தமிழகத்தில் அதிகரித்து வரும் சைபர் கிரைம் பிரபல நிறுவனங்களின் பெயர்களை பயன்படுத்தி குற்ற செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகள். சமீபத்தில் தஞ்சை மாவட்டத்தில் உள்ள ஒரு விவசாயிக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்ட மர்ம நபர் தனது பெயர் பாலா என்றும் சென்னையைச் சேர்ந்த பஜாஜ் பைனான்ஸ் நிறுவனத்தில் இருந்து அழைப்பதாகவும் கூறியவர், அந்த நிறுவனத்தில் கடன் பெற தகுதியை பெற்று உள்ளீர்கள் என்றும் குறைந்த வட்டியாக ஒரு சதவீத வட்டிக்கு கடன் பெற்றுக் கொள்ளலாம் நீங்கள் பெற்றுக் கொள்கிறீர்களா? என்று கேட்டபோது நிதி நெருக்கடி மற்றும் குடும்ப சூழ்நிலை காரணமாக கடன் வாங்க யோசித்துக் கொண்டிருந்த அந்த விவசாயிக்கு ஆசையை தூண்டியது. மேலும் கடன் பெற விரும்பினால் ஆதார் கார்டு வங்கி கணக்கு விவரங்கள் மற்றும் புகைப்படம் போன்றவற்றை குறிப்பிட்ட தொலைபேசி எண்ணிற்கு வாட்ஸ் அப் மூலம் அனுப்பி வைக்கும்படி கூறியுள்ளனர்.
அதைத் தொடர்ந்து பெரிய தொகை குறைந்த வட்டிக்கு கிடைக்கிறது என்று எண்ணிய அந்த விவசாயி தான் கடன் பெற்றுக் கொள்வதாக மர்ம நபரிடம் கூறியுள்ளார். சிறிது நேரத்தில் மற்றொரு அழைப்பு உமா மகேஸ்வரி என்ற பெண் பஜாஜ் பைனான்ஸ் லோன் பிரிவிலிருந்து பேசுவதாகவும், தங்கள் கடன் கேட்டுள்ளதாக தனக்கு வந்த தகவலின் அடிப்படையில் தான் பேசுவதாகவும் கூறிய அந்த பெண் எவ்வளவு ரூபாய் கடன் வேண்டும்? அதை எவ்வாறு திருப்பி செலுத்துவீர்கள்? போன்ற விவரங்களை பெற்றுக் கொண்டதோடு விவசாயினுடைய மாத வருமானம் சேமிப்பு போன்ற நிதிநிலை விவரங்களையும் பெற்றுக் கொண்டு கடன் வேண்டுமென்றால் முன்னர் பஜாஜ் நிறுவனத்தில் இருந்து பேசியவர் கூறியது போல ஆவணங்களை அனுப்பி வைக்குமாறு தெரிவித்துள்ளார்.
அந்த விவசாயியும் அந்த மர்ம நபர்கள் கேட்டது போல அனைத்து ஆவணங்களையும் அனுப்பி வைத்துள்ளார். மறுநாள் காலை 10 மணிக்கு மீண்டும் தொலைபேசியில் தொடர்பு கொண்ட மற்றொரு மர்ம நபர் கடனுக்கான தங்கள் விண்ணப்பம் ஏற்றுக் கொள்ளப்பட்டது என்றும் ரூபாய் 5 லட்சத்திற்கான ஆவண தொகையாக ரூபாய் 5000 அனுப்பும்படியும் கேட்டுள்ளார். தான் கடனுக்காக எந்த விதமான ஆவணமும் தரவில்லையே என்று சந்தேகத்தோடு கேட்ட விவசாயிடம் ஆதார் கார்டு மூலம் தங்களின் அனைத்து விவரங்களும் கிடைக்கப்பெற்றது மேலும் தேவைப்படும் ஆவணங்களை பிறகு பெற்றுக் கொள்வதாக கூறிய அந்த நபர் பணம் அனுப்புவதற்கு உரிய வங்கி கணக்கு எண்ணை வாட்ஸ் அப் மூலம் அனுப்பி வைத்துள்ளார்.
இதே போல் அந்த விவசாயி தனியார் கடன் நிறுவனத்திடம் ரூபாய் 5000 முதலில் கட்டி ஏற்கனவே கடன் வாங்கி உள்ளார் என்பதால் அவருக்கு அந்த ரூபாய் சந்தேகத்தை ஏற்படுத்தவில்லை. ஆகவே மர்ம நபர்கள் கேட்டுக் கொண்டது போலவே ரூபாய் 5 ஆயிரத்தை கொடுக்கப்பட்டிருந்த வங்கி கணக்கில் செலுத்தினார். அதே நாள் மாலை சுமார் மூன்று மணி அளவில் வேறொரு எண்ணில் இருந்து தொடர்பு கொண்ட அதே நபர் தான் பஜாஜ் நிறுவனத்தின் இன்சூரன்ஸ் துறையிலிருந்து பேசுவதாகவும் ரூபாய் 5 லட்சத்திற்கான இன்சூரன்ஸ் தொகை ரூபாய் 18,500 செலுத்த வேண்டும் என்று கூறியுள்ளார்.
வழக்கமாக இன்சூரன்ஸ் தொகை பெறப்படும் கடனில் இருந்து கழிக்கப்பட்டு மீதி தொகையை கடனாக வழங்கப்படும் என்று அறிந்திருந்த அந்த விவசாயி அது பற்றி கேட்டபோது அந்த தொகை அரசு கொடுக்கும் இன்சூரன்ஸ் தொகை என்றும், கடன் ரூபாய் 5 லட்சத்தை கட்டி முடித்தவுடன் அந்த இன்சூரன்ஸ் தொகை மீண்டும் தங்கள் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும் என்றும் கூறியுள்ளார். மேலும் ரூபாய் 5 லட்சத்தை முழுமையாக கட்டி முடிக்கும் முன்னர் ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டால் இன்சூரன்ஸ் மூலம் கடனை பெற்றுக் கொள்வோம் என்றும் தாங்கள் குடும்பத்தை எந்த வகையிலும் தொந்தரவு செய்ய மாட்டோம் என்றும் ஆசை வார்த்தைகள் கூறி நம்பிக்கையை ஏற்படுத்தும் வண்ணம் பேசி உள்ளனர்.
மர்ம நபர்களின் ஆசை வார்த்தையில் சிக்கிய அந்த விவசாயி கொடுக்கப்பட்டிருந்த வங்கி கணக்கில் மீண்டும் ரூபாய் 18,500 செலுத்தினார். சிறிது நேரத்தில் மீண்டும் அதே நபர் தொடர்பு கொண்டு ரூபாய் 5 லட்சத்திற்கான வரி தொகை ரூபாய் 15,000 செலுத்த வேண்டும் என்று கூறியுள்ளார் உடனே பயந்து போன விவசாயி தனக்கு கடனே வேண்டாம் கட்டிய தொகையை மீண்டும் தந்து விடுங்கள் என்று கேட்ட போது முறையாக பதில் அளிக்காத அந்த மர்ம நபர் அழைப்பை துண்டித்ததோடு பணத்தையும் திருப்பித் தரவில்லை.
மொத்தமாக ரூபாய் 23,500 கட்டி ஏமாந்து விட்டது புரிந்து விவசாயி தஞ்சை மாவட்ட கண்காணிப்பாளர் அவர்களிடம் இது தொடர்பாக புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படுமா? மேலும் இது போன்ற குற்றங்கள் தடுக்கப்படுமா? என்ற கேள்விகள் ஒரு புறம் இருந்தாலும் இதுபோன்ற பெரு நிறுவனங்களின் பெயரில் மர்ம நபர்கள் சிலர் கூட்டாக சேர்ந்து கொண்டு தகவல் திருட்டுகளில் ஈடுபட்டு கிராமப்புற விவசாயிகளை குறி வைத்து நூதன முறையில் பண மோசடியில் ஈடுபடுவது கட்டாயமாக தடுக்கப்பட வேண்டும். மக்களிடையே பெருமளவில் விழிப்புணர்ச்சியை மேலும் அதிகப்படுத்தி கொண்டு சேர்க்க வேண்டும் என்பது நமது எதிர்பார்ப்பும் கோரிக்கையுமாக உள்ளது.