இன்றைய குழந்தை
நாளையும் குழந்தையாகட்டும்!!
உன் ஒற்றைப் புன்னகையில்
உலகத்தின் மலர்கள் தூரமாகிடுமே!
உன் தாளாத குறும்பினில்
உள்ளத்தின் துரிதம் அமைதியாகிடுமே!
உன் மகிழ்ச்சி ஆரவாரத்தினில்
இல்லத்தின் நிசப்தம் இராகமாகிடுமே!
உன் தீராத விளையாட்டுதனில்
மனதின் இறுக்கம் இலேசாகிடுமே!
உன் கைவிரல் தீண்டலில்
உடைந்தபின் பொம்மைகள் உயிர்த்திடுமே!
உன் வெகுளி கேள்விதனில்
மனதின் வெகுளி ஆவியாகிடுமே!
உன் இந்நொடி வாழ்வுதனில்
உலகத்தின் வேட்கை அர்த்தமற்றதாகிடுமே!
உன் மன்னிக்கும் இயல்பினில்
இறைவனின் மனம் இரசிகனாகிடுமே!
மாற்றம் ஒன்றே மாறாத தாயின்
மாற்றம் உன் உருவமாகட்டும்
மாறாதது உன் மனமாகட்டும்!!
மனிதன் மீண்டும் குழந்தையாகட்டும்
அவனியில் நல்மாற்றம் தொடரட்டும்!!
– மீனாட்சி வெங்கடேஷ்