புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி தாலுகா காட்டாத்தி கிராமத்தைச் சேர்ந்த மாரிமுத்து என்பவரிடமிருந்து 1994ஆம் ஆண்டு ஆ.கருப்பையா கிரையம் செய்தார். ஆ.கருப்பையாவிடம் செட்டில்மென்ட், ஸிளிஸி, ஸிஷிஸி, ஹிஞிஸி அனைத்தும் இவரது பெயருக்கு அரசு நடைமுறையின் படி மாற்றம் செய்யப்பட்டிருந்தது. ஆனால், தற்போது ஆவணங்களில் திடீரென குளறுபடிகள் செய்யப்பட்டு அந்த கிராமத்தில் வசிக்கவே இல்லாத, இருவரின் பெயரில் பட்டா பதியப்பட்டிருந்தது. மேலும் அந்த சொத்தை நம்பிவயல் ஊரைச் சார்ந்த அதிமுக பிரமுகர் சிவசாமி, தலையாரி ராஜாவுடன் கைகோர்த்துக் கொண்டு ஆ.கருப்பையாவின் மகன்களை மிரட்டி சொத்தை ஆக்கிரமிப்பு செய்து அபகரிக்கவும் முயற்சி செய்துவருகிறார்.
இதை சரி செய்ய எண்ணிய அந்த பாதிக்கப்பட்ட ஆ.கருப்பையாவின் மகன் குணசேகரன் 2021 ஆம் ஆண்டு அப்போதைய கோட்டாட்சியர் பொறுப்பில் இருந்த திருமதி அபிநயா பாலச்சந்தர் அவர்களிடம் மனு அளித்ததன் பேரில் விசாரணை நடத்துவதாக உறுதி கூறியுள்ளார் கோட்டாட்சியர். அதைத் தொடர்ந்து கூறியது போலவே விசாரணை நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. ஆனால் விசாரணை அறிக்கை முழுமையாக முடியப் பெற்று பட்டா மாறுதல் திருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதற்குள் கோட்டாட்சியர் இடம் மாறுதலாகி விட்டார்.
நீண்ட நாட்களாகியும் பதில் கிடைக்காமல் காத்திருந்த அந்த பாதிக்கப்பட்ட குணசேகரன் மாறுதலாகி போன கோட்டாட்சியரை தொடர்ந்து, புதிதாக பொறுப்பேற்றிருக்கும் புதுக்கோட்டை மாவட்டத்தின் முன்மாதிரி கோட்டாட்சியர் என்று மாவட்ட ஆட்சியரால் எடுத்துக்காட்டு உரையாற்றும் வகையில் இன்று வரை பணியில் இருக்கும் திரு. முருகேசன் என்பவரின் கவனத்திற்கு கொண்டு சென்ற போது பாதிக்கப்பட்டவருக்கு காத்திருந்த பதில் என்னவோ அதிர்ச்சியை தான் தந்துள்ளது. காரணம் இந்த குறிப்பிட்ட புகார் தொடர்பாக பாதிக்கப்பட்டவரால் கொடுக்கப்பட்ட ஆவணங்கள், இதுவரை நடந்த விசாரணையின் அறிக்கை, என கொடுக்கப்பட்ட மனு உட்பட அனைத்துமே காணாமல் போனது. ஆகவே மீண்டும் மனு முதலில் இருந்து ஆரம்பிக்க வேண்டும் மனு கொடுங்கள் என்று திரைப்படத்தில் வரும் நகைச்சுவை காட்சி போல அலட்சியமாக வந்த பதில் தான்.
அதை தொடர்ந்து பாதிக்கப்பட்டவரால் நமக்கு புகார் மனு வரப்பெற்றதன் பேரில் நீதியின் நுண்ணறிவு சார்பாக வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தை அணுகிய போது கி4 என்று கூறப்படும் பொறுப்பில் உள்ள அதிகாரி சபிதா என்பவர் இந்த மனுவின் பொறுப்பாளி என்று தெரியவந்தது.
இதை கோட்டாட்சியர் கவனத்திற்கு மீண்டும் கொண்டு சென்ற நிலையில் சம்பந்தப்பட்ட அதிகாரியை கோட்டாட்சியர் அழைத்து சம்பந்தப்பட்டவர்களுக்கு விசாரணைக்கு ஆஜராகும்படி கடிதம் அனுப்பச் சொன்னார். சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலர் தலையாரி ராஜா ஆஜராகி, அந்த கிராமத்திலே இல்லாத இருவரை இருப்பதாக பொய் கூறியுள்ளார். ஆனால் நடவடிக்கை எடுக்க ஏற்பாடு செய்யாமல் ஏதோ கோட்டாட்சியர் அலுவலகத்தையே தன் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதைப் போல சலித்துக் கொண்டதும் அலட்சியமான போக்கை சபிதா என்ற அதிகாரி கையாண்டதும் நமக்கு அதிர்ச்சியை தந்தது. இது பெரும்பாலான அரசு அலுவலகங்களில் நடக்கும் சாதாரண விஷயம் தான் என்று நம்மால் கடந்து போக முடியவில்லை.
இந்த மெத்தன போக்கை வருவாய் கோட்டாட்சியர் கவனத்திற்கு மீண்டும் கொண்டு சென்ற போது செட்டில்மென்ட் காப்பி, யுடிஆர் போன்ற ஆவணங்கள் ஆ.கருப்பையா பெயரில் இருந்தால் தாங்களுக்கு பட்டா மாறுதல் செய்து தருகிறேன் என வாக்குறுதி அளித்தார். அவர் கேட்ட ஆவணங்களை பல இடங்களில் அலைந்து திரிந்து ஒரு வழியாக வாங்கி வந்து சமர்ப்பித்த போது தனது உதவியாளர் கவியரசன் என்பவரிடம் இந்த புகார் தொடர்பாக பாதிக்கப்பட்டவரின் ஆவணங்கள் முறையாக இருப்பதாகவும் இவருக்கு பட்டா வழங்க ஆவணங்கள் தயார் செய்ய கூறினார்.
இதை ஆமோதித்த உதவியாளர் கவியரசனும் தவறுதலாக பதியப்பட்டிருக்கும் அந்த இரண்டு பெயர்களுக்கும் கடைசியாக ஒருமுறை நேரில் விசாரணைக்கு ஆஜராக அழைக்கிறேன் என்பதை கோட்டாட்சியர் முன்னிலையில் தெரிவித்ததை தொடர்ந்து இன்று வரை எந்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
இதுபற்றி குணசேகரன் கூறும்போது, “ஒவ்வொருமுறை அலுவலகத்திற்கு வரும் போதும் கோட்டாட்சியின் உதவியாளரை பாருங்கள் என அதிகாரிகள் கூறுவார்கள். இதுவரை மூன்று உதவியாளர்கள் இடம் மாறி சென்று விட்டார்கள். தற்போது கவியரசன் என்பவரும் மாறுதலாகி சென்று விட்டார். மீண்டும் மீண்டும் முதலில் இருந்து ஆரம்பிக்கின்றார்கள்” என்று அவர் கூறியது கோட்டாட்சியர் அலுவலகத்தில் பொதுமக்களுக்கு ஏற்படும் அவல நிலையை நமக்கு தெரியப்படுத்துகிறது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் சமீப காலமாக பட்டியல் இனத்தவர்கள் குடிநீர் தொட்டியில் செய்த அட்டூழியம், பதினோராம் வகுப்பு மாணவன் மீது நடந்த கொலை வெறி தாக்குதல் போன்றவை தற்போது மறுக்கப்படும் நீதியினால் அரசு அலுவலகங்களை நாடும் பட்டியலினத்தவர்கள் மீதும் நடத்தப்படுகிறதா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது..
ஒரு கிராமத்தில் இல்லாத இரண்டு பேர்களை கோப்புகளில் இருந்து விசாரணை செய்து கண்டுபிடித்து நீக்குவது அவ்வளவு பெரிய காரியமா? கிராம நிர்வாக அலுவலருக்கு தெரியாமல் ஒரு குடும்பம் அந்த கிராமத்தில் இருக்க முடியுமா?. திறமையான அதிகாரி, சிறந்த அதிகாரி, நேர்மையான அதிகாரி, முன்மாதிரி அதிகாரி என்று வெகுஜன மக்களாலே பிரபல்யமாக அறியப்படும் கோட்டாட்சியர் திரு.முருகேசன் அவர்களை இந்த புகார் மனுவின் பெயரில் பாதிக்கப்பட்டவர் பக்கம் இருக்கும் ஆவணங்கள் உண்மை என்றும் சரி என்றும் ஏற்று கொள்ளும் போதும் பட்டா மாறுதல் நடவடிக்கை எடுக்க விடாமல் தடுப்பது எது? பாதிக்கப்பட்டவரின் சமூக பின்புலமா? அல்லது பாதிக்கப்பட்டவர் சாமானியர் என்ற அலட்சியமா? அல்லது அந்த சொத்தை ஆக்கிரமித்து இருப்பவர்கள் அரசியல் பின்புலம் மற்றும் ஜாதியா? அல்லது வேறு ஏதேனும் அரசியல் உள்ளதா?. என்று பல கோணங்களில் நம்மை சிந்திக்க வைக்கிறது.
விரைவில் இவர் போன்ற சாமானியருக்கு நீதி கிடைக்குமா? கண்டு கொள்வாரா ஆட்சியர்?