஏற்றும் மோட்டார் பழுதாகி சரி செய்யப்படாமல் தண்ணீர் இல்லாத காரணத்தால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுவிடும் என கருதி பேரூராட்சி நிர்வாகம் தற்காலிகமாக அதனை பூட்டிட்டு வைத்துள்ளது. நூற்றுக்கணக்கான மக்கள் வந்து போகும் பேருந்து நிலையத்தில் பயன்படுத்தி வந்த பொதுக் கழிப்பறை நீண்ட நாட்களாக பூட்டப்பட்டு இருக்கவே
பொதுமக்களில் பலரும் பயணிகளில் சிலரும் பேரூராட்சியின் நிர்வாக கவனத்திற்கு கொண்டு வந்த போதும் அதனைப் பெரிதாய் பொருட்படுத்தாமல் அவர்களை சமாளித்த நிர்வாகம் இரண்டு மாத காலமாகியும் மின் மோட்டார் பழுதை சரி செய்யாமலும் கழிப்பறை தொடர்ந்து மக்கள் பயன்பாட்டுக்கு இல்லாமலும் அடைத்து வைத்துள்ளது. இதனால் ஆண்களில் சிலர் ஆத்திரத்தை அடக்க முடியாமல் மூத்திரத்தையும் வெளியேற்ற முடியாமல் அருகில் உள்ள பள்ளிச் சுவர்களை சுற்றி சிறுநீர் கழிப்பதனால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. இதில் பெண்களின் பாடுதான் பெரும்பாடு..! மேலும் பேருந்து நிலையத்தை சுற்றியுள்ள கழிப்பறை இல்லாத வீடுகளைக் கொண்ட குடியிருப்பு வாசிகள் ஆண் பெண் குழந்தைகள் என பலரும் இரவு நேரம் வரும்வரை காத்திருந்து ரத வீதிகளை சுற்றி தனது இயற்கை உபாதையை கழிக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுகின்றனர். அந்த அசுத்தங்களில் இருந்து ஈக்கள், கொசுக்களினால்பெரும் சுகாதார சீர்கேடு ஏற்பட நிர்வாகமே காரணமாய் நிற்கின்றது. மேலும் கூடுதலாக பாதிக்கப்படுவது வெளியூர் செல்லும் பயணிகள் தான்… பேருந்து நிலையத்திற்கு வரும் பயணிகள் குழந்தைகள், பெண்கள் என பலர் சிரமத்துக்கு ஆளாகி வேறு வழியின்றி நிர்வாகத்தின் மீது தனது குமுறலை மட்டுமே வெளிப்படுத்தி செல்கின்றதை காது பட கேட்கமுடிகிறது. எனவே உடனடியாக நிர்வாகம் தகுந்த நடவடிக்கை எடுத்து மோட்டார் பழுதைநீக்கி கழிப்பறையை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று பொது மக்களிடமிருந்து கோரிக்கை எழுந்துள்ளது…
காக்கப்படுமா சுகாதாரம்… நடவடிக்கை எடுக்குமா…? நிர்வாகம்