வெளியே சென்று விடுமுறையை கழிக்க எண்ணியிருந்த முத்து எங்கு செல்வது என்று யோசித்துக் கொண்டிருக்கையில் பேசாமல் முதலில் ஜான் வீட்டுக்கு சென்று விடலாம் என்று எண்ணி தன் மகளை அழைத்த “காலையில் அனைவரும் ஜான் வீட்டுக்கு சென்று வரலாம் தயாராக இருக்கும்படி எல்லோரிடமும் கூறிவிடு” என்று கூறிவிட்டு கடைத்தெருவுக்கு சென்று வருவதாக கூறி வெளியே கிளம்பி சென்றார்.
வெளியே வந்த முத்து தன் குடும்பத்தினருடன் காலையில் வீட்டுக்கு வருவதை கூறுவதற்காக ஜானுக்கு அலைபேசியில் அழைத்த போது பலமுறை முயற்சித்தும் பதில் ஏதும் இல்லை. ஒருவேளை ஜானும் அவரது மனைவியும் வேறு எங்கும் வெளியே செல்வதற்காக யோசித்துள்ளனரா என்று குழம்பிப்போன முத்து தெளிவுபடுத்திக் கொள்வதற்காக கிறிஸ்டினாவிற்கு ஃபோன் செய்தார். “சொல்லுங்க அண்ணா என்று மறுமுனையில் பேசிய கிறிஸ்டினாவிடம், ஜான் வீட்டில் இல்லையாமா?” என்றார் முத்து. “இல்லண்ணே அவசரமா எங்கோ கிளம்பி போனாரு, எங்கன்னு சொல்லல. வந்த பிறகு தான் தெரியும்” என்று கூறிய கிறிஸ்டினாவிடம் தான் காலையில் குடும்பத்தினரிடம் வீட்டிற்கு வரும் விஷயத்தை கூறிவிட்டு, ஜான் வீட்டிற்கு வந்தவுடன் மீண்டும் அழைக்குமாறு கேட்டுக்கொண்டதோடு தொலைபேசி தொடர்பை துண்டித்தார் முத்து.
வழக்கமாக முத்து தன் கணவரின் தொலைபேசிக்கு மட்டும் தானே அழைப்பார் தனக்கு அழைக்க வேண்டிய அவசியம் என்ன ஆயிற்று என்று கிருஷ்டினாவிற்கு சற்று மன குழப்பம் ஏற்பட்டது. இருந்தபோதும் ஒருவேளை தன் கணவருக்கு தெரியாமல் அவரை ஆச்சரியப்படுத்தும் விதத்தில் வருவார்கள் போல என்று எண்ணி தன் மனக்குழப்பத்திற்கு தானே விடை தேடிக் கொண்டார் கிறிஸ்டினா. முத்துவின் மகள் முத்து கூறிவிட்டு சென்றதை ஆர்வத்துடன் தன் தாயாரிடம் சென்று கூறிய போது முத்துவின் மனைவிக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. நீண்ட வருடங்களுக்கு பிறகு மீண்டும் தன் மனதிற்கு நெருக்கமானவர்களை சந்திக்க போவதை நினைத்து உற்சாகத்துடனும் ஆர்வத்துடனும் இருந்தார். முத்துவின் மகளுக்கும் தன் சிறுவயதில் ஜான் குடும்பத்தாருடன் இருந்த நினைவுகளை எண்ணிப் பார்த்து மீண்டும் அவர்களை சந்திக்கப் போவது எண்ணி தன் தாயைப் போலவே உற்சாகத்துடனும் ஆர்வமிகுதியுடனும் இருந்தார்.
தேவாலயத்தில் பாதிரியாருடன் தனியறைக்கு சென்ற ஜான் பாதிரியார் சைகையின் பேரில் அங்கு போடப்பட்டிருந்த இருக்கையில் அமர்ந்தார். பாதிரியார் ஜானிடம் ஏற்கனவே காட்டியிருந்த பையை மீண்டும் எடுத்து வந்து அவர் அருகில் வைத்துவிட்டு, எதிரே அமர்ந்தார். ஜானிடம் அந்தப் பையை மீண்டும் ஒரு முறை பார்க்கும் படி கூறிய பாதிரியார் இம்முறை வெளியே செல்லாமல் அமர்ந்திருந்தார். ஜான் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொள்ள சிறிது நேரம் கேட்டுக் கொண்டதால் பாதிரியாரும் பெருந்தன்மையோடு வேண்டிய நேரத்தை எடுத்துக் கொள்ளுமாறு கூறி அமைதியாக அமர்ந்திருந்தார்.
மறுமுனையில் கமிஷனர் அலுவலகத்தில் கமிஷனரிடம் பேசி முடித்துவிட்டு தன் இருக்கைக்கு திரும்பிய காதர், அருகாமையில் இருந்த அந்த மற்றொரு அதிகாரியிடம் மீண்டும் ஒருமுறை சம்பவத்தன்று நடந்தது என்னவென்று கூறும்படி கேட்டுக்கொண்டார். இம்முறை காதருக்கு ஏதோ ஒன்று தவறாக தெரிந்தது. மீண்டும் ஒரு முறைக்கு இருமுறை நடந்தவற்றை மீண்டும் மீண்டும் தெளிவாக கூறுங்கள் தெளிவாக கூறுங்கள் என்று நடந்த சம்பவத்தை தனக்குள் கற்பனைக் காட்சிப்படுத்தி பார்த்துக் கொண்டிருந்தார். நீதிமன்றம் தீர்ப்பளித்து முடிந்து போன வழக்கை மறுவிசாரணைக்கு உட்படுத்துவது எத்தனை சவாலானது என்பது காதருக்கு நன்றாக தெரியும். இது போல் சில வழக்குகளை காதர் நீதிமன்ற தீர்ப்புக்கு பின் மறு விசாரணைக்கு உட்படுத்தி உண்மையை வெளிக்கொண்டு வந்து மாற்று தீர்ப்பை வாங்கி கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அதன் காரணத்தினாலேய தமக்கு கமிஷனரால் இந்த பொருப்பு கொடுக்கப்பட்டுள்ளது என்பது காதருக்கும் நன்றாக தெரியும்.
சிறிது நேரம் எடுத்துக் கொண்ட ஜான், தன்னை ஆசுவாசப்படுத்தி கொண்டு பாதரியாரிடம் பேச தொடங்கினார் “இங்க என்ன நடக்குதுன்னு எனக்கு ஒண்ணுமே புரியல பாதர். தயவு செஞ்சு கொஞ்சம் தெளிவா சொல்லுங்க” என்றார். மெதுவாக கண்களை சிமிட்டி தலையசைத்த பாதிரியார் “உங்கள் மகளை உங்களுக்கு எவ்வளவு நல்லா தெரியும்?” என்றார். அந்தக் கேள்வி ஜானின் குற்ற உணர்ச்சியின் உச்சியை தொட்டது. “ஜான், உங்க பொண்ணு இந்த தேவாலயத்தினுடைய விலைமதிப்பில்லாத சொத்து. அவள் இறந்தது உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் எத்தனை சோகம் என்பதைவிட இந்த தேவாலயத்திற்கும் நம் சமூகத்திற்கும் ஈடு கட்ட முடியாத இழப்பு என்பதுதான் நிதர்சனம் அது உங்களுக்கு தெரியுமா?. உங்கள் மகள் என்று கூறுவதை விட இந்த சமூகத்தின் நல்லொழுக்க மாற்றத்திற்காக தேவனால் படைக்கப்பட்ட ஒரு பொக்கிஷம் என்றுதான் நான் கூறுவேன். ஆனால் அந்த பொக்கிஷத்தை நாம் முறையாக பாதுகாத்து பயன்படுத்திக் கொள்ளாததால் தேவன் தம்மிடம் திருப்பி எடுத்துக் கொண்டார். உங்களின் மனைவிக்கு கூட ஏஞ்சலை பற்றி அனைத்தும் தெரியுமா!? என்பது எனக்கு தெரியாது. ஆனால் நமது தேவாலயத்தின் மூலம் பயன்பெறும் பள்ளிகளில் உள்ளவர்களுக்கும் நம் அறக்கட்டையினால் சேவைகள் பெறப்பட்ட ஏழை மக்களுக்கும் உங்கள் மகளை அவ்வளவு தெரியும்.” என்று பாதிரியார் கூறிக் கொண்டிருக்கையில் கண்களில் நீர் வழிய கைகூப்பி மண்டியிட்ட ஜான் “பாதர், என் வேலையை கடமை தவறாமல் செய்ய வேண்டும் என்று நேர்மையாகவும், பொறுப்புடனும் இருந்த என்னால் என் குடும்பத்திற்கு தேவையான கவனத்தை செலுத்த நேராமல் போனது. கடமை ஒருபுறம் இருப்பினும் குடும்பத்தின் மீது நேரத்தையும், கவனத்தையும் செலுத்தி இருக்க வேண்டும். ஆனால் நான் அப்படி செய்யவில்லை. குற்ற உணர்ச்சியின் உச்சத்தில் இருக்கிறேன். செய்த தவறை எண்ணி வருந்துகிறேன். நடந்தவற்றை எதையும் சரி செய்ய முடியாது என்பது எனக்கு நன்றாக தெரியும். இருப்பினும் அதனால் ஏற்பட்ட பாதிப்புகளை குறைப்பதற்கு வாய்ப்புள்ளது என்பதும் எனக்கு தெரியும். ஆனால் அதற்கு என்ன வழி என்பது தான் தெரியவில்லை. ரகசியங்கள் ஏதேனும் இருப்பின் தயவு கூர்ந்து என்னை மன்னித்து நான் தெரிந்து கொள்ள வேண்டியவற்றை தெரியப்படுத்துமாறு உங்களை தாழ்மையுடன் கேட்கிறேன்” என்றார்.
காதரிடம் மீண்டும், மீண்டும் நடந்துவற்றை கூறிக் கொண்டிருந்த அதிகாரி ஒரு கட்டத்தில் அலுத்துப்போனார். இருப்பினும் ஏன் இவர் மீண்டும், மீண்டும் ஒரே விஷயத்தை திருப்பி கேட்கிறார் என்று கற்றுக் கொள்ளும் ஆர்வம் அந்த இளம் அதிகாரிக்கு அதிகமாகவே இருந்ததால் அலுப்பானாலும் அதை காட்டிக்கொள்ளாமல் நடந்தவற்றை கூறிக் கொண்டே இருந்தார். ஒரு கட்டத்தில் நடந்துவற்றைக் கூறிக் கொண்டிருக்கும் போது இடையில் நிறுத்தி அந்த அதிகாரி காதரை ஒரு நொடி அதிர்ச்சி அடைந்த பார்வையுடன் “சார் எனக்கே ஏதோ தப்பா தெரியுது. நான் சொன்னது ரெக்கார்டு ஏதாவது பண்ணி இருக்கீங்களா அதை நான் திரும்பி கேட்கணும்” என்றார். காதர் புன்னகையுடன் தோளில் தட்டிக் கொடுத்து “வெல்கம் டு த டீம்.. நம்ம உடனே கமிஷனர் சார பாக்கணும் வாங்க போலாம்” என்று கமிஷனரை பார்க்க இருவரும் கிளம்பினர்.
(தொடரும்…)