போதைப்பொருள் நுண்ணறிவு பிரிவு சி.ஐ.டி-யின் சென்னை பிரிவிற்கு போதைப் பொருட்களின் விற்பனை குறித்து கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க ஒரு சிறப்பு குழு உருவாக்கப்பட்டது. இந்தக் குழு திருவெற்றியூரை சேர்ந்த நீலமேகம் என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 25 கிலோ மெத்தக்குலோனை போதைப் பொருளை கைப்பற்றியது.
மேலும் இதில் தொடர்புடைய வில்லிவாக்கத்தைச் சேர்ந்த சம்சுதீணை கைது செய்து அவரது வீட்டில் இருந்து 68 கிலோ மெத்தக்குலோனை கைப்பற்றியது. கைப்பற்றப்பட்ட போதை பொருட்களின் மதிப்பு இந்தியாவில் தோராயமாக ரூபாய் 23.25 கோடி மற்றும் சர்வதேச மதிப்பு பல மடங்கு ஆகும். மேற்படி சிறப்பு காவல் குழுவினரை மகேஷ் குமார் அகர்வால், இ.கா.ப., காவல்துறை கூடுதல் இயக்குநர், குற்றம் மற்றும் அமலாக்கம், சென்னை. அவர்கள் பாராட்டி பண வெகுமதி அளித்தார்.
சட்ட விரோதமாக போதைப் பொருட்கள் விற்பனை மற்றும் கடத்தலில் ஈடுபடும் நபர்கள் பற்றிய தகவல்களை பொதுமக்கள் கட்டணமில்லா தொலைபேசி எண் 10581 மூலமாகவும், 94984 – 10581 என்ற எண்ணில் வாட்ஸ்அப் குறுந்தகவல் – புகைப்படம் மூலமாகவும் மற்றும் spnibcid@gmail.com என்ற மின்னஞ்சல் மூலமாகவும் தெரிவிக்கலாம்.