இந்தியாவில் யுபிஐ பண பரிவர்த்தனைகளில் செய்யப்பட்டுள்ள பல்வேறு அதிரடி மாற்றங்கள் ஜனவரி 1ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளன.
உலகமே டிஜிட்டல் மயமாகி வரும் நிலையில், பல்வேறு தரப்பினரும் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகளுக்கு மாறி விட்டனர். சாதாரணமாக டீ குடிப்பதில் தொடங்கி, செல்போன் ரீசார்ஜ், மின்கட்டணம், வீட்டு வாடகை என பலவற்றுக்கும் ஆன்லைன் மூலமே பணம் செலுத்துவது அதிகரித்துவிட்டது. இதனால், ஒவ்வொரு முறையும் ஏடிஎம்-களுக்கு சென்று பணம் எடுக்க தேவையில்லை என்பதோடு, நேரமும் மிச்சமாகிறது. கூகுள் பே, போன் பே, பேடி எம், அமேசான் பே என ஏராளமான ஆப்கள் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை வசதியை வழங்கி வரும் நிலையில், பலருக்கும் இந்த யுபிஐ ஆப்கள் வாழ்க்கையில் ஓர் அங்கமாகவே மாறிவிட்டன. இந்த நிலையில், யுபிஐ பயன்பாட்டை மேலும் அதிகரிக்கும் வகையில் பல்வேறு முக்கிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
பயன்பாட்டில் இல்லாத கணக்குகள் நீக்கம்
நீங்கள் யுபிஐ பயன்படுத்துபராக இருந்தால், உங்களது யுபிஐ கணக்கில் இருந்து எந்த பரிவர்த்தனையும் நடைபெறவில்லை எனில் அந்த கணக்கு நீக்கப்படும். அதாவது கடந்த 12 மாதங்களில் எந்த பரிவர்த்தனையும் மேற்கொள்ளப்படாத கணக்குகளை நீக்க யுபிஐ செயலிகளுக்கு தேசிய பரிவர்த்தனைக் கழகம் (NPCI) உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம், மோசடிகளை தடுக்க முடியும் என கூறப்பட்டுள்ளது.
பரிவர்த்தனை வரம்பு அதிகரிப்பு
யுபிஐ-ல் தினசரி பரிவர்த்தனை செய்யப்படும் உச்சவரம்பு ஒரு லட்சம் ரூபாயாக உள்ளது. அதே நேரத்தில், மருத்துவமனை மற்றும் கல்வி நிறுவனங்களுக்கான உச்சவரம்பு ரூ.5 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு ஏற்கனவே வெளியான நிலையில், தற்போது நடைமுறைக்கு வந்துள்ளது.
1.1% பரிமாற்ற கட்டணம்
ஆன்லைன் வாலட்டுகள் போன்ற பிரீபெய்டு பேமண்ட் கருவிகளை (PPI) பயன்படுத்தி செய்யப்படும் ரூ.2,000-க்கும் மேல் உள்ளசில வணிகர்களின் யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு 1.1% பரிமாற்ற கட்டணம் நடைமுறைக்கு வந்துள்ளது. ஆனால், இது பணம் செலுத்தும் வாடிக்கையாளர்களின் கணக்குகளில் பிடித்தம் செய்யப்படாது. வணிகர்களிடம் இருந்து மட்டுமே 1.1% பரிமாற்ற கட்டணம் பிடிக்கப்படும்.
யுபிஐ ஏடிஎம்
இதுதவிர, ரிசர்வ் வங்கியானது ஜப்பானின் ஹிட்டாச்சி நிறுவனத்துடன் இணைந்து நாடு முழுவதும் யுபிஐ ஏடிஎம்களை திறக்க உள்ளது. அதன்படி ஏடிஎம்-களில் உள்ள கியூஆர் குறியீடை ஸ்கேன் செய்வதன் மூலம் பணத்தை எடுக்க முடியும்.
ஒருவருக்கு பணம் அனுப்பும்போது, முதல் முறையில் 2 ஆயிரம் ரூபாய்க்கு மேல் அனுப்ப முடியாது என்ற புதிய விதி விரைவில் அமலுக்கு வரும் என தகவல் வெளியாகியுள்ளது. முதல் முறை பணம் அனுப்பிய 4 மணி நேரத்திற்கு பிறகே, அதே நபருக்கோ அல்லது வேறு ஒருவருக்கோ கூடுதல் தொகையை அனுப்ப முடியும் என்ற வகையில் வரவுள்ளன கட்டுப்பாடுகள். இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகாத நிலையில், விரைவில் வெளியிடப்படலாம் என கூறப்படுகிறது. இதன் மூலம், யுபிஐ மோசடிகளை தடுக்க முடியும் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.